பாலியல் உறவுக்கு வாய்ப்பு கிடைக்காததால், பெண்களை கொல்ல திட்டமிட்டிருந்தவன்..
அமெரிக்காவில் ஹொலிவூட் உதவி இயக்குநர் ஒருவரின் மகனான பல்கலைக்கழக மாணவன் ஒருவன் 2 மாணவிகளையும் 4 மாணவர்களையும் கத்தியால் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும் கொன்றுள்ளான். அதுவும் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட யுவதிகள் யாரும் சம்மதிக்காததால் இக்கொலைகளுக்கு அவன் திட்டமிட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
22 வயதான எலியட் ரொட்ஜர் என்பவரே மேற்படி இளைஞனாவான். அவனின் தந்தை பீட்டர் ரொட்ஜர் ஹொலிவூட்டில் பிரபலமான நபர்களில் ஒருவர். ஹொலிவூட்டின் ‘ஹங்கர் கேம்ஸ்’ திரைப்பட வரிசையில் 2012 ஆம் ஆண்டு வெளியான முதலாவது ஹங்கர் கேம்ஸ் படத்திலும் உதவி இயக்குநராக பீட்டர் ரொட்ஜர் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
ஆடம்பர கார்கள், முதல்வகுப்பு பயணங்கள், ஆடம்பரமாக வாழ்ந்தவன் எலியட் ரொட்ஜர். ஹங்கர் கேம்ஸ் வெளியீட்டு விழாவில் ஹொலிவூட் சுப்பர் ஸ்டார் சில்வெஸ்டர் ஸ்டாலோனுக்கு அருகில் தனது தந்தையுடன் தான் காணப்படும் புகைப்படங்களையும் எலியட் ரொட்ஜர் வெளியிட்டிருந்தான். அந்தளவு செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவன் எலியட்.
ஆனால், தனக்கு 22 வயதாகியும் பாலியல் உறவில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் தான் அணுகிய பெண்கள் அனைவரும் தன்னை நிராகரித்ததாகவும் இணையத்தில் வெளியிட்ட வீடியோவொன்றில் எலியட் ரொட்ஜர்ஸ் தெரிவித்திருந்தான்.
தான் இன்னும் கன்னித்தன்மையுடன் இருப்பதால் வெறுப்புற்ற அவன், பெண்கள் மீது கடும் வெறுப்புற்ற நிலையில் பெண்கள், தனது அறை சகாக்கள் மற்றும் உறவினர்களை கொல்வதற்கு திட்டமிட்டிருந்தான். இது தொடர்பாக அவன் எழுதிவைத்த 137 பக்க ஆவணங்கள் தற்போது அம்பலமாகியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது கொலைவெறித் திட்டத்தை அரங்கேற்ற அவன் தீர்மானித்தான்.
கல்லூரி மாணவிகள் தங்கியிருந்த விடுதியொன்றுக்குள் புகுந்துஅங்கிருந்த யுவதிகளை படுகொலை செய்வதே திட்டமாக இருந்தது. அதற்கு முதல் ததனது அறையில் வசிக்கும் இருவரை ரொட்ஜர் கத்தியால் குத்திக்கொன்றான். செங் யுவான், (20), வெய்ஹன் வாங் (20) ஆகிய இரு மாணவர்களே இவர்களாவர். பின்னர் அதே கட்டத்தில் வசிக்கும் ஜோர்ஜ் சென் (19) எனும் மாணவரை ரொட்ஜர் குத்திக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்பின் தனது கறுப்பு நிற பி.எம்.டபிள்யூ காரை எடுத்துக்கொண்டு விரைந்த எலியட் ரொட்ஜர் வீடொன்றுக்குச் சென்று கதவை தட்டினான். வீட்டிலிருந்து எவரும் பதிலளிக்காத நிலையில், அவ்வீட்டுக்கு வெளியே இருந்த மூவர்மீது ரொட்ஜர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தான். அச்சம்பவத்தில் கெத்தரின் கூப்பர் (22), வெரோனிக்கா வெய்ஸ் (19) ஆகிய இரு யுவதிகள் உயிரிழந்தனர்.
பின்னர் தனது காரில் மற்றொரு இடத்துக்குச் சென்ற ரொட்ஜர் விதியில் சென்றுகொண்டிருந்த ஒரு இளைஞரை சுட்டுக்கொன்றான். அச்சம்பவத்தில் உயிரிழந்தவர் கிறிஸ்டோபர் மைக்கல் மார்ட்டினஸ் (2) என அடையாளம் காணப்பட்டார்.
ரொட்ஜரினால் கொல்லப்பட்ட அனைவருமே பல்கலைக்கழக மாணவ மாணவிகளாவர்.
அதன்பின்னரும் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த எலியட் ரொட்ஜர் கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தமை கண்காணிப்புக் கெமராக்களில் பதிவாகியுள்ளது.
