அரசியல் தலைவர்களை கொன்றமை, மன்னிக்கவே முடியாத குற்றமாகும் : சி.வி.விக்கினேஸ்வரன்

Read Time:17 Minute, 56 Second

tna.vikki_maதம்முடைய கொள்கைகளுக்கு முட்டுக் கட்டைகளாக இருப்பார்கள் என்று எண்ணி எங்களுடைய அரசியல் தலைவர்கள் பலரை கொன்று குவித்தமை மன்னிக்க முடியாத குற்றமாகும் என நான் திடமாக நம்புகின்றேன்.

அரசியல் தலைவர்களை நாங்களே கொன்றுவித்தமையாலேயே எங்களை போன்ற ஓய்வுபெற்று ஒதுங்கி வாழ்ந்த மனிதர்களை அரசியலுக்குள் கொண்டு வந்துள்ளீர்கள் என வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வலி.தென்மேற்கு பிரதேசத்தில் இளைஞர்கழகங்களின் சம்மேளனத்தின் இரண்டாவது வருடாந்த மாநாடு மானிப்பாய் பிரதேச சபையின் கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்றபோது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மாணவர்களின் மனோநிலை பற்றி சிறிது அறிந்து கொள்வது நன்மை பயக்கும் என்று நம்புகின்றேன். அது என்ன மாணவ மனோநிலை என்று நீங்கள் கேட்கலாம். யதார்த்தத்துடன் ஒத்துப் போவதற்குப் பதிலாக அதை எதிர்ப்பது அதன் ஒரு அம்சம். பெரியவர்கள் அல்லது வயது சென்றவர்கள் அல்லது முதியவர்கள் தமது வாழ்க்கையில் ஆடிக் களைத்துப் பெரும்பாலும் நடைமுறையை ஏற்றே நடந்து கொள்ளத் தலைப்படுவார்கள்.

ஆனால் மாணவ பராயம், இளைஞர் பருவம் அப்படியல்ல. ஏன், எதற்காக, எப்படி, யாருக்காக என்று பல கேள்விகளைத் தொடர்ந்து முன்வைத்து நடைமுறையில் காண்பதை ஏன் நாம் ஏற்க வேண்டும் என்று சிந்திக்கத் தலைப்படுவார்கள் அவர்கள். அது இளைஞர்களின் அல்லது இளமையின் சுபாவம். பெரியவர்களான நாங்கள் இதனை மழுங்கச் செய்யவே முற்படுவோம்.

ஆனால் எங்கள் எச்சரிக்கைகளுக்கு மாறாகவே நடக்க முற்படுவர் இளம் பிராயத்தினர். அது அவர்களின் வயதின் சுபாவம். அந்த மனோநிலையை பெரியவர்களான நாங்கள் தான் அடையாளங் காண வேண்டும். அடுத்து தாம் நினைத்ததை எப்படியாவது முடித்துக் காட்ட வேண்டும் என்ற உத்வேகம் இளமைக்குத்தான் இருக்கின்றது.

இதனால்த்தான் முன்னர் செயற்கரியது என்று நாங்கள் சிந்தித்த பல காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடித்திருக்கின்றார்கள் இளைஞர்கள். புதிய சாதனைகள் என்று விளையாட்டுக்களில் நிலை நிறுத்தப்படுபவை எல்லாம் இளமையின் இந்த உத்வேகத்தின் பிரதிபலிப்பே.

மூன்றாவது ஒற்றுமைக்கு வித்திடக் கூடியவர்கள் இளைஞர்கள். முதியவர்கள் தான் அல்லது நான் என்ற சிறைக்குள் சிறைப்பட்டிருக்க, ஏதாவது ஒரு காரியத்தை நிலை நாட்ட வேண்டும் என்றால் காக்கைக் கூட்டத்திற்கு ஒப்பாகக் கரைந்து கூப்பிட்டுக் காரியத்தைச் சாதிக்க வல்லவர்கள் இளைஞர்கள், யுவதிகள்.

ஆகவே தான் முற்போக்கான சிந்தனை, முனைந்து செயலாற்றுந்திறன், முயன்று மற்றையவர்களையும் முன்னுக்கழைத்து ஒற்றுமையுடன் இயங்கும் அந்த மனோநிலை இளைஞர், யுவதிகளுக்குண்டு என்பதை நாங்கள் மறக்கக் கூடாது.

