அபுதாபி: ரூ. 80 ஆயிரம் வீட்டு வாடகை தந்தும் கார்களில் தூங்கும் இந்தியர்கள்..
இந்தியாவை சேர்ந்த பலர் அபுதாபி நாட்டில் பல்வேறு விதமான வேலைகளை செய்து காலத்தை ஓட்டி வருகின்றனர்.
இவர்களில் பலர் தங்களது குடும்பத்துடன் இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.
இங்கு கூடம், சமையலறை மற்றும் ஒரேயொரு படுக்கையறை வசதி கொண்ட வீடுகளுக்கு ஆண்டொன்றுக்கு சராசரியாக 60 ஆயிரம் திர்ஹம் வரை (ஒரு திர்ஹம் என்பது இந்திய மதிப்புக்கு சுமார் 16 ரூபாய். அதன்படி, இந்திய மதிப்புக்கு ஒரு மாதம் வாடகை சுமார் 80 ஆயிரம் ரூபாய் ஆகிறது.) வாடகையாக கொட்டிக் கொடுக்கும் இவர்களை வீட்டின் உரிமையாளர்கள் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அபுதாபி விமான நிலையம் அருகே இஸ்லாமிய வங்கி அமைந்துள்ள பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ’ஜர்னி டாய்ஸ் பில்டிங்’ என்ற பெயரில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இந்த வளாகத்தில் 18 இந்தியர்கள் தங்கள் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.
அரபு நாடுகளில் எல்லாம் அறைக்கு அறை தனியாக ‘ஏ.சி.’ இயந்திரங்கள் கிடையாது. சினிமா தியேட்டர்களில் உள்ளது போல் ‘சென்ட்ரல் ஏர் கண்டிஷனிங் சிஸ்ட்டம்’ மட்டுமே உண்டு. இந்த குடியிருப்பில் அந்த சிஸ்டம் பழுதாகி 10 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது.
இது தொடர்பாக அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் தனித்தனியாகவும், ஒன்றாக சேர்ந்தும் வீட்டின் உரிமையாளரிடம் பல தடவை முறையிட்டும், அவர் ‘இதோ.., அதோ..,’ என்று கடந்த 10 நாட்களாக கெடு சொல்லியே காலம் கடத்தி வருகிறார்.
இவரை நம்பி புண்ணியமில்லை என்று முடிவெடுத்த சிலர், பணம் செலவாவதைப் பற்றி கவலைப்படாமல் ஆயிரம் திர்ஹம் முதல் 3 ஆயிரம் திர்ஹம் வரை விலை கொடுத்து, தனியாக ஏ.சி. இயந்திரத்தை வாங்கி வீட்டில் பொருத்திக் கொண்டனர்.
திடீரென்று ஏ.சி.க்கு மட்டும் அவ்வளவு பணத்தை செலவழித்து விட்டால், சொந்த ஊரில் இருக்கும் தங்கைகளின் திருமண செலவுக்கு மாதாமாதம் அனுப்பும் பணம் தடைபட்டு விடுமே.. என்று எண்ணியவர்கள், உச்சகட்ட கோடைக்காலமான இந்த வேளையில், தங்களது குழந்தை, குட்டிகளுடன் காற்றோட்டம் இல்லாத அறைகளில் புழுங்கித் தவிக்கின்றனர்.
இரவு முழுவதும் குழந்தைகள் தூங்க முடியாமல் அவதிப்படுவதால், அவர்களை சமாதானப்படுத்துவதிலேயே விடியற்காலை வரை விழித்திருக்கும் பெற்றோர், மறுநாள் காலை பணியின் போது சுறுசுறுப்பாக செயல்பட முடியாமல் சோர்வடைந்து காணப்படுகின்றனர். அவர்கள் வீட்டு குழந்தைகளின் சருமம் முழுவதும் வியர்க்குரு மற்றும் நகக் கீறல்களால் கன்றிப்போய் காணப்படுகிறது.
இவர்களில் சிலர் காரில் உள்ள ஏ.சி.யை ஓடவிட்டபடி, சாலைகளில் படுத்து உறங்கும் காட்சியை அபுதாபியில் இருந்து வெளியாகும் சிற்றிதழ்கள் படம் பிடித்து, செய்தியாக வெளியிட்டுள்ளன.
Average Rating