ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷை கொலை செய்து, அவரின் மகளின் காதலை பெற முயன்ற நபர் கைது
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷை கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தியதுடன் அவரின் மகள் பார்பரா புஷ்ஷை தான் காதலிப்பதாகவும் கூறிய நபர் ஒருவரை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நியூயோர்க்கை சேர்ந்த பெஞ்சமின் ஸ்மித் எனும் இந்நபர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷை கடத்தி கொலை செய்யப்போவதாக அந்நபர் அச்சுறுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட வேளையிலும் அந்நபர் தான் புஷ்ஷை கொல்லப்பபோவதாக கூறியுள்ளார். பார்பராவை தான் காதலிப்பதாகவும் அந்நபர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் இரட்டைப் புதல்விகளில் ஒருவரான பார்பரா புஷ்ஷையே அந்நபர் குறிப்பிடுகிறார் என நம்பப்படுகிறது.
ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் தாயாரின் பெயரும் பார்பரா புஷ் (88) என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் புஷ்ஷின் தாயாரை அல்லாமல் புஷ்ஷின் மகளையே ஸ்மித் குறிப்பிடுவதாக அரசாங்கம் நம்புகிறது என அரச தரப்பு வழக்குரைஞர் அன்ட்ரியா கிறிஸ்வோல்ட் நீதிமன்றில் கூறினார்.
பெஞ்சமின் ஸ்மித்தின் தாயார்தான் இந்த அச்சுறுத்தல் குறித்து முதலில் அதிகாரிகளுக்கு அறிவித்தாராம்.
தான் ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷுக்காகவும் அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகனுக்காகவும் வேலை செய்யப் போவதாகவும் வீட்டில் குறிப்பொன்றை எழுதி வைத்திருந்ததைக் கண்டு அதிகாரிகளுக்கு ஸ்மித்தின் தாயார் தகவல் கொடுத்தார்.
அத்துடன் தனது மகன் எங்கே போனார் எனத் தெரியவில்லை எனவும் வீட்டிலிருந்த துப்பாக்கியை காணவில்லை எனவும் பொலிஸாரிடம் அவர் கூறினார்.
‘ஒரு ட்ரகனை நான் கொல்லப் போகிறேன். அதன்பின் பார்பரா எனக்குரியவளாகி விடுவார். அமெரிக்கா ஒழிந்து விடும். ஒபாமா முதலானவர்களும்’ எனவும் பெஞ்சமின் எழுதி வைத்திருந்ததாக மன்ஹெட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க சட்டத்தின்படி பதவியிலிலுள்ள ஜனாதிபதியையோ முன்னாள் ஜனாதிபதியையோ கொல்லப் போவதாக அச்சுறுத்துவது கிரிமினல் குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெஞ்சமின் ஸ்மித்தின் அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க இரகசிய சேவைப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து ஸ்மித்தின் செல்லிடத் தொலைபேசி மூலம் ஸ்மித்தை இரகசிய சேவைப் பிரிவினர் பின்தொடர்ந்தனர்.
மன்ஹெட்டன் நகர வீதியொன்றில் காரொன்றில் வைத்து ஸ்மித் கைது செய்யப்பட்டார்.
எனினும் ஸ்மித்தை ஜூரிகள் குற்றவாளியாக காண்பார்களா என்பது தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என ஆரம்ப வழக்கு விசாரணையை நடத்திய நீதிபதி ஹென்றி பிட்மன் தெரிவித்துள்ளார்.
பார்பரா புஷ்ஷின் மனதை வெல்வதற்கு அவரின் தந்தையை கொல்வதென்ற திட்டத்தில் தொடர்ச்சியின்மை காணப்படுவதாக நீதிபதி கூறினார்.
இதேவேளை, ஸ்மித்தின் ஆவேசக்கூற்றுகள் உண்மையான அச்சுறுத்தல் அல்ல என அவரின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கோல்டன்பேர்க் தெரிவித்தார்.
பார்பரா புஷ்ஷும் அவரின் இரட்டைச் சகோதரியான ஜென்னா புஷ்ஷூம் 1981 ஆம் ஆண்டு பிறந்தனர். ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் தாயாரும் பெயரே அவரின் மகள்களில் ஒருவருக்கும் சூட்டப்பட்டது.
யேல் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற அவர் குளோபல் ஹெல்த் கோர்ப்ஸ் எனும் லாபநோக்கற்ற அமைப்பின் இணை ஸ்தாபகராகவும் தலைவராகவும் விளங்குகிறார்.
ஒருபாலின சேர்க்கையாளர்கள், பால் மாற்றம் செய்து கொண்டர்களின் உரிமைகள் தொடர்பான பிரசார வீடியோவொன்றை அவர் 2011 ஆம் ஆண்டு வெளியிட்டமை குறிப்பிடத்தகக்து.
பார்பரா புஷ் இன்னும் திருமணம் செய்யவில்லை. பனாமாவல் பிறந்த ஓவியரான மிக்கி பப்ரிகா என்பவரை இவர் காதலிக்கிறார்.
அவரின் சகோதரி ஜென்னா புஷ் 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்ததுடன் ஒரு குழந்தையின் தாயாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating