மான்செஸ்டர் கால்பந்து குழு பயிற்சிக்கு, கொல்கத்தா பாலியல் தொழிலாளியின் மகன் தேர்வு!
உலகின் பிரபல கால்பந்து வீரர்களை உருவாக்கி, கிளப் போட்டிகளில் களமிறக்கும் இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து குழு பயிற்சிக்கு கொல்கத்தாவில் பாலியல் தொழில் செய்து வரும் பெண்ணின் 16 வயது மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளான்.
கிரிக்கெட் விளையாட்டில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டும் வாலிபர்களை கொண்ட நமது நாட்டில் கால்பந்து ஆட்டத்தின் மீதான நாட்டம் மெல்ல, மெல்ல குறைந்து வரும் வேளையில், இந்தியாவிலேயே விபச்சாரத்தின் தலைநகரம் என்று அழைக்கப்படும் மேற்கு வங்காள மாநில தலைநகரான கொல்கத்தாவின் சோனாகச்சி பகுதியில் வசிக்கும் ரஜிப் பாய் என்ற சிறுவன் இடைவிடாது கால்பந்து பயிற்சியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தான்.
உலகளாவிய அளவில் விபச்சாரத்துக்கு பெயர் போன 50 சிகப்பு விளக்கு பகுதிகளில் வாழும் சிறுவர்களை தேர்வு செய்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து போட்டிகளை நடத்தி பரிசு வழங்கும் ஒரு நிறுவனம் கடந்த 2012-ம் ஆண்டு கொல்கத்தாவின் சோனாகச்சி பகுதியில் இந்த போட்டியை நடத்தியது.
அப்போது, சோனாகச்சி பகுதி சார்பாக போட்டியில் களமிறங்கிய சிறுவன் ரஜிப் பாய்-யின் ஆட்டத்தின் நேர்த்தியை கண்டு அசந்துப் போன இப்போட்டியின் பயிற்சியாளர் பிஷ்வஜித் மஜும்தார் என்பவர் அசந்துப் போனார். அன்றிலிருந்து அவனை தனது பிரதான சீடனாக ஏற்றுக் கொண்ட அவர், கால்பந்து விளையாட்டின் நுணுக்கங்களை அவனுக்கு கற்றுத் தந்து இரண்டே ஆண்டுகளில் பட்டை தீட்டிய வைரமாக மாற்றியுள்ளார்.
இவனைப் போன்ற ஊக்கம் மிகுந்த கால்பந்தாட்டக்காரர்களை வயது வாரியாக தேர்வு செய்து தங்களது கிளப்புகளில் பங்கேற்பதற்கு தகுதியான வீரர்களாக உருவாக்கும் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து பயிற்சிக் கழகம் இந்தியாவில் தேசிய அளவில் ஒரு தேர்வு போட்டியை சமீபத்தில் நடத்தியது.
அந்த போட்டியில் வெற்றி பெற்ற 11 பேரில் ஒருவனான ரஜிப் பாய் அடுத்த (ஏப்ரல்) மாதம் இங்கிலாந்துக்கு சென்று மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து பயிற்சிக் கழகத்தில் இலவசமாக பயிற்சி பெற உள்ளான். இவனது தாயார் சோனாகச்சியின் விபச்சார விடுதியில் மாதமொன்றுக்கு சுமார் ஆறாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்.
இப்பகுதியில் இதே தொழிலில் ஈடுபட்டிருக்கும் சுமார் 11 ஆயிரம் பேர் வசித்துவரும் தீப்பெட்டிப் போன்ற குடியிருப்பில் தாயுடன் தங்கியிருக்கும் ரஜிப் பாய்க்கு தற்போது தற்போது 16 வயது ஆகிறது. இந்த தேர்வு தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில்,
‘ஒரு பாலியல் தொழிலாளியின் மகன் என்பதில் எனக்கு எந்த வருத்தமோ, வெட்கமோ இல்லை. எனக்கு ஊக்க சக்தியாக இருந்து ஆதரவு தருபவர் எனது அம்மாதான். வெகு விரைவில் இந்த சிகப்பு விளக்கு வாழ்க்கையில் இருந்து அவரை மீட்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்’ என்று தெரிவித்தான்.
ரஜிப் பாயை இங்கிலாந்துக்கு அனுப்பி வைப்பதற்கு தேவையான பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை பெற்று தரும் வேலையில் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ள பயிற்சியாளர் பிஷ்வஜித் மஜும்தார், ரஜிப் பாய்க்கு கிடைத்துள்ள உயர்வைப் பற்றி பெருமை பொங்க கூறுகையில், ‘அவன் வயதுக்கு சமமான சிறுவர்கள் இதற்கு முன்பெல்லாம் அவனைப் பற்றியும் அவனது தாயாரைப் பற்றியும் தரக்குறைவாக விமர்சித்து பேசி வந்தனர்.
ஆனால், இப்போது அவனுடன் அன்பொழுகப் பழகும் அவர்கள், ‘நீ மான்செஸ்டரில் பயிற்சி முடித்து திரும்பி வந்தால் நீ கற்றுக் கொண்டதை எங்களுக்கும் சொல்லித் தர வேண்டும் என்று முன்பதிவு செய்து வைத்துள்ளனர்’ என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார்.
இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்து விட்டால் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட பயிற்சி கழகத்தின் பிரபல வீரராக ரஜிப் பாய் உயர வாய்ப்புள்ளது.
மெஸ்ஸி, கிரிஸ்டியானோ ரொனால்டோ, டேவிட் பெக்காம் போன்ற உலகின் பிரபல கால்பந்தாட்ட வீரர்களின் வரிசையில் ஒருவராக உயர்ந்து, கை நிறைய சம்பாதித்து தாயின் களங்கத்தை துடைப்பதுடன், கால்பந்தாட்ட அரங்கில் தாய்நாட்டின் பெருமையையும் ரஜிப் பாய் நிலைநாட்ட வேண்டும் என வாழ்த்துவோம்.
Average Rating