எமது மகளின் சாவுக்கு இரு பாதிரிமாரே காரணம்; கொன்சலிற்றாவின் பெற்றோர் வாக்குமூலம்
யாழ். குருநகர்ப் பகுதியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி ஜெரோமி கொன்சலிற்றாவின் மரணம் தொடர்பான வழக்கு எதிர்வரும் மாதம் 12ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
யாழ். நீதிமன்ற நீதவான் சிவகுமார் தலைமையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கினை விசாரணை செய்த நீதவான் தந்தை மற்றும் தாயாரிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொண்டதுடன் வழக்கினை மே மாதம் 12ஆம் திகதிவரை ஒத்திவைத்தார்.
கடந்த 13ஆம் திகதி வீட்டில் இருந்து காணாமல் போன குறித்த யுவதி மறுநாள் வருடப்பிறப்பு அன்று பெரியகோயிலுக்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் உயிரிழந்த யுவதியின் பெற்றோர் யாழ் நீதிமன்றில் சாட்சியமளிக்கையில் தமது மகளின் சாவுக்கு யாழ். ஆயர் இல்லத்தைச் சேர்ந்த இரண்டு பாதிரிமார்களே காரணம் என தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு பாதிரியார்களிடமும் ஏற்கனவே விசாரணை மேற்கொண்டு அவர்களிடம் இருந்தும் வாக்குமூலங்கள் பெற்றிருந்தனர். விசாரணையின் போது தம்மீதான குற்றச்சாட்டுக்களை இருவரும் முற்றாக மறுத்திருந்தனர்.
இந்நிலையில் யுவதியின் பெற்றோர்களினால் இன்றைய தினம் நீதிமன்றில் அளிக்கப்பட்ட சாட்சியத்தின் போதும் தமது மகளின் மரணத்திற்கு குறித்த இரு பாதிரிமார்களும் தான் காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி உயிரிழந்த யுவதியின் தாயார் தனது சாட்சியத்தின்போது,
பயமாய் இருக்குது பாதர் எனக்கு குளிசை வாங்கி தாங்கோ என எனது மகள் தொலைபேசியில் கதைத்துக்கொண்டு இருந்ததை நான் என் காதால் கேட்டேன்.
உடனே நான் மகளிடம் தொலைபேசியை பறித்துவிட்டு என்ன நடந்தது என்று கேட்டபோது,. பெரியகோயிலில் இருக்கின்ற 2பாதர்மார் என்னை வற்புறுத்துகின்றனர்.
அவர்கள் இருவரும் என்னிடம் ஐ லவ் யூ சொன்னார்கள். எனக்கு இருவரும் முத்தம் தந்தனர். இவற்றை வெளியில் சொல்லக் கூடாது. சொன்னால் பின்னர் தெரியும் என்று இருவரில் ஒரு பாதர் பயமுறுத்தி உள்ளார் என எனது மகள் என்னிடம் தெரிவித்தார்.
அப்போது எனக்கு இலக்கம் பார்க்கத் தெரியாது. பாதருடனேயே பேசியதாக மகள் கூறினார். அப்போது அவரிடம் இருந்து குறித்த 2 பாதிரிமார்களுடைய இலக்கத்தையும் நான் பெற்றிருந்தேன்.
மனம் சோர்வான நிலையில் சாப்பிடுவது குறைவாகவே எனது மகள் இருந்து வந்தார். எனினும் நாங்களோ மகளோ தற்போது பெரியகோயிலுக்கு போவது இல்லை. பக்கத்தில் உள்ள கோயிலுக்கே போய் வருகின்றோம்.
சம்பவநாள் நாங்கள் வீட்டில் இல்லை. பூங்காவிற்கு போவதாக தம்பியாரிடம் கூறிவிட்டு மகள் சென்றுள்ளார். ஆனால் வீட்டுக்கு திரும்பவில்லை. எல்லா இடமும் தேடியும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
அன்று இரவு குறித்த பாதிரிமார்களுக்கு தொலைபேசி எடுத்தேன். அதில் ஒருவர் இலக்கம் தவறானது என்று கூறி தொடர்பை துண்டித்தார். மற்றையவர் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருப்பதாகவும் பின்னர் எடுப்பதாகவும் கூறி தொடர்பை துண்டித்து கொண்டார்.
மறுநாள் காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்தோம். அன்று மதியம் அயலில் உள்ளவர்கள் கிணற்றுக்குள் சடலம் இருப்பதைக் கூறினர். உடனேயே சென்று பார்த்தோம் அது மகளின் சடலம் என அடையாளம் கண்டு கொண்டோம்.
போன் கதைத்ததில் இருந்து பார்த்தால் குறித்த 2 பாதர்மீதும் தான் எமக்கு சந்தேகம். அவர்கள் இதுவரை எம்முடன் எவ்விதமான தொடர்பையும் ஏற்படுத்தவில்லை. எனினும் இது குறித்து ஆயர் இல்லத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று தாயார் சாட்;சியமளித்தார்.
குறித்த யுவதியின் தந்தையார் தனது சாட்சியத்தின்போது,
என்ன நடந்தது என்று தெரியேல்ல கொலை என்றே நாம் நினைக்கிறோம். எனக்கு ஐந்து பிள்ளைகள் அவர்களில் ஜெரோமி கொன்சலிற்றா எனது இரண்டாவது மகள். இவரும் அடப்பன் வீதியில் எங்களுடனேயே வாழ்ந்து வந்தவர்.
கடந்த 13ஆம் திகதி பிற்பகல் 5 மணியளவில் வீட்டில் இருந்து பூங்காவிற்கு செல்வதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. நாம் இரவு 12மணி வரையும் தேடினோம். மகள் தொடர்பான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
மறுநாள் வீதியில் சென்றவர்கள் பெரியகோயிலுக்கு அருகில் உள்ள கிணற்றுக்குள் பெண் ஒருவரது சடலம் இருப்பதாக தெரிவித்தனர். உடனடியாகச் சென்று பார்த்த போது குறித்த சடலம் எனது மகள் என்று அடையாளம் கண்டுகொண்டேன்.
எங்கள் வீட்டில் இருந்து குறித்த கிணறு 100 மீற்றர் தூரம். அத்துடன் பாதுகாப்பாக மூடி மதில் கட்டப்பட்டுள்ள கிணறாகவும் இருக்கின்றது.
எனது மகளுக்கு 2பாதிரிமார்களால் பாலியல் வற்புறுத்தல் இருந்தமையினால் அவர் மனஉளைச்சலிலேயே இருந்தார்.
‘என்ன நடந்தது என்று தெரியேல்ல கொலை என்றே நாம் நினைக்கிறோம்’. ‘எனது மகள் இறந்ததிற்கு பெரியகோயிலில் இருக்கும் 2 பாதர்மார் தான் காரணம் என சந்தேகம்’ என்றார
இந்நிலையில் உயிரிழந்த யுவதி பயன்படுத்தியதாகக் கூறப்படும் கையடக்கத் தொலைபேசியினை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன், மேலதிக வழக்கு விசாரணை எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதேவேளை கொன்சலிற்றாவின் இறப்பிற்கு காரணம் என பெற்றோர்களால் கூறப்பட்ட இரண்டு பாதிரிமார்களையும் கைதுசெய்யும் நடவடிக்கையில் யாழ் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வேளையில் அந்த பாதிரிமார் இருவரும் தற்போது தலைமறைவு ஆகியுள்ளதாக தெரியவருகின்றது.
எனவே அவர்களை உடன் கைது செய்யும் நடவடிக்கையில் யாழ்ப்பாணப் பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Average Rating