(PHOTOS) கிளிநொச்சியில் செஞ்சோலை சிறுவர் இல்ல, பிறந்தநாள் கொண்டாட்டமும், மாணவர் மன்ற நிகழ்வுகளும்..!
கிளிநொச்சியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இன்று பிற்பகல் சிறுவர்கள் மத்தியில் இம்மாதத்திற்குரிய பிறந்தநாள் கொண்டாட்டமும், மாணவர் மன்ற நிகழ்வுகளும் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் NERDO நிறுவனத்தின் செயலரும், செஞ்சோலை இல்லத்தின் தந்தையுமான திரு.பத்மநாதன், கனடாவிலிருந்து வந்திருந்த திரு.இன்பநாயகம், செஞ்சோலை முகாமைத்துவசபை அங்கத்தவர்கள், செஞ்சோலை ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
முதலில் சிறுவர்களுக்கான பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றது. இம்மாதம் நான்கு சிறுமிகள் தமது பிறந்தநாளை கொண்டாடினர். ஏனையோர் பிறந்தநாள் பாடலை பாட இல்லத்தின் தந்தையுடன் சிறுமிகள் கேக் வெட்டி தமது பிறந்தநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.
தொடர்ந்து கடவுள் வாழ்த்துடன் செஞ்சோலை மாணவர் மன்ற நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதலில் சிறுமிகள் இருவரின் வரவேற்பு நடனம் பாடலுக்கேற்ற அபிநயத்துடன் அனைவரையும் கவர்ந்தது.
அடுத்து இல்லத்தின் தந்தையான திரு.பத்மநாதன் அவர்கள் ஆசியுரை வழங்கினார். தனது உரையில் அனைவரையும் வரவேற்றதுடன் மாணவர்களின் முன்னேற்றத்தை அருகிலிருந்து பார்த்து மகிழ்ச்சி அடைவதுடன் சிறுவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
இவர்களை இந்த சமூகத்தின் நற்பிரஜைகளாக உருவாக்குவேன். எனது நண்பர்கள், கருணை உள்ளம் கொண்டவர்களின் ஆதரவுடன் செஞ்சோலை முகாமைத்துவசபை தலைவராக எனதுகடமையை சிறப்பாக நிறைவேற்றுவேன் என எடுத்துரைத்தார்.
மாணவச் செல்வங்களே! நான் மீண்டும் மீண்டும் கேட்பது உங்களுக்கு எந்தவித கவலையும் வேண்டாம் ஆண்டவனால் தரப்பட்ட இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி திறமையாகப் படியுங்கள். உங்களது ஆக்கங்கள், திறமைகளுடன் சிறகடித்து பறவுங்கள். நாம் அன்பு இல்லத்தை ஆரம்பிக்கும்போது கையில் ஒரு ரூபாய் இல்லை நம்பைக்கையோடு ஆரம்பித்தோம்.
இன்று பாரதி, செஞ்சோலை சிறுவர் இல்லங்களாக வளர்ந்து நிற்கிறது. இந்த வெற்றிக்குப் பின்னால் நீங்கள்தான் இருக்கின்றீர்கள். மாணவர்களே, உங்களுடைய ஒவ்வொருநாள் வளர்ச்சியும்தான் எங்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றது.
தாய்க்குத் தாயாக, அக்காவிற்கு அக்காவாக இங்கு உங்களுடன் இரவு பகலாக தங்களை அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் செஞ்சோலை குடும்பத்திற்கு எனது நன்றிகளை தெரிவிக்கிறேன் என தனது உரையை நிறைவு செய்தார்.
அடுத்து பாடல் ஒன்றை சிறுமி சுதர்சனா வழங்கினார். தொடர்ந்து தவறஞ்சினி சிறப்பான கவிதை ஒன்றை வழங்கி அனைவரையும் கவர்ந்தார். அடுத்து சிறுமிகளின் பாடலுக்கான அபிநயநடனம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.
அடுத்து கனடாவிலிருந்து வந்திருந்த திரு.இன்பநாயகம் அவர்கள் தனது கருத்துரையில் எமது எதிர்கால சமூகத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு இந்த மாணவர்களின் கைகளிலேயே உள்ளது.
மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த மாணவர் மன்றமானது அடிக்கடி இடம்பெறவேண்டும் என்றும், மாணவர்களின் வளர்ச்சி மிகவும் பாராட்டத்தக்கதாக உள்ளதாகவும், மிகச் சிறியவர்களுக்கு பெரியவர்கள் முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்றும் கூறியமர்ந்தார்.
அடுத்து சிறுமிகளின் செஞ்சோலை தொடர்பான குழுப்பாடல் சிறப்பாக இருந்தது. சிறிமிகள் மத்தியில் நடைபெற்ற பொதுஅறிவுப்போட்டி நிகழ்வு பாராட்டும்படி அமைந்தது. அடுத்து சிறுமிகளின் நடனம் நேர்த்தியானதாக அமைந்திருந்தது. அடுத்து சிறுமி இசைச்செல்வியின் பாடல் இடம்பெற்றது.
அடுத்து பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற கோட்ட, வலய மட்ட மெய்வல்லுனர் போட்டிகளின் சிறப்பாக செயற்பட்ட மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.
கோட்ட மட்டத்தில்
சி.நிலோஜினி – முதலாம் இடம் – உயரம் பாய்தல்
வலய மட்டத்தில்
சி.நிலோஜினி – இரண்டாம் இடம் – உயரம் பாய்தல்
பா.குமுதகலா – மூன்றாம் இடம் – ஓட்டம்
சு.அஜித்தா – முதலாம் இடம் – தட்டெறிதல்
இதில் சு.அஜித்தா, சி.நிலோஜினி ஆகியோர் மாகாண மட்டத்திலாக கோட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து முகாமைத்துவசபை செயலாளர் திரு.சுப்பிரமணியம் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றது.
Average Rating