வடக்கு முதல்வருக்கு, ஆனந்தசங்கரி கடிதம்..
மாண்புமிகு சீ.வி.விக்னேஸ்வரன்,
முதலமைச்சர்,
வடக்கு மாகாணசபை.
அன்புள்ள முதலமைச்சர் அவர்களுக்கு,
இரணைமடுக்குளத்திலிருந்து குடிநீர் வழங்கும் திட்டம்
இக்கடிதம் உங்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கும் என நம்புகிறேன். 1959ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் சட்டப் கல்லூரியில் கல்விகற்ற காலத்திலிருந்து நாம் ஒருவரையொருவர் அறிந்திருந்தும் முதற்தடவையாக இக்கடிதத்தை எழுதுகிறேன்.
மாகாணசபைத் தேர்தல் முடிந்து சம்பிரதாயப்படி முதற்கூட்டம் கூட்டப்படுவதற்கு முன்பு நீங்களும், சில பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஒரு குழுவாக கிளிநொச்சிக்கு வந்தது ஏன் எனத் தெரியவில்லை. இதுவரையில் அரசியல் ஒரு அழுக்கு நிறைந்த விளையாட்டு என்பதை தம்தம் இலக்கையடைய ஒருவர் எவ்வளவு தூரம் தன்னைத் தாழ்த்திக் கொள்வார் என்பதையும் அறிந்திருப்பீர்கள்.
இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்கும் விடயம் தற்போது உணர்வைத் தூண்டும் ஒரு பூதாகரமான விடயமாகி யாழ் மாவட்ட மக்களையும், கிளிநொச்சி மாவட்ட மக்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் ஒரு விடயமாகி விட்டது. தற்போதைய நிலைமையை சரியாக மக்களுக்கு விளங்கப்படுத்த தவறினால் அனேகருக்கு சங்கடத்தைக் கொடுக்கக்கூடிய வகையில் சிலர் தப்பான கருத்தைக் கூறி மக்களை தவறான வழிக்கு இட்டுச் செல்ல முடியும். கிளிநொச்சிக் கூட்டத்திற்கு எனக்கு தெரியப்படுத்தாமை உங்களுக்குத் தெரியாமலே சில விஷமிகளின் திட்டமிட்ட செயலாகும்.
குறைந்தபட்சம் இதுவரையிலும் இதை யார் செய்தார்கள் – அது இன்றுவரை எவ்வாறு செயற்படுத்தப்படுகின்றது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பல மக்களுடன், விவசாயிகள், தொழில்நுட்பவியலாளர்கள், நிபுணர்கள், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் போன்ற இன்னும் பலருடன் கூட்டங்கள் நடந்து முடிந்துவிட்டது.
நான் உங்களிடம் கேட்கும் ஒரேயொரு கேள்வி – நான் ஏன் புறக்கணிக்கப்படுகின்றேன். நான் புறக்கணிக்கப்படுவதை யார் விரும்புகிறார்கள்? அவர்கள் இதனால் அடையும் இலாபம் என்ன? இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண விரும்புகிறார்களா? அல்லது தங்கள் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற விரும்புகிறார்களா?
முதலமைச்சர் அவர்களே! நாட்டில் முதன்முதலாக இந்தப் பிரச்சனை சம்பந்தமாக சொற்ப நாட்கள் குறைவாக மூன்றரை வருடங்களுக்கு முன்பு 11.10.2010 ஆந் திகதியிட்டு மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்களா? நீர் வழங்கல் வடிகால் அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்த்தன அவர்களுக்கு இக்கடிதத்தின் பிரதியை அனுப்பியதோடு பல தடவைகள் இது சம்பந்தமாக அவருடன் பேசியுள்ளேன.
அத்துடன் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ நிமால் சிறீபால டி சில்வா அவர்களுக்கும் இதுபற்றித் தெரியப்படுத்தியிருக்கிறேன். இவை தவிர சரியாக 3 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 25.02.2011 என்னால் கொடுக்கப்பட்ட விளக்கம் அன்றைய தினம் வெளியாகிய தமிழ்த் தேசிய நாளிதளான தினக்குரலில் முழுப்பக்க கட்டுரையாக வெளியிடப்பட்டது.
