இறந்ததாக அறிவித்த 15 மணி நேரத்துக்கு பின் பிணவறையில் இருந்து நடந்து வந்த வாலிபர்
கென்யா தலைநகர் நைரோபி அருகேயுள்ள நவியாஷா மாவட்டம், லிமுரா நகரை சேர்ந்தவர் பால் முட்டோரா (24). திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தையுமான இவர் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து போனார்.
இந்த வாழ்க்கையை விட செத்துப் போவதே மேல் என முடிவு செய்த பால் முட்டோரா, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார்.
வாயில் இருந்து நுரை தள்ளிய நிலையில் குற்றுயிராய் மயங்கி கிடந்த மகனை பார்த்து பதறிப்போன தந்தை அவரை தூக்கிச் சென்று நவியாஷா அரசு ஆஸ்பாத்திரியின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தார்.
ரத்தத்தில் பரவிப்போன விஷத்தை முறியடிப்பதற்காக மாற்று சிகிச்சை அளித்த டாக்டர்கள் தொடர்ந்து அவரை கண்காணித்து வந்தனர்.
இருப்பினும், கடந்த புதன்கிழமை நள்ளிரவில் அவரது நிலைமை மிகவும் மோசமடைந்தது. உயிரை காப்பாற்ற வெகுநேரம் போராடிய டாக்டர்கள் இறுதியில் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
வாழ வேண்டிய வாலிப வயதில் அரை ஆயுளிலேயே பிணமாகி விட்ட பால் முட்டோராவின் பிரேதத்தின் மீது விழுந்து துக்கத்தில் கதறியழுத உறவினர்கள் பிணத்தை வீட்டுக்கு எடுத்து செல்வதாக தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை செய்யாமல் பிணத்தை தர முடியாது என மறுத்துவிட்ட அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், மறுநாள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பிணத்தை பெற்று செல்லலாம் என்று தெரிவித்தனர்.
கடந்த வியாழக்கிழமை அதிகாலை தூரத்து உறவினர்களுக்கு எல்லாம் தகவல் தெரிவித்த பால் முட்டோராவின் தந்தை, சவ அடக்கத்துக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய சோகத்துடன் வீட்டுக்கு சென்றார்.
இந்நிலையில், பிணவறைக்குள் இருந்து முனகல் சத்தம் வருவதை கேட்ட ஆஸ்பத்திரியின் காவலாளி, பதறியபடி ஓடிச்சென்று டாக்டர்களுக்கு தகவல் அளித்தார்.
டாக்டர்கள் குழு பிணவறையை நோக்கி வருவதற்குள் மயக்கம் தெளிந்து எழுந்த பால் முட்டோரா, தட்டுத் தடுமாறி வெளியே வர முயன்று, மீண்டும் மயங்கி வாசலருகே சுருண்டு விழுந்தார்.
அதைக்கண்டு அதிர்ந்துப்போன டாக்டர்கள் அவரை அள்ளிச்சென்று மீண்டும் அவசர சிகிச்சை பகுதியில் படுக்க வைத்து செயற்கை சுவாசம் உள்ளிட்ட முதலுதவி சிகிச்சையின் மூலம் உயிர் பிழைக்க வைத்தனர்.
உயிருடன் இருந்த ஒருவரை இறந்துப் போனதாக அறிவித்தது எப்படி? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அரசு ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர் ஜோசப் முபுரு, ‘பொதுவாக விஷ முறிவுக்கான மாற்று சிகிச்சை அளிக்கும் போது சற்று வீரியமான மருந்துகளையே பயன்படுத்துகிறோம்.
இவ்வகையிலான சிகிச்சையின் போது நோயாளியின் இதயத்துடிப்பு வெகுவாக குறைந்து விடும். அத்துடன் கண் விழியின் ஒளித்திரையும் உயிரிழந்த நபர்களுக்கு உள்ளது போல் மங்கலாக தோன்றக்கூடும்.
இந்த அறிகுறிகளை வைத்து பணியில் இருந்த டாக்டர்கள் நோயாளி இறந்து போனார் என்று முடிவு செய்து விட்டிருக்கலாம்.
இச்சம்பவத்தின் போது பணியில் இருந்த டாக்டர்களிடம் விசாரணை நடத்தி, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.
பிணம் என்று அறிவிக்கப்பட்ட மகன் மீண்டும் உயிரோடு இருக்கும் தகவலையறிந்து விரைந்தோடி வந்த தந்தை பால் முட்டோராவை கட்டித் தழுவிக் கொண்டு ஆனந்த கண்ணீர் வடித்தார்.
‘அப்பா.., என்னை மன்னித்து விடுங்கள். நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். இனி மேல் என்ன பிரச்சனை வந்தாலும் அவற்றை தைரியமாக எதிர்கொண்டு, வைராக்கியத்துடன் வாழ்ந்து என் மனைவியையும், குழந்தையையும் காப்பாற்றுவேன்’ என்று பால் முட்டோரா தந்தைக்கு அழுதபடி வாக்குறுதி அளித்தார்.
Average Rating