குளிரில் விறைக்கிறது வட அமெரிக்கா! வடை சாப்பிட்டாலும், கடைவாயில் கடிபடுகிறது ஐஸ்!!
வட அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக இருந்த மோசமான காலநிலை பற்றி ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். நிலைமை மேலும், மேலும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. இன்று அதிகாலை கனடாவின் டொரண்டோ விமான நிலையம், மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. எந்தவொரு விமானமும் லேன்ட் செய்ய இன்னமும் அனுமதி கொடுக்கப்படவில்லை.
நேற்று இரவே, ஏர்லைன்ஸ் கௌண்டர்களுக்கு முன்னே பயணிகள் வரிசை டேர்மினலின் இந்த முனையில் இருந்து அந்த முனைவரை நீண்டிருந்தது. எல்லோருமே, விமானங்கள் தாமதமாகிய, அல்லது ரத்து செய்யப்பட்டதால் வரிசையில் காத்திருந்த பயணிகள்தான்.
இன்று இந்த வரிசை இன்னமும் நீளமாக போகிறது.
கடந்த சில தினங்களாகவே கிழக்கு கனடாவின் சில பகுதிகளில் அவ்வப்போது பெரிய ஓசைகள் கேட்கின்றன. இதைத்தான் ‘பனி பூகம்பம்’ (snow quake அல்லது frost quake) என்கிறார்கள். இது எப்படி ஏற்படுகிறது என்றால், குளிர் தண்ணீரின்மேல், பனி பொழிவுகள் ஏற்பட்டு, பனி மலைபோல சேர்ந்து விடுகிறது.
இந்த பனி மலைக்கு கீழே குளிர்ந்த தண்ணீர் உள்ளது அல்லவா? அது ஐஸ் ஆக மாற தொடங்குகிறது.
தண்ணீர் ஐஸ் ஆக மாறும்போது, அதன் கன அளவு அதிகரிக்கும் (வீட்டில் உள்ள freezer-ல் பாட்டில் தண்ணீரை வைத்தால், அது ஐஸ் ஆகும்போது வெடிப்பது, இதனால்தான்)
மலைபோல குவிந்துள்ள பனிப்படிவுகளின் கீழ் உள்ள தண்ணீர் ஐஸ் ஆகும்போது, freezer தண்ணீர் பாட்டிலின் கதிதான் ஏற்படுகிறது. பெரிய சத்தத்துடன் வெடிக்கிறது. பனி பூகம்பம் என குறிப்பிடப்படும் இது, கிழக்கு கனடாவில் ஆங்காங்கே கேட்கிறது. எப்படிங்க உள்ளது நம்ம நிலைமை?
அமெரிக்காவிலும் நிலைமை மோசம்தான். குத்தும் குளிருடன் கூடிய காற்று பல பகுதிகளில் அடிக்கிறது. வடகிழக்கு அமெரிக்கா இன்று கடும் குளிரால் தாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்று மட்டும் சுமார் 3,000 விமான சேவைகள் ரத்தாகின. இன்றும் அதே நிலைமை தொடரும் என்றே தெரிகிறது.
வடகிழக்கில் கிட்டத்தட்ட அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. பெரும்பாலான வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
கிழக்கு, மற்றும் மத்திய கனடாவில் உள்ளதுபோல, தென்கிழக்கு அமெரிக்காவின் சில பகுதிகளிலும் வெப்பநிலை பூச்சியத்துக்கு கீழ் (மைனஸ்) 40 டிகிரிவரை உள்ளது.
நியூயார்க், மற்றும் பாஸ்டனில் நிலைமை இவ்வளவு மோசமில்லை என்றாலும், மற்றைய பகுதிகளில் காலநிலையால் ஏற்பட்ட தாக்கம் இங்கும் பிரதிபலிக்கிறது.
நேற்று (திங்கட்கிழமை) JetBlue ஏர்வேஸ் நியூயார்க், மற்றும் பாஸ்டனுக்கான தமது அனைத்து விமான சேவைகளையும் கேன்சல் செய்தன.
காரணம், மற்றைய இடங்களில் இருந்து வரும் விமானங்கள்தான், இங்கிருந்து கிளம்பி செல்ல வேண்டும். வெளியிடங்களில் இருந்து விமானங்கள் வந்து சேர்வதாக இல்லை.
சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், நேற்று மதியத்தில் இருந்து சிக்காகோ மிட்வே விமான நிலையத்தில் இருந்து கிளம்ப வேண்டிய அனைத்து விமான சேவைகளையும் கேன்சல் செய்வதாக அறிவித்தது. இன்று சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுமா என்பது தெரியவில்லை. ஆரம்பிக்கப்பட்டாலும், ஏர்போர்ட் ஒரே மெஸ்ஸியாக இருக்கும்.
நேற்றில் இருந்து பயணிகள் அங்கு காத்திருக்கிறார்கள்…
(விறுவிறுப்பு)
Average Rating