அந்தக் கட்டுரையில் எனது நிலைப்பாட்டையும், இந்தக் குடிநீர்ப் பிரச்சனைக்கு மாற்றுத் தீர்வையும் வழங்கியிருந்தேன். சுருக்கமாகக் கூறின் இவ்விடயம் சம்பந்தமாக நானே முதன்முதலில் அரசாங்கத்திற்கு பிரஸ்தாபித்திருந்தும், பல இடங்களில் பல கூட்டங்கள் பல குழுக்கள் கூடி விவாதித்தும் அவற்றில் ஒன்றிலேனும் எனக்கு பங்களிக்கும் சந்தர்ப்பம் தரப்படவில்லை.
இத்திட்டத்தை சதி செய்து குழப்பும் நோக்கம் எனக்கில்லை. ஒரு துளி தண்ணீர்கூட இரணைமடுக்குளத்திலிருந்து பெறாமல் இத்திட்டத்தை எவ்வாறு பூர்த்தி செய்யலாம் என்பதை ஆராய்ந்து – மிகவும் மதிப்புடன் செயற்பட்ட நீர்ப்பாசனப் பகுதியில் பதில் பணிப்பாளராக கடமையாற்றிய அமரர் ஆறுமுகம் அவர்களின் ´யாழ்ப்பாணத்திற்கு ஒரு ஆறு´ என்ற திட்டத்தை இத்திட்டத்துடன் இணைத்து செயற்படுவதே வெற்றியளிக்கும் என நான் உணர்கிறேன்.
அமரர் ஆறுமுகம் அவர்கள் இவ்விடயத்தில் ஒரு நிபுணராக இருந்தமையால் எதிர்காலத்தில் நாடு எதிர்நோக்கக்கூடிய குடிநீர்ப் பிரச்சினையை அறிந்து இத்திட்டத்தை தயாரித்து வழங்கினார். நீங்கள் சில உண்மைகளை அறிய வேண்டும் என்பதற்காக ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தின் சில பகுதிகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
´ஜனாதிபதி அவர்களே! இரணைமடுக்குளத்தால் நீர்ப்பாசனத்தை அனுபவிக்கின்ற பகுதிகளில் நெற்செய்கை முற்று முழுதாக பாதிக்கப்படும் என்று நம்புகின்றேன். அதன் பயனாக நாடு பல பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். கிளிநெச்சியின் 80மூ மேற்பட்ட மக்கள் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் இரணைமடு குளத்து நீரையே நம்பியுள்ளனர்.
இரணைமடு குளத்தின் கீழ் 30,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகின்றது. பல சந்தர்ப்பங்களில் அறுவடைக்கு முன்னர் இரண்டு அல்லது மூன்று தடவை நீர்ப்பாசனம் செய்தே பயிரை மீட்டெடுத்து அறுவடை செய்ய வேண்டிய நிலை. போதிய மழை இன்மையினால் இப்படியான நிலை ஏற்படுவதுண்டு.
சிறு போக வேளாண்மை காலத்தில் பயிர் செய்யப்பட வேண்டிய இடமும் பரப்பும் வரையறுக்கப்பட்டு அதற்கு அப்பால் உள்ளவர்களுக்கும் இக்காணிகளில் விதைப்பதற்கு உரிமையும் வழங்கப்படும். இரணைமடு நீர் விநியோக பகுதிகளில் விவசாயப் பணிகள் இவ்வாறே இடம்பெறுகின்றன. இந்நிலையை சரியாக விளங்கிக் கொள்ளுவீர்கள் என நம்புகின்றேன்.