இன்று பல வழிகளிலும் உங்கள் உணர்வுகளை மழுங்கச் செய்ய அல்லது பிழையான வழிகளில் ஆற்றுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இளைஞர்களின் உணர்வுகள் எங்கே எங்களுக்குப் பாதகமாக ஆற்றுப்படுத்தப்பட்டுவிடுவனவோ என்று எண்ணிச் சிலரால் போதை மருந்துகள் போன்றவை இளைஞர், யுவதிகள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. வடமாகாணத்தில் உள்நுழையாதிருந்த இந்தப் பழக்கம் தற்போது பரவி, விரவி வருவதாக நான் அறிகின்றேன்.

இதை நீங்கள் உணர்ந்து அப்பேர்ப்பட்ட பொறிகளுள் அகப்படாமல் தப்பித்துக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் அண்மைக் காலங்களில் கணிகையர் இல்லங்கள் பல அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிகின்றேன். நாதியற்ற இளம் விதவைகள், வறுமையின் கோரப்பிடியில் வருந்தி நிற்கும் பல இளம் பெண்கள் இவ் இல்லங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதாக அறிகின்றேன்.

கொழும்பில் இருக்கும் போது பொலிசாரின் உதவியுடனும், இராணுவத்தினரை ஈர்ப்பதாகவும் நடாத்தப்படும் இப்பேர்ப்பட்ட சில இடங்கள் பற்றி எனக்குத் தகவல்கள் கிடைத்தன. எமது கலாசாரம், வாழ்க்கை முறை, உணர்வுபூர்வமான பாரம்பரியங்கள் யாவும் கைவிடப்படும் வகையில் இளைஞர்கள் மாற்றப்படுகின்றார்கள் என்றும் அறிந்தேன்.

பணம் ஒன்றே குறிக்கோளாகச் செயற்படும் பலரால் உங்கள் உள்ளங்களை வெறும் புலன் இன்பங்களில் லயிக்க வைத்து வாழ்க்கையில் நீங்கள் பெற வேண்டிய, அடைய வேண்டிய, அனுபவிக்க வேண்டிய உயர் இலக்குகளை அடையாது விடச் செய்ய சதிகள் நடக்கின்றன என்பதை நீங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டீர்களானால் உங்கள் உள்ளங்களை நீங்கள் பாதுகாத்துப் பக்குவப்படுத்துபவர்கள் ஆகிவிடுவீர்கள்.

சில்லறை இன்பங்களுக்கு இடங் கொடுத்தீர்களானால் காலக்கிரமத்தில் நோய்களும், வறுமை நிலையும் உங்களை வந்தடைவன என்பதை மறவாதீர்கள். சினிமாப் பாட்டு ஒன்று நினைவுக்கு வருகின்றது. கதவைச் சாத்தடி கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவைச் சாத்தடி என்று போகின்றது அந்தப் பாடல். அடுத்தது அறிவு. இளமையில் கல் என்றாள் ஒளவைப்பாட்டி. கல்விக்கு முதல் இடம் கொடுத்து வந்த இனம் எங்கள் இனம். போரினால்க் கல்வியைத் தொடர முடியாமல்ப் போனவர்கள் பலர்.

இதனால் எமது இனத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கின்றது. அதை நிரப்ப இளைஞர், யுவதிகள் முன்வர வேண்டும். எமது அரசியல்க் கட்சிகள் கூட வயது முதிர்ந்தவர்களைக் கொண்டே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.

அடுத்த கட்டத் தலைவர்களை, அறிவு முதிர்ந்த இளைஞர், யுவதிகளை நாங்கள் இப்பொழுதிருந்தே அடையாளங் கண்டு முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். உங்களில் பலர் என்னை ஏசினாலும், வைதாலுங் கூட ஒன்றைக் கூறி வைக்க விருப்பப்படுகின்றேன்.

அண்மைக் காலத்தில் எம்முடைய கொள்கைகளுக்கு முட்டுக் கட்டையாக இருப்பார்கள் என்று எண்ணி எங்கள் அரசியல்வாதிகள் பலரைக் கொன்று குவித்தது ஒரு மன்னிக்க முடியாத குற்றம் என்று நான் திடமாக நம்புகின்றேன்.

இன்று என்னைப் போன்ற ஒரு ஓய்வுபெற்று, ஒதுங்கி வாழ்ந்த மனிதனை அரசியலுக்குள் கொண்டு வந்திருக்கின்றீர்கள் என்றால் எங்கள் அரசியல் தலைவர்களை நாங்கள் கொன்று குவித்தது அல்லவா காரணம்? ஜனநாயகம் என்பதை உலகத்தின் பல நாடுகள் கட்டிக் காத்து வருகின்றன என்றால் அதற்குக் காரணம் வல்லாட்சி செய்வது வருத்தத்தையே உண்டுபண்ணும் என்பதை அவர்கள் கண்கூடாகக் கண்டது தான்.