அதேவேளை ரொட்ஜரின் அட்டகாசம் குறித்து அறிந்த பொலிஸார் ரொட்ஜரை துரத்திச் சென்றனர். பொலிஸாருக்கும் ரொட்ஜருக்கும் இடையில் துப்பாக்கிப்பிரயோகங்களும் இடம்பெற்றன. ரொட்ஜரின் இடுப்பில் காயம் ஏற்பட்டது. அவனின் கார் வீதியில் சென்றுகொண்டிருந்த சைக்கிளொன்றின் மீது மோதியது.
பின்னர் எலியட் ரொட்ஜர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டான். அவன் தனக்குத் தானே தலையில் சுட்டுக்கொண்டு உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
ரொஜரிடமிருந்து 3 துப்பாக்கிகள் சுமார் 400 தோட்டாக்கள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டன. ரொட்ஜரை பொலிஸார் துரத்திச் சென்றமை மற்றும் அவனுடன் மோதலில் ஈடுபட்டதன் மூலம் மேலும் பலரை ரொட்ஜர் சுட்டுக்கொல்வது தடுக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரிகள் கருதுகின்றனர்.
தான் சீனாவை சேர்ந்த தாய் ஒருவருக்கும் பிரித்தானிய தந்தைக்கும் மகனாக இங்கிலாந்தில் பிறந்ததாக இணையத்தளங்களில் எலியட் ரொட்ஜர் தெரிவித்திருந்தான். தனக்கு 5 வயதானபோது அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகிலுள்ள வூட்லட் ஹில்ஸ் நகருக்கு தனது குடும்பத்தினர் இடம்பெயர்ந்ததாகவும் இரு வருடங்களின் பின்னர் தனது பெற்றோர் விவாகரத்து செய்ததாகவும் அது, தனது வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியதாகவும் எலியட் ரொட்ஜர் குறிப்பிட்டுள்ளான்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சம்பவங்களுக்கு முன்னர் ஏற்கனெவே இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக 3 தடவை எலியட் ரொட்ஜரை பொலிஸார் விசாரித்திருந்ததாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜுலை மாதம் கல்லூரி விருந்து நிகழ்ச்சியின்போது நடத்திய தாக்குதல் தொடர்பாக விசாரிக்கப்பட்டிருந்தான். கடந்த ஜனவரி மாதம் தனது அறையிலுள்ள மாணவனின் 22 டொலர் பெறுமதியான மெழுகுதிரிகளை திருடியதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த மாதம் 30 ஆம் திகதி ரொட்ஜர் குறித்து கவலை கொண்ட உறவினர் ஒருவரின் முறைப்பாடு தொடர்பாக அவனை விசாரிப்பதற்கு அவன் தங்கியிருந்த அறைக்கு பொலிஸார் சென்றிருந்தனர். பொலிஸாரினால் உறவினர் கூறப்பட்டவர் எலியட் ரொட்ஜரின் தாய் என நம்பப்படுகிறார்).
எலியட் ரொட்ஜரை விசாரித்த பொலிஸ் அதிகாரிகள் அவன் கூச்ச சுபாவமுள்ள, சாதுவான, ஆனால் நன்றாக பேசும் ஒரு இளைஞனாக அவனை குறிப்பிட்டுள்ளனர். தனக்கு சமூக வாழ்வில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் கூறிய எலியட் ரொட்ஜர். சாந்த பார்பரா சிட்டி கல்லூரியிலிருந்து விலக விரும்புவதாகவும் கூறினான். அவனுக்கு பொலிஸ் அதிகாரிகள் அறிவுரை கூறியதுடன் உதவிகள் பெறக்கூடிய இடங்கள் குறித்த தகவல்களையும் வழங்கிவிட்டு திரும்பினர்.
ஆனால், அவ்வேளையில் எலியட் ரொட்ஜர் இணையத்தளங்களில் வெளியிட்டிருந்த தற்கொலை மற்றும் வன்முறை குறித்து அச்சுறுத்தும் வீடியோக்களை பொலிஸார் பார்வையிடவில்லை.
இத்துப்பாக்கிப் பிரயோக வன்முறைகள் இடம்பெறும் வரை மேற்படி வீடியோக்கள் குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என பொலிஸார் கூறுகின்றனர்.
எலியட்டுககு உளவியல் பாதிப்பொன்று இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தனது மகனின் நடவடிக்கையினால் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ள பீட்டர் ரொட்ஜர், தான் தாங்க முடியாத வலியில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உயிரிந்த மாணவர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் மார்ட்டினஸ் தனது ஒரே பிள்ளை என அவரின் தந்தை ரிச்சர்ட் மார்ட்டினஸ் தெரிவித்துள்ளார். இனிமேல் இப்படியான சம்பவங்களை தடுப்பதற்காக அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என ரிச்சர்ட் மார்ட்டினஸ் கண்ணீருடன் வலியுறுத்தியுள்ளார்.
Average Rating