சென்னையில் இன்றும் மோதல்: ராஜீவ் சிலை 3 இடங்களில் உடைப்பு
ராஜீவ் கொலை கைதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து, இவர்கள் 3 பேரையும், ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளான நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரையும் விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசின் முடிவுக்கு ஆதரவாக தமிழ் ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியினரும், தமிழகத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இளைஞர் காங்கிரசார் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவன் முன்பு தமிழ் அமைப்பினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாம் தமிழர் கட்சி, மற்றும் தமிழர் முன்னேற்றபடை என்ற அமைப்பின் தொண்டர்கள் திரண்டு, காங்கிரஸ் தலைவர்களின் போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். சோனியாகாந்தி, ராகுல் ஆகியோரின் உருவ பொம்மைகளும் தீவைத்து எரிக்கப்பட்டன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சத்தியமூர்த்தி பவனில் குவிந்த காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் இறங்கினர். அப்போது ஏற்பட்ட பயங்கர மோதலில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 4 பேருக்கு அடி விழுந்தது. போலீஸ்காரர் ஒருவர் உள்பட பலர் காயம் அடைந்தனர்.
இந்த களேபரத்தின்போது சத்தியமூர்த்தி பவன் அருகே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் ஒன்றும் தீவைத்து எரிக்கப்பட்டது. இதனால் நேற்று சத்திய மூர்த்தி பவன் பகுதி போர்க்களமாக காட்சி அளித்தது.
இந்த பரபரப்பு அடங்கும் முன்னரே நேற்று நள்ளிரவில் சென்னையில் 3 இடங்களில் ராஜீவ்காந்தி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்திலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு:–
வேப்பேரி போலீஸ் நிலையம் அருகில் உள்ள ராஜீவ்காந்தியின் மார்பளவு சிலையை நேற்று இரவு மர்மகும்பல் ஒன்று இரும்பு கம்பியால் உடைத்து சேதப்படுத்தி உள்ளது. இதில் சிலையின் முகம் முழுவதும் துண்டாக உடைந்து சிலையின் பீடத்திலேயே விழுந்து கிடந்தது.
இதேபோல பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் புரசைவாக்கம் பட்டாளம் ஆகிய 2 இடங்களிலும் ராஜீவ் காந்தியின் மார்பளவு சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.
இந்த 2 இடங்களிலும் ராஜீவ் சிலைகளின் தலையை துண்டித்து வீசியுள்ளனர். சிலையின் அருகிலேயே தலை பகுதி கீழே கிடந்தது.
இதற்கிடையே சின்ன போரூரில் பள்ளிக்கூட தெருவில் இருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினர். பெட்ரோல் நிரப்பிய பாட்டில் கட்சி அலுவலகத்தின் வளாகத்தில் விழுந்துள்ளது.
ஆனால, அது வெடித்து தீப்பிடிக்கவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக நாம் தமிழர் கட்சி அலுவலகம் பெரும் தீவிபத்தில் இருந்து தப்பியது.
நேற்று சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மோதலின் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெற்றுள்ள இச்சம்பவங்கள் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த மோதல் காரணமாக சத்தியமூர்த்தி பவன் மற்றும் நாம் தமிழர் கட்சி அலுவலகம் ஆகியவற்றை போலீசார் தீவீரமாக கண்காணித்து வருகிறார்கள். அந்த இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிலை உடைப்பு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட வர்கள் யார் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Average Rating