குடும்ப அரசியலால் குழம்பிப் போயுள்ள தமிழ்மக்கள்..! -நெற்றிப்பொறியன்
வவுனியா சாஸ்திரி கூழாங்குளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அமைச்சர் சத்தியலிங்கம் 1970 நாடாளுமன்றத் தேர்தலில் வவுனியாவில் போட்டியிட்ட எஸ். பத்மநாதனின் மகன் ஆவார். இவர் மருத்துவத் துறையில் சோவியத் ஒன்றியத்தில் பட்டம் பெற்றவர். பல ஆண்டுகளாக அரச மருத்துவ அதிகாரியா கப் பணியாற்றியுள்ளார்.
சட்ட மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் துறைக ளிலும், திட்டமிடல் மற்றும் நிறைவேற்றுச் செயல்பாடுகளிலும் பங்களாதேஷ் பிலிப்பைன்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளில் பயிற்சி பெற்றிருக்கிறார். வவுனியா, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் சுகாதார வைத்திய அதிகாரி, பிராந்திய வைத்திய அதிகாரி, மருத்துவ அத்தியட்சகர் ஆகிய பதவிகளில் பணியாற்றியுள்ளார். இலங்கை செஞ்சிலுவைச் சங்க வவுனியா கிளைத் தலைவராக பத்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
இவர் 2013 வட மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்டு 19,656 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபை உறுப்பினரானார். வட மாகாண சபையின் சுகாதார சேவை, சுதேச மருத்துவ அமைச்சராக முதலமைச்சரினால் பரிந்துரைக்கப்பட்டு 2013 ஒக்டோபர் 11 இல்; மாகாண சபை உறுப்பினராகவும், அமைச்சராகவும் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
வடமாகாணசபைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டு வவுனியா மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று சுகாதாரத்துறை அமைச்சராகத் தெரிவுசெய்யப்பட்ட அரசியல்அனுபவமில்லாத அமைச்சர் திரு சத்தியலிங்கம் அவர்கள் அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் சார்ந்தோருக்கு அரச தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்திருப்பது இன்றைய சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பான செய்தியாகப் பேசப்பட்டு வருகிறது.
அமைச்சரின் சகோதரன், மனைவி, பெறாமகன், மைத்துனன் ஆகியோர் அரச தொழில்களைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில் அமைச்சரின் கிளினிக்கில் வேலை செய்தவர் P.A ஆகவும் நியமனம் பெற்றுள்ளனர்.
இவ்விடயம் குறித்து சமூக வலைத்தளங்கள் சத்தியலிங்கம் ஐயாவின் குடும்பஅரசியல் எனும் பார்வையில் பலவகையான செய்திகளையும் வெளியிட்டுள்ளன. இலங்கையில் பெரும்பான்மை அரசாங்கத்தின் குடும்ப அரசியலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்மக்கள் வடமா காணசபையின் வருகையை தொடர்ந்து சில நம்மைகளை எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தேர்தல் முடிந்து 3மாதங்களுக்குள்ளாகவே அமைச்சரின் தனது விருப்புக்குரியவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்திருப்பதானது மக்களிடையே பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கில் படித்த பல இளைஞர், யுவதிகள் இன்று வேலைவாய்ப்புக்களின்றி வீதிகளில் அலைந்து கொண்டிருக்கின்றனர்.தொழிலின்மை ஒருபுறமிருக்க வைத்தியத்துறை சார்ந்த எத்தனையோ பிரச்சினைகள் வடக்கில் பல கிராமங்களில் இன்றும் இருக்கின்றன. தீர்க்கப்படவேண்டிய எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் இவைகுறித்து கருத்துக்களை அமைச்சர் வெளியிட்டாலும் அமைச்சரின் மேற்குறிப்பிட்ட செயற்பாடு பெரும் அதிருப்தியை யாவரிடத்திலும் ஏற்படுத்தியுள்ளது.
