மலேசிய விமானம் கடலில் நொறுங்கி விழுந்தது 5 இந்தியர் உட்பட 239 பேரும் பலி!!
மலேசியாவில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு சென்ற விமானம், வியட்நாமில் நடுக்கடலில் விழுந்து நொறுங்கியது.
இதில் பயணம் செய்த 5 இந்தியர்கள் உட்பட 239 பேர் கடலில் மூழ்கி பலியாகினர்.
இதில், சென்னை பெண்ணும் அடங்குவார். விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் சீனா, மலேசியா, வியட்நாம், சிங்கப்பூர் கடற்படை கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.
மலேசியாவில் செயல்படும் ‘சீன சதர்ன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக பயணிகள் விமானம், நேற்று முன்தினம் இரவு 12.41க்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு புறப்பட்டது.
இதில், சீனாவை சேர்ந்த 152 பேரும், மலேசியா 38, இந்தியா 5, இந்தோனேஷியா 7, ஆஸ்திரேலியா 6, பிரான்ஸ் 3, அமெரிக்கா 4, நியூசிலாந்து 2, உக்ரைன் 2, கனடா 2, ரஷ்யா, இத்தாலி, தைவான், நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 227 பேர் பயணம் செய்தனர்.
சீனா, அமெரிக்காவை சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகளும் இதில் அடங்குவர். மேலும், பைலட், விமான ஊழியர்கள் 12 பேருடன் சேர்த்து, விமானத்தில் மொத்தம் 239 பேர் இருந்தனர்.
விமானத்தை மலேசியாவை சேர்ந்த பைலட் சகாரியா அகமது ஷா ஓட்டினார். காலை 6.30க்கு பீஜிங்கில் விமானம் தரையிறங்க வேண்டும்.
அதிகாலை 2.41 மணியில்… விமானம் புறப்பட்ட இரண்டு மணி நேரம் வரை, கோலாலம்பூர் கட்டுப்பாட்டு அறையுடன் விமானி தொடர்பில் இருந்தார்.
கடைசியாக அதிகாலை 2.41க்கு கட்டுபாட்டு அறையை விமானி தொடர்பு கொண்டார். அதன் பிறகு, கட்டுப்பாட்டு அறைக்கும் விமானத்துக்கும் இடையிலான தொடர்பு திடீரென துண்டானது.
இதனால், கோலாலம்பூர் விமான கட்டுப்பாட்டு அறையில் பதற்றம் ஏற்பட் டது. தொடர்பு துண்டிக்கப்பட்டபோது, வியட்நாம் நாட்டு வான் எல்லையில், தெற்கு சீன கடலுக்கு மேல், 36 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தது.
இதனால், அந்த நாட்டு விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விவரம் கேட்கப்பட்டது. அங்கும் விமானி தொடர்பு கொள்ளவில்லை என்று தெரிந்தது.கடலில் விழுந்ததாக தகவல்:
அதற்கு அடுத்த சில நிமிடங்களில், வியட்நாமில் தெற்கு பு குவாக் தீவுக்கு அருகே கடலில் விமானம் விழுந்து நொறுங்கியதாக, இந்நாட்டை சேர்ந்த கடற்படை தகவல் வெளியிட்டது.
அந்த பகுதியில் மீட்பு படகுகள் எதுவும் இல்லாததால், பு குவாக் தீவில் இருந்து கடற்படை மீட்பு படகுகள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.
அதற்குள், விமானம் கடலில் விழுந்த தகவல் சீனாவுக்கும் எட்டியது. அந்த நாட்டு அரசும் உடனடியாக குவாக் தீவு பகுதிக்கு 2 கடற்படை கப்பல்களை அனுப்பியது.
இந்த விபத்தில் 5 இந்தியர்கள் உட்பட 239 பேரும் பலியாகி விட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இதில், சென்னையை சேர்ந்த சந்திரிகா சர்மாவும் அடங்குவார்.
விமானம் விபத்தில் சிக்கிய தகவல் வெளியானதால், அதில் பயணம் செய்த பயணிகளின் குடும்பத்தினர் கதறி அழுதப்படி கோலாலம்பூர் மற்றும் பீஜிங் விமான நிலையங்களில் குவிந்தனர்.
இதனால், அங்கு பெரும் சோகம் நிலவியது. தங்களுடைய உறவினர்களின் நிலையை அவர்கள் அங்கும், இங்குமாக ஓடி, விமான நிலைய அதிகாரிகளிடம் கண்ணீருடன் விசாரித்து கொண்டிருந்தனர். சிலர் அதிர்ச்சி தாங்காமல் மயங்கி விழுந்தனர்.
கப்பல்கள் தேடுதல் வேட்டை: விமானம் மூழ்கியதாக சந்தேகிக்கப்படும் கடல் பகுதியில், சீனா, வியட்நாம், மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாட்டு கடற்படை கப்பல்களும், விமானங்களும் முழுவீச்சில் விமானத்தை தேடி வருகின்றன.
விபத்தில் சிக்கிய விமானம் எங்கு இருக்கிறது என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. விமானம் கடலில் விழுந்து மூழ்கியதற்கு ஆதாரமாக, சில இடங்களில் எண்ணெய் படலம் ஏற்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் தெரியவில்லை. அது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விமானத்துடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதால், விமானியிடம் இருந்து அவசர கால அழைப்பு எதுவும் வரவில்லை.
இதனால், விமானத்தில் என்ன நடந்தது என தெரியாமல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்ஜினும், தகவல் தொடர்பு சாதனங்களும் ஒரே நேரத்தில் செயலிழந்து விமானம் கடலில் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
விமான விபத்தில் பலியான இந்தியர்களின் பெயர்கள்: செத்னா கொலேகர், சுவானந்த் கொலேகர், சுரேஷ் கொலேகர், சந்திரிகா சர்மா (51), பிரகலாத் சிர்சஸ்தா.இவர்களில் சந்திரிகா சர்மா என்ற பெண் சென்னையை சேர்ந்தவர்.
அரியானாவை சேர்ந்த இவர், சென்னையை சேர்ந்த நரேந்திரன் என்பவரை திருமணம் செய்து, 1993 முதல் சென்னையில் வசித்து வருகிறார். இவர்களின் மகள், டெல்லியில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
மீன்பிடி தொழிலாளர்கள் சர்வதேச கூட்டு ஆதரவு அமைப்பு’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் நிர்வாக செயலாளராக சந்திரிகா செயல்பட்டு வந்தார்.
மங்கோலியாவில் நேற்று நடைபெற்ற உணவு மற்றும் விவசாய அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் இவர் சென்றபோது தான் விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.
இதனால், இவருடைய குடும்பம் அதிர்ச்சியில் ஆழ்ந்திருப்பதாக, சந்திரிகாவுடன் பணியாற்றும் வேணுகோபால் என்பவர் தெரிவித்தார்.
Average Rating