கடத்தப்பட்ட பாதிரியார், இலங்கை அகதிகளுக்கும் உதவியவர் -தந்தை
ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட தமிழகத்தின் கிறிஸ்தவப் பாதிரியார் மற்றும் சமூக சேவையாளர் அலெக்சிஸ் பிரேம்குமார் இலங்கை அகதிகளுக்கும் தனது சேவையினை வழங்கியுள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை அருகில் உள்ள வாடிவயல் பகுதியை சேர்ந்தவர் அந்தோணசாமி பிள்ளை.
இவரது மனைவி மரியதங்கம். இவர்கள் 2 பேரும் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்களது மகன்கள் தனிஸ்லாஸ், அலெக்சிஸ் பிரேம்குமார் (வயது 47). தனிஸ்லாஸ் தேவகோட்டை யூனியன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
1967–ம் ஆண்டு பிறந்த பிரேம்குமார் தனது கல்லூரி படிப்புக்கு பிறகு 1984–ம் ஆண்டு முதல் 86–ம் ஆண்டு வரை திண்டுக்கல் பெஸ்கி இல்லத்தில் பயிற்சி பெற்றார்.
சமூக சேவையில் ஆர்வம் கொண்ட இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் ஏற்பட்டபோது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காகவும் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதற்காகவும் மதுரை தொண்டு நிறுவனத்தின் மூலம் அங்கு சென்றார்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனரமைப்பு பணிகள் செய்து வந்தபோது தீவிரவாதிகளால் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதனையும் மீறி அவர் தனது சமூக சேவையை தொடர்ந்து வந்த நிலையில் கடந்த மாதம் 23–ம் திகதி பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார்.
இதுகுறித்த தகவல் திண்டுக்கல்லில் உள்ள பெஸ்கி இல்ல பாதிரியார்களுக்கு தூதரகம் மூலம் தகவல் தரப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட பாதிரியார் பிரேம்குமாரின் தந்தை அந்தோணிசாமி பிள்ளை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த வாடிவயலில் வசித்து வருகிறார்.
இன்று காலை தான் தனது மகன் கடத்தப்பட்ட விவரம் அவருக்கு தெரியவந்தது.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
எனக்கு பிரேம்குமார், ராபர்ட் மனோகரன், ஜான் ஜோசப் ஆகிய மகன்களும், எலிசபெத் ராணி, சகாய செல்வி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். பிரேம்குமார்தான் மூத்த மகன் ஆவார். ராபர்ட் மனோகரன் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஜான் ஜோசப் என்ஜினீயராக உள்ளார்.
பிரேம்குமார் கடந்த 2000–ம் ஆண்டு குரு பட்டம் பெற்றார். அதன் பின்பு அவர் சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார். மேலும் இலங்கை அகதிகளுக்காக உதவிகள் செய்து வந்தார். இதனை தொடர்ந்து சேசு சபை அவரை இயக்குனராக நியமித்தது.
அதன் பின்பு அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இலங்கை அகதிகளுக்காக பாடுபட்டு வந்தார். பின்பு அவர் ஆப்கானிஸ்தான் சென்று புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் பிரேம்குமார் விசேஷ நிகழ்ச்சிக்காக சொந்த ஊர் வந்திருந்தார். பெப்ரவரி 27–ம் திகதி மீண்டும் ஆப்கானிஸ்தான் சென்று விட்டார். இன்று காலைதான் எனது மகன் கடத்தப்பட்ட விவரம் தெரியவந்தது.
மகனை உயிருடன் பத்திரமாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டரை சந்திக்க உள்ளேன். மேலும் கடத்தப்பட்ட எனது மகனை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.
Average Rating