திருட்டுக் கும்பல் யாழில் சிக்கியது, பல லட்சம் பெறுமதியான பொருள்கள் மீட்பு!
யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து மடிக்கணினிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் எனப் பல லட்சம் பெறுமதியான பொருள்களைக் கைப்பற்றியுள்ளனர் சுன்னாகம் பொலிஸார்.
இந்தக் கில்லாடித் திருடர்கள் தாம் திருடிய பொருள்களை பாகங்களாகப் பிரித்தும், நூதமான முறையில் உருமாற்றம் செய்தும் விற்பனை செய்து வந்தமையும் பொலிஸாரின் விசாரணகளில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உரிய விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் அவர்களிடம் இருந்து மேலும் பல லட்சம் பெறுமதியான பொருள்கள் கைப்பற்றப்படும், அவர்களின் சகாக்கள் பலர் கைது செய்யப்படுவர் என்றும் சுன்னாகம் பொலிஸார் கூறுகின்றனர்.
உடுவில் அம்பலவாணர் வீதி உட்பட சுன்னாகம் பொலிஸ் பிரிவில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் சர்வசாதாரணமாகியிருந்தன. அதைத் தொடர்ந்து தமது கண்காணிப்பை அதிகரித்திருந்தனர் பொலிஸார். அப்போதுதான் பொலிஸாரிடம் மாட்டினார் உடுவில் நாகம்மாள் வீதியைச் சேர்ந்த சொப்பன் என்பவர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போதே பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
சொப்பனிடம் நடத்திய விசாரணைகளை அடுத்து தாவடியில் கறாஜ் வைத்திருக்கும் ஒருவரையும் அதே பகுதியில் கழற்றி விற்பனை செய்வதற்கான இயங்கிய இரகசிய கறாஜ் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியதுடன், அதன் உரிமையாளரையும் கைது செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக சுன்னாகம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த உடுவில் உட்பட சில இடங்களைச் சேர்ந்தவர்களும், இருபாலை, மானிப்பாய், இளவாலை, சங்கானை, மாதகல் உட்பட பல இடங்களைச் சேர்ந்தவர்களும் என 10 பேர் நேற்று பொலிஸாரால் வளைத்துப் பிடிக்கப்பட்டனர்.
அவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் 4 மோட்டார் சைக்கிள்கள், 3 மடிக்கணினிகள், பல மோட்டார் சைக்கிள்களின் பாகங்கள் எனப் பல லட்சம் பெறுமதியான பொருள்கள் மீட்கப்பட்டன. அவற்றில் உடுவில் சோமராந்தோட்ட வீதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள், மடிகணினி மற்றும் புன்னாலைக்கட்டுவனில் ஆசிரியர் ஒருவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பவனவும் அடக்கம்.
திருடப்படும் மோட்டார் சைக்கிள்கள் தாவடியில் உள்ள இரகசிய கறாஜில் வைத்து பாகங்களாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுமாம். அத்தோடு வர்ணம் மாற்றுதல், நூதமான முறையில் உருமாற்றம் செய்வது போன்ற கைங்கரியங்களும் அந்த கராஜில்தான் நடக்குமாம். அவ்வாறு பாகங்களாக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள், தாவடியில் வெளிப்படையாக இயங்கி வந்த இன்னொரு கராஜில் வைத்து விற்கபடுமாம்.
புத்தம் புதிய சபாரி வகை மோட்டார் சைக்கிள் ஒன்றை ஐந்தாயிரம் ரூபாவுக்கும் விற்றுக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது அந்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இரகசிய கராஜில் பெருமளவு திருட்டுப் பொருள்கள் இருப்பதால் தற்போது அங்கு பொலிஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு கராஜ் உரிமையாளர்களும் அடக்கம். கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்று பொலிஸார் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இன்னமும் பெருந்தொகையான திருட்டுப் பொருள்களை மீட்க முடியும் என்று பொலிஸார் கூறுகின்றனர். விசாரணைகளின் அடிப்படையில் இன்னும் பலர் கைது செய்யப்படவுள்ளனர். ஒரு சிலர் தலைமறைவாகியுள்ளனர். எனினும் அவர்களும் விரைவில் சிக்குவார்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த அதிரடி வேட்டையில் சுன்னாகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துஷ்மந்த, உபபரிசோதகர் பிரதீப், தேவதயாளன் மற்றும் குமார ஆகியோர் கொண்ட குழுவே ஈடுபட்டது.
Average Rating