பத்மபூஷன் மேலும் எனக்கு சமூகப் பொறுப்பை கொடுக்கிறது -வைரமுத்து
”நீங்கள் படைத்த படைப்பில் பிடித்த படைப்பு எது என்று கேட்கிறார்கள். அது நாளை எழுதப்போகும் படைப்புதான். இதுவரை எழுதிய எழுத்துக்களெல்லாம் பயிற்சிகளும், முயற்சிகளுமே.
ஒரு மிகச்சிறந்த படைப்பை நோக்கி பயணப்படுவதற்கு இந்தப்படைப்புகள் எல்லாம் துணை நிற்கின்றன என்றே நினைக்கிறேன்!” என்று வைரமுத்து கூறியிருக்கிறார்.
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது பெற்றது குறித்து கவிப்பேரரசு வைரமுத்து தி இந்தி பத்திரிகைக்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விருது குறித்த மகிழ்ச்சி பற்றி?
ஒரு விருது, விருதைப் பெற்றவனுக்கு கொடுக்கும் மகிழ்ச்சியைவிட அந்த விருது பெற்றவன் சார்ந்திருக்கிற சமூகம் அடைகிற மகிழ்ச்சித்தான் பெரிது. இதில் நான் அடைகிற மகிழ்ச்சி சிறிது. நான் சார்ந்திருக்கிற சமூகம் அடைகிற மகிழ்ச்சி பெரிது. அதனால் அந்த மகிழ்ச்சி அந்த விருதை பெருமை உடையதாகவும், சிறப்பு மிக்கதாகவும் மாற்றியிருக்கிறது. எனவே அந்த விருதின் பெருமை சமூகத்தின் சந்தோஷத்தைப் பொருத்து அதிகமாகிறது.
உங்களோடு சேர்ந்து விருது பெருவதில் சந்தோஷம் என்று கூறியிருக்கிறாரே, கமல்?
எனக்கும் மகிழ்ச்சிதான். பத்மஸ்ரீ விருதைப்பெற்றபோது, நான் மிகவும் நேசித்த இசைஅரசர் டி.எம்.சௌந்தர்ராஜனோடு சேர்ந்து பெற்றேன்.
அது எனக்கு பெருமை. பழக அருமையான நண்பர், கமல். என் நேசிப்புக்குரிய இரண்டு சாதித்த மனிதர்களோடு பெறுவதும் பெருமை. கமலும், நானும் ஒரே வயதுடையவர்கள்.
கலைத்துறையில் என்னை விட 20 ஆண்டுகள் மூத்தவர். நான் 80 களில் வந்தேன். அவர் 60 களில் வந்தார். என் சம வயது கொண்ட ஆனால் என்னை விட 20 வயது மூத்த கலைஞனோடு சேர்ந்து விருதைப் பெருவதில் மகிழ்ச்சி.
உங்களது அடுத்த கட்டம்?
என்னைப்பார்த்து ஏற்கனவே ஒரு கேள்வியை கேட்டார்கள். நீங்கள் படைத்த படைப்பில் உங்களுக்கு பிடித்த படைப்பு எது என்று. நாளை எழுதப்போகும் படைப்பு என்றேன். இதுவரை எழுதிய எழுத்துக்களெல்லாம் பயிற்சிகளும், முயற்சிகளும்தான். ஒரு மிகச்சிறந்த படைப்பை நோக்கி பயணப்படுவதற்கு இந்தப்படைப்புகள் எல்லாம் துணை நிற்கின்றன என்றே நினைக்கிறேன். எனவே இந்த விருது எனக்கு இன்னும் சமூக பொறுப்பை கொடுக்கிறது. இன்னும் வாழ்விலும், படைப்பிலும் செம்மை சேர்க்க வேண்டும் என்ற பொறுப்பை கொடுக்கிறது. எனவே என் பழைய படைப்பைவிட மேம்பட்ட படைப்பை கொடுக்க முயல்கிறேன். காலமும், அனுபவமும் அதை செய்து முடிக்கும் என்று நம்புகிறேன்.
இங்கே உயரிய விருதுகளால் இன்னும் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் யார் யார்?
ஒரே ஒரு ஏக்கம் இருக்கிறது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன்.
அவரது பாடலை கேட்டு வளர்ந்தவர்கள், நாங்கள். அவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் எல்லாம் பொருந்தாது. பத்மவிபூஷன் வழங்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
எவ்வளவு பெரிய இசை கலைஞர். தமிழ்நாட்டை 25 ஆண்டுகளாக இசையால், தமிழால் தாலாட்டிய பெருமகன். இந்த விருதைப்பெறக்கூடிய மூத்த தகுதியானவர் என்று அவர் தான் ‘பளிச்’ என்று நினைவுக்கு வருகிறார். இன்னும் பலப்பேர் இருக்கலாம். அவர்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் ‘பளிச்’ அகப்படுபவர்.
உங்களது அடுத்தப் படைப்பு?
படைப்புக்கான கருவை நெஞ்சில் வளர்த்துக்கொண்டே இருக்கிறேன். அது ஈழம் சார்ந்த படைப்பாக இருக்கும்.
Average Rating