வடமாகாண சபைத் தேர்தல் காலத்திலிருந்தே கட்சிக்குள் பலத்த வார்த்தை மோதல்களும், முரண்பாடுகளும் நேரடியாகவே வெளிப்பட்டிருந்தன. பதவிகளுக்கு ஆசைப்பட்டே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அங்கத்தவர்கள் தமக்குள் முரண்பட்டுக் கொள்கின்றனர் என்ற செய்தியை அனைத்து ஊடகங்களும் அப்போது வழங்கியிருந்தன. இந்நிலையில் வடமாகாணசபையின் அதிகாரமற்ற செயற்பாடுகள் இப்போது ஆரம்பித்துள்ள நிலையில் பழைய விடயங்களைப் பற்றிப் பேசவேண்டிய தேவை இல்லை. ஆனாலும் தொடர்ந்தும் கட்சி உறுப்பினர்களின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ள மக்கள் விசனத்தை வெளிப்படுத்துகின்றனர்.
குறிப்பாக வடக்கில் சுகாதாரத்துறையில் காணப்படும் பிரச்சினைகளாக பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மருத்துவ நிலையங்களில்; வைத்தியர்களுக்கான பாரிய பற்றாக்குறை நிலவுகின்றது.தற்பொழுது வடமாகாணத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் 99 வைத்தியசாலைகளில் 54 பிரதேச வைத்தியசாலைகளும் 34 ஆரம்ப சுகாதார மருத்துவ நிலையங்களும் அடங்குகின்றன. இவற்றில் யாழ்ப்பாணத்தில் 20 வைத்தியசாலைகளும் முல்லைத்தீவில் 09 வைத்தியசாலைகளும் கிளிநொச்சியில் 08ம் மன்னாரில் -07ம் நிரந்தர வைத்தியர்கள் இல்லாமல் இயங்கிக்கொண்டிருக்கின்றன. மேலும் 03 வைத்தியசாலைகள் மூடப்பட்டநிலையில் உள்ளன.
வடமாகாணத்தில் தாதியர்களுக்கு 825 அனுமதிக்கப்பட்ட ஆளணி உள்ளபோதும் 560 பேரே தற்போது கடமையாற்றிக் கொண்டிருக்கின்றனர். மேலும் தாதியர்களை நியமிப்பதற்கான நேர்முகப்பரீட்சையின்போது தகுதியான விண்ணப்பதாரிகள் போதுமானதாக இல்லை. துணை மருத்துவ சேவையில் பிரதானமாக மருந்தாளர், மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர், கதிரி யலாளர், இயன்மருத்துவ உத்தியோகத்தர், தொழின்முறை சிகிச்சையாளர், மருத்துவமாது மற்றும் பொது சுகா தார உத்தியோகத்தர்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது.
மேலும் யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மருத்துவ மாது எவரும் கடமையில் இல்லை. அங்கவீனர்களுக்கான பராமரிப்பு வசதி போதாமை. வடமாகாணத்தில் போரி னால் அதிகளவானோர் அங்கவீனர்களாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான வாழ்வாதாரம் ஒரு பெரிய சவாலாகவே இருந்து வருகின்றது. அவர்களின் எதிர்காலத்துக்கான உதவிகள் அவசியமாகவுள்ளன. நோயாளர்களை காவிச்செல்லும் வண்டிக்கான பற்றாக்குறை காணப்படுகிறது.
