விடுதலைப்புலி என பிரான்ஸில் ஒருவர் கைது: தாமாகவே போலீஸ் ஸ்டேஷன் சென்று சிக்கினார்!

Read Time:7 Minute, 57 Second

20140131-1விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் என பிரான்ஸில் வைத்து கைது செய்யப்பட்ட ஜயந்தன் தர்மலிங்கம் என்பரை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகிறது. பிரான்ஸ் போலீஸால் கைதுசெய்யப்பட்டுள்ள இவர், இலங்கையில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டபின், வெளிநாடு சென்றார் என சர்வதேச போலீஸில் (இன்டர்போல்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் யுத்தம் புரிந்த காலத்தில், தலைநகர் கொழும்புவில் இவர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என இவர்மீது இன்டர்போலில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, செப்டெம்பர் 16-ம் தேதி, கொழும்பு ஹோர்டன் பிளேஸ் பகுதியில், அரசு பஸ் ஒன்றில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு, இவரால் நடத்தப்பட்டது என தமது புலனாய்வில் தெரியவந்துள்ளதாக, இலங்கை தீவிரவாத தடுப்பு பிரிவு கூறுகிறது.

செப்டெம்பர் 16-ம் தேதி வெடித்த தடம் இலக்கம் 155 பஸ்.

செப்டெம்பர் 16-ம் தேதி கொழும்புவில் வெடித்த தடம் இலக்கம் 155 பஸ்.

மொரட்டுவ என்ற இடத்தில் இருந்து மட்டக்குளிய என்ற இடத்தை நோக்கி சென்ற அரசு பஸ் (தடம் இலக்கம் 155) ஹோர்டன் பிளேஸ் பகுதியில் மதியம் 1.50க்கு சென்று கொண்டிருந்தபோது, அதனுள் மர்ம பார்சல் ஒன்று இருப்பதாக பயணிகள் தெரிவித்தனர். அந்த பார்சலை எடுத்துவந்த நபர், பார்சலை விட்டுவிட்டு இறங்கி சென்றதாலேயே, பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, பஸ் கண்டெக்டர் அவைரையும் பஸ்ஸில் இருந்து இறங்கும்படி தெரிவித்தார். பயணிகள் இறங்கிய சில நிமிடங்களில், பஸ் வெடித்துச் சிதறியது (பார்க்க போட்டோ)

விசாரணையில் இருந்து பார்சலை பஸ்ஸில் வைத்துவிட்டு சென்ற நபர், ஜயந்தன் தர்மலிங்கம் என்பவர் என, இலங்கை தீவிரவாத தடுப்பு பிரிவினர் பதிவு செய்திருந்தனர்.

கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் யுத்தம் முடிந்தபின், தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விடுதலைப்புலிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது, பழைய சம்பவங்கள் பற்றிய பல தகவல்கள் கிடைத்தன. அந்த தகவல்களின் அடிப்படையில், 2008-ம் ஆண்டு கொழும்புவில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் ஒன்று பற்றிய விபரங்களும் கிடைத்தன.

மே மாதம் 16-ம் தேதி கொழும்பு கோட்டை பகுதியில் தற்கொலை தாக்குதலுக்காக வந்த ஒருவர், மதியம் 12.05க்கு போலீஸாரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றின்மீது, மோட்டார் பைக்கில் சென்று மோதி வெடித்தார். அந்த பஸ் வெடித்துச் சிதறியது. அதில் 10 பேர் கொல்லப்பட்டனர். 95 பேர் காயமடைந்தனர். கொல்லப்பட்ட 10 பேரில் 7 பேர் போலீஸார்.

இந்த தாக்குதலை திட்டமிட்டு, குண்டை வெடிக்க வைத்தவருக்கு வெடிகுண்டு பொருத்தப்பட்ட மோட்டார் பைக்கை கொடுத்தவரின் பெயர், முகுந்தன் என்ற விபரம் கிடைத்தது. மேலதிக விசாரணையில், முகுந்தன் என்பவரின் நிஜ பெயர், ஜயந்தன் தர்மலிங்கம் என்று தெரியவந்தது.