எமது மக்கள் பிறநாடுகளுக்குச் சென்று கல்வியில் சிறந்து விளங்குகின்றார்கள். அப்படியானால் அவர்கள் உறவுகளான எங்களுக்கும் அது முடியும். சூழல்தான் நம்மை இதுவரை காலமும் தடுத்து வைத்துள்ளது.

இனி அப்பேர்ப்பட்ட தடுப்புக்களுக்கு இடங்கொடுக்காது நாங்கள் அறிவில் முன்னேற வழிவகுக்க வேண்டும். எங்கள் இளைஞர், யுவதிகள் முன்பு போலக் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். கடைசியாக ஆன்மீகம் பற்றி ஒரு சில வார்த்தைகள். ஆன்மீகம் என்றால் என்ன? என்னைப் பொறுத்த வரையில் நம்பிக்கைதான் ஆன்மீகம்.

தன்மேல் நம்பிக்கை வைத்திருப்பவனும் ஆஸ்தீகனே: இறைவன் மீது நம்பிக்கை வைத்திருப்பவனும் ஆஸ்தீகனே. கோயில்களுக்குப் போகும் எமது உறவுகள்தான் ஆஸ்திகர், ஆன்மீக வாதிகள் என்று நாங்கள் கூறமுடியாது.

ஊரில் பல ஊழல்களில் ஈடுபட்டுவிட்டு, கொலைகளில் ஈடுபட்டுவிட்டு, கொள்ளைகளில் ஈடுபட்டுவிட்டு, மக்களுக்கு மாறான செயல்களில் ஈடுபட்ட பிறகு கோயில்களுக்குச் சென்று தமது பாவங்களைத் தீர்த்து வைப்பதாக நினைத்துக் கொண்டு பல இலட்சங்கள் கொடுத்து ஆலயங்களைப் புனருத்தாரணம் செய்யும் பலரை நான் கண்டிருக்கின்றேன்.

ஆனால் முற்பகல் செய்த வினை பிற்பகல் விளையும் என்பதை அவர்கள் மறந்து விடுகின்றார்கள். தப்பிக்க வழியாகக் கோயில்களைப் புனருத்தாரணம் செய்பவர்கள் அந்த நல்ல கைங்கரியத்துக்கான நற்பலன் அனுபவிப்பார்கள். ஆனால் அவர்களின் முன்னைய பாவச் செயல்களின் தாக்கம் அதனால் குறைந்து போய்விடும் என்று எண்ணுவது மடைமை என்றே நான் நம்புகின்றேன். நம்பிக்கையுடன் வாழும் நல்ல குணமுடைய யாவரும் ஆன்மீகத்தில் சிறந்தவர்களே.

ஒருமுறை காசியில் இந்தச் சம்பவம் நடந்தது. காசியில் கங்கையில் மூழ்கினால் பாவங்கள் யாவும் மறைந்து புது மனிதர்கள் ஆவோம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஒரு முறை ஒரு இளம் பெண் கங்கையில் குளித்துக் கொண்டிருக்கும் போது கங்கையாற்றினால் அடிபட்டுச் செல்லப்பட்டாள். அவள் ஒரு குறைந்த சாதிப் பெண். கரையில் குளித்துக் கொண்டிருந்த எவருமே அவளைக் காப்பாற்ற முன்வரவில்லை. காரணம் தமக்குத் தீட்டுப் பற்றிவிடும் என்று! அப்படியானால் எந்தத் தீட்டும் கங்கையில் குளித்தால் போய்விடும் என்ற நம்பிக்கைக்கு என்ன நடந்தது?

அப்போது பாதையோரத்தில் முதல் நாள் நன்றாகக் குடித்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்த ஒருவன் மக்களின் கூக்குரல் கேட்டு விழித்துப் பார்த்தான்.

இளம் பெண் ஒருவள் கங்கையில் தத்தளித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். உடனே நீரில் குதித்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றிவிட்டு அங்கு தரித்துக் கூட இருக்காது, சுற்றியிருந்தவர்களின் புகழுரைக்குங் காத்திராது, நன்றியைக் கூட எதிர் பார்க்காமல் நடையைக் கட்டினான் அவன்.

மீண்டும் கள்ளுத் தவறணை நோக்கிச் சென்றானோ யார் கண்டார்கள்? அவன் குடிகாரன் என்றாலும் ஆன்மீகவாதியல்லவா? சுவாமி விவேகானந்தர் கூறுவார் வறிய மக்களும் வகையற்ற மக்களுமே எங்கள் கடவுள்கள் என்று. எனவே ஆத்மீகம் என்பது சேவை புரிவது புண்ணியச்செயல் என்பதை எமக்கு உணர்த்த வேண்டும்.

