வெளிநாடுகளில் விடுதலை புலிகள், மற்றும் இயக்க தொடர்பாளர்கள் கைது பின்னணி இதோ..
வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள், மற்றும் வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் சார்பான நடவடிக்கைகள், பிரசாரங்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கைகளில் மும்மரமாக இறங்கியுள்ளது, இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவும், உளவுத்துறையும்.
கடந்த சில தினங்களில், சுமார் 15 பேர் வரை ஆசிய நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலர், கண்காணிப்பு வளையத்தில் உள்ளதாகவும் தகவல் உள்ளது.
பெயர் குறிப்பிடப்படாத தென் கிழக்கு ஆசிய நாடு ஒன்றில் கைது செய்யப்பட்ட இருவர், அந்த நாட்டில் இருந்து மலேசியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மலேசியாவில் இருந்து இலங்கை உளவுத்துறை அதிகாரிகள் அவர்களை கொழும்பு கொண்டு செல்ல சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மலேசியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கைதி பரிமாற்ற ஒப்பந்தம் அமலில் உள்ளதால், மற்ற ஆசிய நாடுகள் சிலவற்றில் கைது செய்யப்படும் நபர்கள் முதலில் மலேசியா கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கொழும்பு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
நெடியவன் படையணி முக்கிய உறுப்பினரான நந்தகோபன், ஈரானின் தெஹ்ரான் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, அங்கிருந்து மலேசியா கொண்டு செல்லப்பட்ட பின்னரே கொழும்பு கொண்டு செல்லப்பட்டதும், இந்த காரணத்துக்காகதான்.
கடந்த 15-ம் தேதி மலேசியாவில் கைது செய்யப்பட்ட 3 பேர், அங்கிருந்து கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இவர்கள் விடுதலை புலிகளின் விமானப்படை (வான்புலிகள்) பிரிவைச் சேர்ந்த உஷாந்தன் மற்றும் உளவுத்துறையை சேர்ந்த அன்பரசன், புலிகளின் குரல் வானொலியில் பணிபுரிந்த கிருபா என்ற விபரங்கள் மலேசிய மீடியாக்களில் வெளியாகியிருந்தது.
தற்போது கொழும்பு கொண்டுவரப்பட்ட இவர்களது நிஜ அடையாளங்கள் தற்போது தெரியவந்துள்ளது.
இலங்கை போலீஸ் செய்தி தொடர்பாளர் அஜித் ரோஹன, “எமது அதிகாரிகள் கோலாலம்பூர் சென்று, மூன்று பேரை கொழும்பு கொண்டுவந்து உள்ளார்கள் (மேலே போட்டோ பார்க்கவும்).
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் நிஜ பெயர், சுந்தரலிங்கம் ராஜா உஷாந்தன். விடுதலைப் புலிகள் மத்தியில் இவர் முல்லைச் செல்வன் என அறியப்பட்டவர். வான்புலிகள் பிரிவைச் சேர்ந்தவர்.
இவரது பெயரில் சர்வதேச போலீஸ் இன்டர்போலில் இலங்கை சார்பில் ‘ரெட் அலர்ட்’ உள்ளது. இன்டர்போல், ஓப்பின் வாரண்ட்டும் பிறப்பித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இரண்டாவது நபரின் நிஜ பெயர், மகாதேவன் கிருபாகரன். கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து மலேசியாவில் தங்கியிருந்த இவர், விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளில், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வந்தவர்.
மூன்றாவது நபர், செல்வதுரை கிருபானந்தன். இவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரசார நடவடிக்கைகள், மற்றும் ஆதரவு திரட்டும் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்” என்கிறார்.
எமக்கு கிடைத்த தகவல்களின்படி, விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய சிலரை கைது செய்வது தொடர்பாக இரு ஐரோப்பிய நாடுகளும் தயாராக உள்ளதாக தெரிகிறது.
குறிப்பிட்ட நபர்களின் பெயர்களில் இன்டர்போல் வாரண்ட் இருந்தால் மட்டுமே அவர்களை கைது செய்ய முடியும் என இரு ஐரோப்பிய நாடுகளும் தெரிவித்துள்ளதாகவும், அறிய முடிகிறது.
இதையடுத்து, ஏற்கனவே இன்டர்போல் பட்டியலில் உள்ள சிலருடன், வேறு சிலரது பெயர்களையும் இன்டர்போலில் பதிவு செய்ய இலங்கையில் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, மாஜிட்ரேட் ஆர்டர் பெற்றுக்கொள்ளும் பணிகள் நடக்கின்றன.
இலங்கை அரசு, ஐ.நா.வின் பயங்கரவாத தடுப்பு சட்டப்பிரிவு 1373-ல் 16 அமைப்புகளையும், 424 தனி நபர்களையும் பதிவு செய்துள்ளது. அது வெறும் அரசியல் ரீதியான பதிவு. அந்த நபர்கள் வசிக்கும் நாடுகள், அந்த தடையை ஏற்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
ஆனால், அதே 424 நபர்களின் பெயர்களில் இன்டர்போல் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டால், கதை தலைகீழாக மாறிவிடும். காரணம், அது சர்வதேச கிரிமினல் சட்டத்துக்குள் வந்துவிடும்.
அந்த நபர்கள் வசிக்கும் நாடுகளே தொடர்புபடாமல், சர்வதேச போலீஸ் நேரடியாக ஆக்ஷன் எடுக்கவும் முடியும்.
குறிப்பிட்ட நபரை கைது செய்யவுள்ளோம் என அந்த நாட்டு காவல்துறைக்கு, இன்டர்போல் தெரிவித்தாலே போதுமானது.
எமக்கு கிடைத்த மற்றொரு தகவலின்படி, மேலும் சுமார் 2400 பேர் கொண்ட பட்டியல் ஒன்று கொழும்புவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் இருந்து முதல் கட்டமாக சுமார் 300 பேர், ஐ.நா. பயங்கரவாத சட்டப்பிரிவு 1373-ன் கீழ் பதிவு செய்யப்படலாம்.
ஐ.நா.வின் 1373-ம் இலக்க சட்டமூலம் தொடர்பாக இலங்கை பிரதிநிதியாக, பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷே உள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டுசெல்லப்பட்ட மூவரில் ஒருவரிடம் இருந்து, வெளிநாடுகளில் இருந்து இயங்கும் விடுதலைப் புலிகள் ஆதரவு மீடியாக்கள் தொடர்பான ஆவணங்கள், பிரசார கட்டுரைகள், மீடியா உபகரணங்கள், கம்ப்யூட்டர்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
அந்தப் பொருட்களும், இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம், மலேசியா அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டு, கொழும்பு போய் சேர்ந்துள்ளன.
Average Rating