தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை விழாவில் மகிந்தவும், விக்கினேஸ்வரனும்!
யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி தெல்லிப்பளையில் 300 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புற்றுநோய் வைத்தியசாலையை திறந்து வைத்துள்ளார். வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனும் இந்த விழாவில் கலந்து கொண்டார்.
இப்புற்றுநோய் வைத்தியசாலையை புதிதாக நிர்மாணிக்கும் பொருட்டு டிரைல் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரும் “மாஸ் இன்டிமேட்” நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நாதன் சிவகணநாதன் மற்றும் சரித்த உனப்புவ ஆகியோர் தலைமையில் தெற்கே தெய்வேந்திரமுனை முதல் வடக்கே பருத்தித்துறை வரையில் பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டதன் பயனாக 300 மில்லியன் ரூபா நிதியினை சேகரித்திருந்தனர்.
2011 ம் ஆண்டு தொடங்கப்பட்ட 670 கிலோ மீற்றர் தூரம் கொண்ட இந்தப் பாதயாத்திரையின் போது 35,000 பேர் கலந்து கொண்டனர். ஆனால், 12 பேர் மட்டுமே முழுமையாக பாதயாத்திரையை முடித்திருந்தனர்.
2,50,000 பேர் வழி நெடுகிலும் இனமத பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து, உதவிகளைப் புரிந்துள்ள நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களும், புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களும் இந்த வைத்தியசாலை அமைய தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
வைத்தியசாலை அமையப் பெற்றுள்ள நிலத்தை பிரபல தொழில் அதிபர் ஈ.எஸ்.பி நாகரட்ணம், யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த மாணிக்க சோதி ஆகியோர் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
மாணிக்கசோதி, பிரேமதாசா ஆட்சிக்காலத்தில் விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாக சென்று அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியவர். அதையடுத்தே, புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் இலங்கை வந்து, புலிகளுக்கும் பிரேமதாச அரசுக்கும் இடையே இணக்கப்பாடு ஏற்பட்டது.
பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டமையப் பெற்றுள்ள இவ் வைத்தியசாலையில் பிரத்தியேகமான பெண்கள் விடுதி, ஆண்கள் விடுதி, அவசர சிகிச்சைப் பிரிவு, சிறுவர் விடுதி, சிறுவர் பூங்கா என்பன அமைக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக 120 படுக்கைகளும் போடப்பட்டுள்ளன.
வைத்தியசாலையினை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து, நினைவுக்கல்லையும் திரைநீக்கம் செய்து வைத்ததுடன் வைத்தியசாலையின் ஏனைய தொகுதிகளையும் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார். அத்துடன், அதியுயர் கதிர்வீச்சு பிரிவு அமையப் பெறவுள்ள புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டி வைத்தார்.
முன்பதாக பிரதான வாயிலிலிருந்து மங்கள வாத்தியம் சகிதம் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மைத்திரிபால சிறிசேன, வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க சகிதம் சிறப்புப் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.
நடைபயணத்தை தொடங்கி இறுதிவரை நிறைவு செய்த 12 பேருக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கவர்ஸ் ஒப் கரேஜ் விருது வழங்கி கௌரவித்தார்.
Average Rating