நான்காவது திருமணத்துக்கு மணக்கோலத்தில் நண்பர்கள் புடைசூழ வந்த நபர்
திருமண வீட்டுக்கு மாப்பிள்ளையாக வந்த குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இநதச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கற்பிட்டி கிராமத்தில் உள்ள குடும்பமொன்று தரகர் ஒருவர் மூலம் பார்த்த குருநாகல் முதுந்துவ, பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க தீர்மானித்துள்ளனர்.
தனது தந்தை இறந்த விட்டதாகவும் தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் தனக்கு சொந்தம் என்று சொல்வதற்கு எவரும் கிடையாது என்றும் திருமணத்திற்கு யாரும் வரமாட்டார்கள் எனவும் பெண் வீட்டாரிடம் மாப்பிள்ளை கூறியிருக்கிறார்.
இதேவேளை திருமணத்தை அவசரமாக செய்து வைக்கும்படியும் அந்த இளைஞர் கேட்டுள்ளார். அத்துடன் திருமண செலவுகளுக்கு என பெண் வீட்டாரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபாவையும் பணமாக குறித்த இளைஞர் பெற்றிருக்கிறார்.
அதனையடுத்து கடந்த சனிக்கிழமை திருமணம் நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் பெண் வீட்டார் மேற்கொண்டிருந்தனர் எனக் கூறப்படுகிறது.
எனினும் இவ்வளவு அவசர அவசரமாக திருமணத்தை நடத்துமாறு குறித்த இளைஞர் பெண்வீட்டாரிடம் கூறிய விடயம் பெண் வீட்டார் ஒரு சிலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் பெண்வீட்டாரின் உறவினர் சிலர் குறித்த இளைஞரை பற்றி விசாரிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை குருணாலுக்குச் சென்றுள்ளனர்.
அப்போதுதான் பெண் வீட்டாருக்கு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. குறித்த இளைஞர் ஏற்கனவே மூன்று திருமணங்களை செய்தவர் என்றும் இது நான்காவது திருமணம் செய்யப் போகிறார் என்றும் குருநாகலிலுள்ள மூத்த மனைவியின் பெற்றோர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இவர் கிண்ணியா, மூதூர் ஆகிய பிரதேசங்களில் இரண்டு திருமணங்களை செய்துள்ளார் எனவும் மூன்றாவதாக குருணாகலில் திருமணம் செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த தகவல்களை கேட்டதும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நடைபெற இருந்த திருமண ஏற்பாடுகளை உடனடியாகக் கைவிட்டனர்.
எனினும் தீர்மானிக்கப்பட்ட திகதியில் திருமணத்தை நடத்துவதைப் போல ஏற்பாடுகளை பெண் வீட்டார் செய்துடன், குறித்த இளைஞரை பிடித்து பொலிஸில் ஒப்படைப்பதென்றும் பெண் வீட்டார் தீர்மானித்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
திட்டமிட்டபடி மறுநாள் 15 ஆம் திகதி சனிக்கிழமை குறிப்பிட்ட நேரத்தில் மாப்பிள்ளை இரண்டு தரகர்களுடனும் முச்சக்கர வண்டியில் பெண் வீட்டிற்கு வந்துள்ளார். அவருடன் சேர்ந்து நான்கு பெண்களும் வேன் ஒன்றில் குருணாகலிலிருந்து வந்துள்ளனர்.
இவ்வாறு மாப்பிள்ளை கோலத்தில் வந்த இளைஞரையும், கூட வந்தவர்களையும், அங்கு கூடி நின்றவர்கள் சுற்றிவளைத்ததுடன் உண்மை சம்பவத்தை கேட்டறிந்து கொண்டதுடன், பெண்வீட்டார் இளைஞருக்கு எதிராக கற்பிட்டி பொலிஸில் முறைப்பாடொன்றை செய்தனர்.
ஆத்துடன் பெண்வீட்டார் குறித்த இளைஞரையும், அவருடன் வந்த இரு தரகர்களையும் கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.இந்தச்சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Average Rating