அவசர முத்தமும், ஒரு அணைப்பும் போதும்..’-நடிகை ரவீணா தாண்டன்
அழகான நடிகை ரவீணா தாண்டன் தற்போது அன்பான அம்மாவாகியிருக்கிறார். அவரிடம் சில கேள்விகள்:
தற்போது நீங்கள் நடித்துக்கொண்டிருப்பது…?
அனுராக் காஷ்யப்பின் ‘பாம்பே வெல்வெட்’ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
நீங்கள் நடிகையாகியிருக்காவிட்டால்…?
எனது சொந்த விளம்பர நிறுவனத்தை நடத்திக் கொண்டிருப்பேன் அல்லது புத்தக வெளியீட்டுப் பணியில் இறங்கியிருப்பேன்.
ஒரு படத்தை உங்களின் சினிமா உலக அறிமுகப் படமாகத் தேர்வு செய்யலாம் என்றால் எந்தப் படத்தைத் தேர்வு செய்திருப்பீர்கள்?
‘பதார் கே பூல்’ படத்தை!
பாலிவுட்டில் சிறந்த விஷயம்?
நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை ஒன்றிரண்டு வார்த்தைகளில் கூறிவிட முடியாது.
இந்தித் திரையுலகில் கவர்ச்சியான நடிகர்?
சல்மான்கான். அவர்தான் அதிகவர்ச்சியான நடிகராக என்றும் இருப்பார்.
இந்தித் திரையுலகுக்கு புதிதாய் வந்தவர்களில் மிகவும் திறமைசாலிகள் என்று நீங்கள் கருதுவது?
சித்தார்த் மல்கோத்ராவும், ஆதித்ய ராய் கபூரும். அவர்கள் நல்ல நடிகர்கள் என்று நிரூபித்திருக்கிறார்கள்.
‘ஆக்ஷன்’ ‘ரொமான்ஸ்’ இரண்டில் எது உங்களுக்குப் பிடித்தது?
ரொமான்ஸ்.
கறுப்புச் சேலை அல்லது மாடர்ன் உடை, இரண்டில் எதை அணிய விரும்புவீர்கள்?
கறுப்புச் சேலையை.
உங்களின் சருமப் பராமரிப்புக்கு நீங்கள் பயன்படுத்தும் பொருள்?
மில்க் கிரீம், பாதாம் எண்ணெய், சந்தனம் போன்ற இயற்கையான அழகுப் பொருட்களைப் பயன்படுத்துவதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம்.
உங்களுக்குப் பிடித்த குத்தாட்டப் பாடல்?
நான் நல்ல குத்தாட்டப் பாடல் எதையும் பார்க்கவில்லை. ஆனால் ‘மே சண்டிகார் கி ஸ்டார்…’ பாடல் ஓரளவு பிடித்திருந்தது.
தாய்மையின் மிகச் சிறந்த விஷயம்?
ஓர் அவசர முத்தம் அல்லது அணைப்பு, ஒரு நாளை மிகச் சிறந்ததாக்கிவிடும். உங்கள் பெற்றோர் உங்களுக்காக எப்படி உழைக்கிறார்கள் என்பதையும் ஞாபகப்படுத்திவிடும்.
உங்கள் குழந்தைகள் உங்களுக்குச் செய்த நெகிழ்ச்சியான விஷயம்?
ஒன்றல்ல… பல இருக்கின்றன.
உங்களின் அழகு ரகசியம்?
நான் ஆரோக்கியமாகச் சாப்பிடுகிறேன், உடலைக் குறைக்க வேண்டும் என்று பட்டினி கிடப்பதில்லை. அதுவே எனக்கு அழகு.
நீங்கள் எந்நேரமும் பேசக்கூடிய நண்பர்கள்?
எனது பழைய தோழிகளான யாஸ்மினும், அபிபாவும்.
நீங்கள் உங்களைப் பற்றி பரப்பிவிட விரும்பும் வதந்தி?
‘நான் 30 கிலோ எடையைக் குறைத்துவிட்டேன்’ என்று!
உங்களின் கனவுப் பிரதேசம்?
காஷ்மீர். நான் அங்கே அடிக்கடி போய்க்கொண்டிருக்கிறேன். எனது குழந்தைகளுக்கும் காஷ்மீர் பிடித்திருக்கிறது.
உங்களுக்குப் பிடித்த தெருவோர உணவு?
பேல் பூரி.
உங்கள் வாழ்வில் எடுத்த பெரிய ரிஸ்க்?
‘பாம்பே வெல்வெட்’ பாடலுக்கு ஆட ஒப்புக்கொண்டது.
உங்கள் வாழ்வில் அதிகம் மகிழ்ந்த தருணம்?
என் குழந்தைகள் பிறந்த வேளை.
கவலைக்குரிய தருணம்?
எனது ஆறடி உயர நாய் சமீபத்தில் இறந்தது. அது என் மீது அளவற்ற பாசம் வைத்திருந்தது.
நெருக்கடியான சூழ்நிலையை எப்படி சமாளிப்பீர்கள்?
‘நான் எதையும் சமாளிக்கக்கூடியவள். எனவே இதையும் தாண்டி வருவேன்’ என்று நினைப்பேன்.
இன்றைய இளம் நடிகைகளுக்கு நீங்கள் கூற விரும்பும் அறிவுரை?
நீங்கள் பிற்காலத்தில் வருந்தக்கூடிய எதையும் செய்துவிடாதீர்கள்.
உங்கள் சுயசரிதையில் இடம்பெறக்கூடிய கடைசி வாசகம்…?
‘நான் வாழ்ந்தேன் மற்றவர்களை வாழவும் விட்டேன்.’
Average Rating