விஜயகாந்த்துக்கு அல்வா கொடுத்து விட்டார் வைகோ: பண்ருட்டி ராமச்சந்திரன்
மதுரை பாராளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து பண்ருட்டி ராமச்சந்திரன் மதுரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். மேயர் ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், சுந்தர்ராஜன், கதிரவன், எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது:–
மதுரை நகரம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமான நகரமாகும். உலகத்தமிழ் மாநாட்டை இங்கே நடத்தி எம்.ஜி.ஆர். மதுரை நகருக்கு பல பெருமைகளை சேர்த்தார். புரட்சித்தலைவியும், மதுரையை வளமான பகுதியாக மாற்றி வருகிறார். அ.தி.மு.க. வரலாற்றில் மதுரைக்கு தனி சிறப்பு உண்டு.
இந்த பிரமாண்ட கூட்டத்தில் விஜயகாந்தை பற்றி பேசியாக வேண்டும்.
விஜயகாந்த் ஒரு இயக்கத்தை நடத்த தகுதியானவர் அல்ல. அவரை பொறுத்தவரை நெல்லை அல்வாவை ‘வைகோ’ கொடுத்துவிட்டார். அரசியலில் அல்வா கொடுத்து விஜயகாந்தை வைகோ அனுப்பிவிட்டார். எனவே பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் தே.மு.தி.க. என்ற கட்சி இருக்காது.
29 எம்.எல்.ஏ.க்களை தே.மு.தி.க. கடந்த சட்டசபை தேர்தலில் பெற்றது என்றால் அது அ.தி.மு.க. தொண்டர்களின் உழைப்பு. 2011–ம் ஆண்டு உச்சிக்கு சென்ற தே.மு.தி.க. 2014 தேர்தலில் கீழே விழுந்து விடும்.
தமிழக அரசியல் வரலாற்றில் பேரறிஞர் அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர். வழியில் புதிய நிலைப்பாட்டை ஏற்படுத்தி புரட்சித்தலைவி தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்.
எனவே தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.
பாரதீய ஜனதாவை ஏன் புரட்சித்தலைவி விமர்சிக்கவில்லை என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்கு நேற்றைய தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா விடை கொடுத்து விட்டார். இனியும் மக்களை திசைதிருப்பும் எதிர் கட்சிகளின் சூழ்ச்சி பலிக்காது.
இந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். பாரதீய ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் மெஜாரிட்டி பெற முடியாது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் 40 இடங்களை பெறும் அ.தி.மு.க. அடுத்த ஆட்சியை நிர்ணயிக்கும் முக்கிய இடத்தில் இருக்கும்.
தி.மு.க.வை பொறுத்தவரை கருணாநிதி எம்.ஜி.ஆர். உள்பட பல தலைவர்களை கட்சியை விட்டு வெளியேற்றினார். அவரை அரசியலில் இருந்து விரட்ட யாரும் தேவையில்லை. அவரது பிள்ளைகள் அந்த பணிகளை செய்து முடிப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், இங்கே கொள்கை ரீதியில் மக்கள் குவிந்துள்ளனர். ஆனால் கருணாநிதி கலந்து கொள்ளும் கூட்டத்துக்கு மக்களை பணம் கொடுத்து அழைத்து வருகிறார்கள். மதுரை நகருக்கு கருணாநிதி எந்த நன்மையும் செய்தது உண்டா? முதல்–அமைச்சர் அம்மா ரூ.600 கோடிக்கு மேல் திட்டங்களை மதுரைக்கு தந்துள்ளார். எனவே மதுரை மக்களின் வாக்குகளை கேட்க கருணாநிதிக்கு தகுதி இல்லை. அ.தி.மு.க. வேட்பாளரை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி. மு.க.வில் சேர்ந்த விஜய காந்தின் சகோதரர் பால்ராஜ் மனைவி வேங்கடலெட்சுமி பேசும்போது, அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் அமோக வெற்றிபெறும் என்று குறிப்பிட்டனர்.
Average Rating