அதையடுத்து செப்டெம்பர் 16-ம் தேதி அரசு பஸ்ஸில் குண்டுவைத்த அதே ஜயந்தன் தர்மலிங்கம்தான் இவர் என்ற முடிவுக்கு வந்தது, இலங்கை தீவிரவாத தடுப்பு பிரிவு.

தொடர்ந்து ஜயந்தன் தர்மலிங்கம் பற்றி விசாரித்தபோது, அவர் வெளிநாடு சென்றுவிட்டார் என தெரியவந்தது. அதையடுத்து, அவர் பற்றிய விபரங்கள் சர்வதேச போலீஸ் இன்டர்போலுக்கு தெரிவிக்கப்பட்டு, தேடப்படுவோர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

இந்தமாதம் (ஜனவரி, 2014) பிரான்ஸ், பாரிஸ் புறநகரப் பகுதியில் ஜயந்தன் தர்மலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த தகவல், இன்டர்போலுக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மூலமாக இலங்கை போலீஸூக்கு தெரிவிக்கப்பட்டது. இவரை தம்மிடம் ஒப்படைக்கும்படி, இலங்கை போலீஸ் இன்டர்போலுக்கு அறிவித்தது.

“இவரை நாடுகடத்துவது தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் ராஜதந்திர தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்” என, இலங்கை போலீஸ் செய்தி தொடர்பாளர் எஸ்.எஸ்.பி. ரோஹன தெரிவித்தார்.

அதன்பின் இவரை பிரான்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பிரெஞ்ச் போலீஸ், “இவரை இலங்கைக்கு நாடுகடத்த உத்தரவு வழங்க வேண்டும்” என மனு செய்தனர். அந்த அடிப்படையிலேயே இவர் இலங்கைக்கு நாடுகடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

சரி. இந்த ஜயந்தன் தர்மலிங்கம் என்பவரை எப்படி பிடித்தார்கள் பிரெஞ்ச் போலீஸ்? இலங்கை விவகாரத்தில் அவ்வளவு கண்ணும் கருத்துமாக உள்ளார்களா அவர்கள்?

அப்படி ஏதுமில்லை. இவரை அவர்களாக பிடிக்கவில்லை. இவரே போய் போலீஸில் அகப்பட்டுக் கொண்டார்.

இந்த ஜயந்தன் தர்மலிங்கம் என்பவர், தாமாகவே பாரீஸ் புறநகரப் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு போனார். அவர் அங்கு சென்றது, தாம் பணிபுரியும் இடத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என புகார் செய்வதற்காக.

புகாரை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் நடைமுறையில், இவரது பெயரை பதிவு செய்யப்போக, இவரது பெயரில் இன்டர்போலின் சர்வதேச வாரண்ட் பென்டிங்கில் உள்ளது என தெரிவித்தது, போலீஸ் கம்ப்யூட்டர். அதையடுத்தே இவர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக பிரெஞ்ச் போலீஸ் தகவல் தொடர்பாளர் விம் ஸ்னூவியை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, “இலங்கை போலீஸ், இன்டர்போலிடம் கொடுத்துள்ள போட்டோ, மற்றும் அடையாளங்கள் இவருடன் பொருந்திப் போனால், இலங்கைக்கு நாடுகடத்தப்பட சந்தர்ப்பம் உள்ளது” என்றார்.

“அடையாளங்கள் பொருந்துகின்றனவா?” என்று கேட்டபோது, பதிலளிக்க மறுத்து விட்டார் விம் ஸ்னூவி.  “அதை கோர்ட்டில்தான் தெரிவிப்போம்” என்றார் அவர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்பள்ளி சிறுமி துஷ்பிரயோகம்; 15 வயதுச் சிறுவன் கைது
Next post இளைஞரை கடத்திச் சென்ற, பெண் பரிசோதகர் தொடர்பில் விசாரணை