ஜெனீவாவில் வேடிக்கை மாத்திரமே பார்த்தேன்: சுமந்திரன் ஆடிய நாடகம் அம்பலம்
ஜெனீவாவில் ஓர் போர்க்குற்ற விசாரணை தொடர்பான பிரேரணை முன்வைக்கப்படும் என நம்பி இருந்த தமிழ் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதுடன் கடும் மன உளைச்சலிற்கும் உள்ளாகியுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்…
ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணையின் மூலம் நீதியான சர்வதேச விசாரணை சர்வதேச சமூகத்தினால் முன்னேடுக்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் மீண்டும் ஏமாற்றப்பட்டிருக்கின்றமை மிகுந்த கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த பிரேரணையில் அரசியல் கைதிகள், சரணடைந்தவர்கள் மற்றும் இன அழிப்புத் தொடர்பாக எதுவுமே குறிப்பிடப்பட்டு இருக்கவில்லை.
இன அழிப்பிற்கு சர்வதேசம் நீதியான தீர்வொன்றினை தராதென எமது இளம் சமுதாயம் கருதி மாற்றுவழிகளை தேடிக்கொள்ளுமானால் அகிம்சை பற்றி பேசிக்கொண்டிருக்கும் சர்வதேச நாடுகளே அதற்கு பொறுப்பாக வேண்டியிருக்கும்.
எனவே மனிதநேயமுள்ள நாடுகள் சர்வதேச விசாரணையை வலியுறுத்த வேண்டுமென்றே நாம் தொடர்ந்து எதிர்பார்க்கின்றோம் என்றார்.
அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஜெனீவாவிற்கு சென்ற தன்னை அங்கு வைத்து பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எந்தவொரு சந்திப்பிலும் எதும் பேச அனுமதிக்கவில்லை எனவும் அவரும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை தொடர்பில் அங்கு எந்த கோரிக்கைகளை முன்வைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
அது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜெனீவா சென்று இறங்கியதுமே பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நான் புலிகளது முக்கிய போராளியான எழிலனின் மனைவி என்பதால் என்னையும் சர்வதேச பிரதிநிதிகள் புலிகள் போராளியாகவே பார்ப்பார்களென தெரிவித்ததுடன் என்னை ஏதும் பேச வேண்டாமெனவும் தானே எல்லாவற்றினையும் பேசுவதாகவும் தெரிவித்தார்.
வட மாகாணசபையில் சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததுடன் அங்கு வட மாகாணசபை சார்பில் என்னையே ஜெனீவாவிற்கு அனுப்புவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இவ்வகையினில் தமிழரசுக்கட்சியின் அனுசரணையுடன் நான் பல்வேறு சிரமங்களிற்கு மத்தியில் ஜெனீவா சென்றிருந்தேன்.
இவ்வாறன ஒரு நிகழ்ச்சி நிரலில் தான் அவர் என்னை அங்கு அழைத்து சென்றிருப்பார் என முன்கூட்டியே தெரிந்திருந்தால் நான் நிச்சயமாக அங்கு சென்றிருக்க மாட்டேன்.
18 நாட்டு ராஜதந்திரிகளுடன் கடந்த பெப்ரவரி 13ல் இடம்பெற்ற ஜெனீவா சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போர்குற்ற விசாரணை தொடர்பாகவோ இன அழிப்பு தொடர்பாகவோ ஏதும் பேசியிருக்கவில்லை.
என்னையும் அது தொடர்பாக பேச விடவில்லை. வெறுமனே வேடிக்கை பார்க்கும் நபராக நான் அங்கு இருந்தேன்.
குறுக்கிட்டு அங்கு என்னால் பேசியிருக்க முடியுமாயினும் ராஜதந்திரிகளிடையே கௌரவத்தினை மதித்து தான் நான் பேசாது இருந்தேன் என அனந்தி மேலும் தெரிவித்தார்.
Average Rating