சேவை செய்வதே ஆத்மிகம். சேர்த்து வைப்பதும் கோயில்களுக்குச் செலவு பண்ணுவதும் ஆத்மீகம் அல்ல. அதற்காகக் கோயில்களுக்குச் செலவு பண்ணாதீர்கள் என்று நான் கூற வரவில்லை. கோயில் கட்டிடங்களில் நாங்கள் இறைவனைக் கண்டுவிடமுடியாது. அதனைக் கட்டுபவனின் மனப் பக்குவத்தில்த்தான் இறைவன் பிரகாசிக்கின்றான்.

இறைவனை அங்கு ஆகர்ஷிப்பவரின் அகத்தினில்தான் இறைவன் இருக்கின்றான். எனவே மனப்பக்குவம் என்று நான் கூறியது கோயில் கட்டும் போது கூட எம் உள்ளங்களில் இறைவனுக்குச் சேவை செய்கின்றோம் என்ற உணர்வு இருந்தால்த்தான் அங்கு ஆத்மீகம் நிலைக்க முடியும் என்பதையே. ஆகவே கோயில்கள் கட்டுவதாக இருந்தாலும் மக்கள் சேவை செய்வதாக இருந்தாலும் மனதிலே சேவை மனப்பான்மை மிளிர வேண்டும் அன்புப் பிரவாகம் வெளிவர வேண்டும்.

எமது வடமாகாணமானது இளைஞர் யுவதிகளின் சிரமதானத்தை அதாவது உடல் உழைப்புக் கொடையை எதிர் பார்த்து நிற்கின்றது. பல விதங்களில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டு எமது மக்களுக்குச் சேவையாற்றலாம் என்பதை மறந்து விடாதீர்கள். குப்பை கூளங்களைக் கூட்டாகச் சேர்ந்து அப்புறப்படுத்துவது முதல் குளங்களைச் சீர் செய்து கட்டுவது வரை பல பணிகளில் நாங்கள் ஈடுபடலாம்.

அதற்காக உங்களுக்கு எமது அலுவலர்கள், திணைக்களங்கள் உரிய அனுசரணையை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன். எனவே உங்கள் உடல், உள்ளம், அறிவு, ஆத்மா என்ற நான்கு அலகுகளையும் செம்மையாக வைத்திருக்க ஆவன செய்வது உங்கள் இளமைக் காலத்துப் பணிகள் ஆவன. உங்கள் சம்மேளனத்தினால் பலவிதமான மக்களுக்கு நன்மை பயக்குந் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வரப்படுகின்றன என்பதை நான் அறிவேன்.

உதாரணத்திற்கு இளைஞர் கரங்களால் இளைஞர்களுக்கான வீடுகள் என்ற திட்டம் சில காலத்திற்கு முன்னர் உங்களால் பூர்த்தி செய்யப்பட்டது என்பதை அறிய வந்திருந்தேன். சுதுமலை வடக்கு இளைஞர் கழகம் வறுமைப் பட்ட மக்களுக்கான மலசலகூட வசதிகளைத் தமது முழுமையான பங்களிப்புடன் அமைத்துக் கொடுத்ததாகவும் அறிந்தேன்.

இவ்வாறான பல திட்டங்களில் மக்கள் சேவைப் பணிகளில் ஈடுபடும் நீங்கள் எமது இளைஞர் சமுதாயத்திற்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்றீர்கள். மேலும் மேலும் எமது இளைஞர் யுவதிகள் இப்பேர்ப்பட்ட பணிகளில் ஈடுபட்டு நலிவடைந்த எமது மண்ணை நயம் மிக்கதாக்க வேண்டும்.

வெளியாரிடம் கையேந்தாமல் எமது கடமைகளை நாமேயாற்றி நன்மை பெறுவோமாக! ஆனால் வெளியாளர்களின் உதவியுடனான பாரிய திட்டங்களை நாம் வரவேற்கின்றோம். ஆனால் அவற்றிற்காகக் காத்து நின்று எமது மக்களைப் பரிதவிக்க விடாமல் நல்லதொரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப இளைஞர் யுவதிகளான நீங்கள் ஒன்று திரண்டு முன்வாருங்கள் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் ஊடகவியலாளர் படுகொலை தொடர்பாக பெயின்டர் கைது
Next post ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷை கொலை செய்து, அவரின் மகளின் காதலை பெற முயன்ற நபர் கைது