சில சந்தர்ப்பங்களில் குளத்து நீர் முற்றாக வற்றிப் போவதும் உண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்நீரையே நம்பியுள்ள பயிரைக் காப்பாற்றுவதா அல்லது வேறு தூரப் பிரதேசங்களில் உள்ள மக்களின் குடி நீர் தேவையை நிறைவேற்ற நீரை விநியோகிப்பதா என உங்களுக்கு தடுமாற்றம் ஏற்படும். இதை ஒரு முன்யோசனையின்றி உருவாக்கப்பட்ட திட்டமாக கருதி மீள் பரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொள்ளுகின்றேன்.´
மேலும் அக்கடிதத்தில் ´ஜனாதிபதி அவர்களே யாழ் குடாநாடு செழிப்புற வேண்டும்மென நீங்கள் நினைத்தால் காலம் சென்ற கௌரவ அருணாசலம் மகாதேவா அவர்களினால் 1947ம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட யாழ்ப்பாண களப்புத்திட்டத்தை அமுல்படுத்துங்கள். இத்திட்டத்தை செயல்படுத்த சுண்டிக்குளத்தில் ஒர் நீர் தடுப்பணையையும் தொண்டமனாறு மற்றும் நாவற்குழி ஆகிய இடங்களில் இரு தடுப்பணையையும் அமைப்பதுடன் ஆனையிறவு களப்பையும் வடமறாச்சி களப்பையும் இணைக்கும்மாறு 4-5 மைல் நீளமான கால்வாய் ஒன்றும் வெட்டப்பட வேண்டும். இத்திட்டத்தை நிறைவேற்ற போதிய நிதியின்மையால் கைவிடப்பட்டது.´
இத்திட்டம் எவ்வாறு செயற்படுத்தப்படும் என்பதை விளக்கி, ´இத்திட்டம் செயற்படுத்தப்படும் முறையாக இம் மூன்று நீரை கட்டுப்படுத்தும் அணைகள் மழைகாலத்தில் பூட்டப்பட்டிருக்கும். இரணைமடுக் குளத்தில் இருந்து நிரம்பி வழியும் நீர் ஆனையிறவு களப்பை அடைந்து வடமறாச்சி களப்பு ஊடாக ஏனைய பகுதிகளிலும் பரவி நிற்கும்.
குடாநாட்டில் இருந்து நீர் கடலை நோக்கி செல்லும் போது நீரணையின் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் இம்மூன்ற இடங்களினாலும் வெளியேறிச் செல்லும். இவ்வழியை மீண்டும் மீண்டும் 8 – 10 வருடங்களுக்கு தொடர்ந்து செயல்படுத்தினால் பிரயோசனமற்றுள்ள பிரதேசங்கள் வளம் பெறுவதுடன் உப்பு நீர் உள்ள கிணறுகளும் நன்னீராக வாய்ப்புள்ளது.
இது நிபுணர்களின் கருத்தேயன்றி எனது கருத்தல்ல. அவ்வாறே குடாநாட்டு பிரதேசம் முழுவதையும் கமச் செய்கைக்கு பிரயோசனப்படுத்துவதோடு கிணறுகளிலும் நன்னீரைப் பெறலாம். ஒரு சாதாரண மனிதனாக என்னால் விளங்கிக் கொள்ளக் கூடியது இவ்வளவுதான். இத்திட்டத்தை பூர்த்தியாக்க கொஞ்சப்பணமே தேவைப்படும். இதற்காக 5 மைல் நீளமான கால்வாய் வெட்டவும் சுண்டிக்குளத்தில் ஒரு தடுப்பணை கட்டவுமே செலவாகும்.
ஏனைய இரண்டு இடங்களில் ஒன்று பூர்த்தியாகியும் மற்றொன்று பூர்த்தியாகும் நிலையிலுமே உள்ளன.´ (தற்போது பூர்த்தியடைந்துள்ளது) இக்கடிதத்தை முடிப்பதற்கு முன்பு அமரர் ஆறுமுகம் அவர்களுடன் நன்றாகப்பழகி அவரின் திட்டத்தை முழுமையாக அறிந்துவைத்திருக்கும் திரு. டி. எல். ஓ. மென்டிஸ் என்பவர் அரசுக்கு ஆலோசனை வழங்க மிகவும் கொருத்தமானவர் ஆவார். (தற்போது உடல் நலத்துடன் வாழ்கிறார்)
இரணைமடுக்குளம் சில வருடங்களில் முற்றாக வற்றுவதும், குளக்கட்டு உயர்த்தப்பட்டால் மாங்குளத்தை நோக்கிய சில பிரதேசங்கள் தண்ணீரால் மூடப்படும் என்றும் கருதப்படுகிறது. ஆகவே குடிநீருக்காக இரணைமடுக் குளத்தை மாத்திரம் நம்பியிருப்பது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.
அன்புடன்,
வீ. ஆனந்தசங்கரி
செயலாளர் நாயகம்
தமிழர் விடுதலைக் கூட்டணி
Average Rating