அமலாபால் சொல்லும் காதல் ரகசியங்கள்..
நடிகை அமலாபாலும், டைரக்டர் விஜய்யும் கல்யாணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட காதல், சினிமாவைவிட விறுவிறுப்பானது.
அமலா, விஜய்யின் காதலை அங்கீகரித்த இடம் எது தெரியுமா?
இருவருக்குள்ளும் காதல் பற்றிக் கொண்ட நேரத்தில், அதில் இறுதி முடிவெடுக்க முடியாமல் அமலா தவித்திருக்கிறார்.
‘இன்னும் சினிமாவில் முன்னேறவேண்டும் என்ற ஆசை ஒருபுறம்– அன்பான காதல் மறுபுறம்! இரண்டில் எதை தேர்ந்தெடுப்பது?’ என்ற குழப்பம் அவரிடம் ஏற்பட்டபோது உலகின் காதல் தலைநகரமான பாரீசுக்கு கிளம்பிபோய்விட்டார்.
அங்கிருந்து அப்பா, அம்மாவோடு ரோம் கிளம்பினார். அங்குதான் அந்த அதிசயம். தேவாலயம் ஒன்றின் அருகில் உயரமான பகுதி ஒன்றில் அமலாவை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் விஜய் நின்றிருந்திருக்கிறார். அப்போதே காதலுக்கு ‘ஓகே’ சொல்லிவிட்டது அவர் மனது.
சரி.. இனி அவர்கள் இருவருமே காதல் ரகசியங்களை சொல்லட்டும்!
விஜய்: மைனா படத்தில் தாவணி உடுத்தி, முடி நிறைய எண்ணெய்யுடன் தோன்றிய அமலாவை பார்த்தபோதே எனக்கு பிடித்துப்போய்விட்டது.
அமலாபால்: அவரது மதராசபட்டணம் என்னை ரொம்பவும் ஈர்த்தது. அப்போதே நான் அவரோடு பேசினேன். அதன் பிறகு தெய்வதிருமகனில் நடித்தேன். தொடர்ந்து நாங்கள் நெருக்கமான நண்பர்களாகிவிட்டோம். எங்கள் நட்பை பார்த்த நடிகர் விக்ரம் ‘உங்கள் இருவருக்குள்ளும் காதல் வந்துவிட்டது. நீங்கள் திருமணம் செய்துகொள்வீர்கள்’ என்றார்.
பின்பு தலைவா படத்தில் மீண்டும் இணைந்தோம். சிட்னியில் ஒரு மாதத்திற்கு மேலாக படப்பிடிப்பு நடந்தது. கடற்கரை அருகில் உள்ள ரிசார்ட்டில் இருந்து தினமும் அதிகாலையில் வாக்கிங்குக்கு கிளம்புவோம்.
அப்போது எங்களை பார்த்த பிருந்தா மாஸ்டருக்கு நாங்கள் காதலர்களாகிவிட்டோமோ என்ற சந்தேகம் இருந்தது. அதில் ஒரு கயிறு நடனம் இருந்தது. ஒரு கையால் தொங்கி நிற்கும் காட்சி ஒன்று அதில் உண்டு.
நான் அதனை நன்றாக செய்தபோதும், அதைவிட சிறப்பாக இருக்கவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டபோது, நான் கயிற்றில் இருந்து கீழே விழுந்துவிட்டேன்.
அதைப் பார்த்து தாங்கிக்கொள்ள முடியாமல் விஜய் அழுதுவிட்டார். அப்போதே எங்கள் காதல், செட்டில் இருந்த அனைவருக்கும் தெரிந்துவிட்டது.
விஜய்: நட்பு, காதலாகுவது நல்லது. ஏன்என்றால் நட்பாக இருக்கும்போது நாம் கள்ளத்தனம் இல்லாமல் பழகுவோம். அப்போது இருவருடைய பிளஸ், மைனஸ் தெரிந்து விடும்.
அமலாபால்: எங்கள் நட்பு திருமணத்தில் முடியும் என்பது எனக்கு தெரியும். ஆனாலும் நான் இன்னும் மூன்று வருடங்கள் நடிக்க விரும்பினேன்.
விஜய்யும், ‘நீ நல்ல நடிகை. மூன்று வருடங்கள் நடித்தால் புகழ் அடைந்துவிடுவாய்’ என்றார். ஆனால் அவரது வீட்டில் திருமணத்திற்கு வற்புறுத்திக்கொண்டிருந்தார்கள்.
எனக்காக அவர் இனிமேலும் காத்திருக்க முடியாது என்ற சூழ்நிலை உருவானபோதுதான் நான் குழப்பத்தோடு ரோம் சென்றேன். திருமணத்திற்கு பிறகும் நான் நடிப்பேன்.
இரண்டு மலையாள சினிமாக் களில் நடிக்க இப்போது ஒப்புக்கொண்டிருக்கிறேன். ஆனால் கிடைக்கிற படங்களில் எல்லாம் நடிக்கமாட்டேன்.
விஜய்: பிரபலமான நடிகை இவ்வளவு இளம் வயதிலே திருமணம் செய்துகொள்வது சரிதானா? என்று நான் அமலாவிடம் கேட்டேன். ‘எனக்கு சினிமாவைவிட வாழ்க்கை முக்கியம்’ என்றார். அந்த வார்த்தை என் இதயத்தை தொட்டது.
அமலாபால்: நான் வாழ்க்கையில் எடுத்த மிக சிறந்த முடிவு, எங்கள் திருமணம். விஜய்யை சந்திப்பதற்கு முன்பு எனக்கு திருமணத்தை பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்தது.
கடவுள் எனக்கு இளம் வயதிலே பல்வேறு வாய்ப்புகளை தந்திருக்கிறார். கடவுள் தந்த நல்ல திருமண வாய்ப்பையும் நான் பயன்படுத்திக்கொண்டேன்.
சிலிர்க்கிறார், அமலாபால்!
Average Rating