“கே.பி.” நடத்தும், “செஞ்சோலை” சிறுவர் இல்லத்தின் 1-வது ஆண்டு நிறைவு!
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பிரமுகர் ‘கே.பி.’ என்று அறியப்பட்ட திரு பத்மநாதனால் நடத்தப்படும் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் முதலாம் ஆண்டு நிறைவு விழா, சிறுவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட ஆரம்பக் கல்விப்பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.கணேசலிங்கம், கிளிநொச்சி மாவட்டம் உளவளத்துணை அதிகாரி திரு.துஸ்யந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருந்தினர்களுக்கு சிறுவர்களால் பூக்கொத்து கொடுக்கப்பட்டு வரவேற்கப்பட்டு தேசியக் கொடி, செஞ்சோலை கொடி, NERDO கொடி ஏற்றப்பட்டு பின்னர் நிகழ்வு மண்டபத்தில் கடவுள் வாழ்த்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
செஞ்சோலை இல்லத்தின் தந்தையும், NERDO நிறுவன செயலருமான திரு.பத்மநாதன் பேசிய போது, “சிறுவர் இல்லங்களை நடாத்துவதற்கும் வாய்பளித்த அன்பு உள்ளங்களுக்கு முதலில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
10 குழந்தைகள், ஒரு தங்கும் விடுதியுடன் ஆரம்பித்த செஞ்சோலை, தற்போது 88 சிறுமிகள், 2 தங்கும் விடுதிகளுடன் இயங்கிக் கொண்டு உள்ளது.
கிளிநொச்சியில் சிறுமிகளுக்காக இந்த இல்லத்தை நடத்துவதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுவர்களுக்காக ஒரு இல்லம், சிறுமியருக்காக மற்றுமோர் இல்லம் என மொத்தம் 3 இல்லங்களை கே.பி. நடத்தி வருகிறார்.
மூன்று இல்லங்களிலுமாக சேர்த்து, 300 குழந்தைகள் தங்கி, கல்வி பயில்கின்றனர்.
இல்லங்களில் அன்பு, ஒழுக்கம், கல்வியுடன் பிள்ளைகளை வளர்த்து வருவதாகவும் இதில் ஓரளவு வெற்றியும் அடைந்ததாக குறிப்பிட்ட கே.பி., செஞ்சோலை இல்லத்திற்கு இன்னொரு தங்கும் விடுதி தேவை என்பதையும், சிறுவர்களுக்கான இல்லம் புதிதாக அமைக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
புதிய இல்லம் அமைப்பதற்கும், தற்போதுள்ள இல்லங்களை நல்ல முறையில் நடத்துவதற்கும் நல் உள்ளங்கள் உதவிபுரிய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார் திரு பத்மநாதன்.
Average Rating