வடமாகாண வைத்தியசாலைகளில் பிரதானமாக பொது, தள மற்றும் பிரதேச வைத்தியசாலைகளில் நோயாளர்காவும் வண்டிக்கான தேவை 35 ஆகவுள்ளது. தங்குமிட வசதிக்கான பற்றாக்குறை பொது போக்குவரத்து வசதி சீரின்மையால் உத்தியோகத்தர்கள் நீண்ட தூரம் பிரயாணம் செய்வதில் அசௌகரியங்களை சந்திப்பதுடன் தரமான சுகாதார சேவையினை வழங்க முடியாதுள்ளது. அங்கு மூலதன மற்றும் மீண்டுவரும் செலவினங்களுக்கான ஒதுக்கீடு போதாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல வவுனியா மாவட்டத்தில் உள்ள மக்கள் பாவிக்கும் குடிநீரில் கல்சியம் அதி கமாக உள்ளதால் இங்கு சிறுநீரகக் கோளாரினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் இவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆகவே வவுனியாவில; ஒரு சிறுநீரக நோய்சிகிச்சைப் பிரிவை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.வன்னிக்கென்று இருதயநோய் சிகிச்சைப் பிரிவு இல்லை. அதனையும் உருவாக்க வேண்டியுள்ளது.
போரின் காரணமாகவும் அது ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாகவும் வடமாகாணத்தில் ஏராளமான மக்கள் உளரீதியான பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கான உளவள சிகிச்சையை மேற்கொள்வதற்கு ஏதுவாக அனைத்து மருத்துவமனைகளிலும் மனோதத்துவ நிபுணர்களை நியமிப்பதும் அவசியமா னதாகும். ஒவ்வொரு வைத்தியசாலை வளாகத்திலும் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கிளை விற்பனை நிலை யம் ஒன்றையும் அமைத்து ஏழை, எளிய மக்கள் குறைந்த விலையில் அவற்றைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
சுகாதாரத்துறையில் நிலவும் ஆளணி மற்றும் பௌதீக வளங்கள் போன்றவற்றில் உள்ள குறைபாடுகளை நிவர்த்திக்கும் வகையில் தாங்களே முயற்சிகளை மேற்கொள்வதற்கும் ஆட்சேர்ப்பில் மருத்துவ சேவையின் தரம் குறையாத வகையில் தகுதிகளை நிர்ணயிப்பதற்கும், எங்கெங்கு எத்தகைய சுகாதார அமைப்புக்களை நிறுவுவது என்பது குறித்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இவற்றுக்கு அரசின் நிதியொதுக்கீடுகள் சரியான அளவில் அமைய வேண்டியதும் இதற்கு அனைத்து அரசியல்வாதிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியதும் முக்கியமானது.
ஆனால் அரசியல் உட்பிரவேசம் செய்பவர்கள் குடும்ப அரசிய லைப் பேணுவே முயல்கின்றனர். இதற்கான காரணம் என்னவென்றால் கண்ணை மூடிக்கொண்டு வருகின்ற ஆதாயங்களை மட்டும் தமக்குள்ளே பெற்றுக்கொள்ளும் உள்நோக்கம் மட்டும்தான். அடுத்தது இலஞ்ச ஊழல் குறித்த விசாரணைகள் அறிக்கைகள் என்று சமர்ப்பிக்கப்படவேண்டிய தேவை ஏற்படும்போது அவற்றை தமக்குள்ளேயே தீர்மானித்து அரசுக்கு அறிக்கை வழங்குவது சுலபம் என்பதால் இவ்வாறான குடும்பஅரசியலுக்குள் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தமது உறவுகளை இணைத்துக்கொள்வது வழமையாகிவிட்டது.
இந்தியாவில் கலைஞர் கருணாநிதி, சோனியாகாந்தி போன்றோரும் இலங்கையில் மஹிந்தராஜபக்ஷவும் மட்டுமன்றி பல்நாட்டு அரசியல்வாதிகளும் இத்தகைய குடும்ப அரசியல் கொள்கைகளைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஆண்டாண்டு காலங்களாய் ஏமாற்றப்பட்ட வரலா றுகளையே கொண்டவர்கள். இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டை பார்த்தால் பிரபாகரனின் போராட்டத்தை வைத்து தமது அரசியல் வாழ்க்கையை மானங்கெட்ட பிழைப்பாக நடத்தி வருகின்றனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ்மக்கள் வழங்கிய ஆணையை மறந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பல அரசியல்வாதிகள் செயற்பட்டு வருவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
பண்டாரவன்னியன் காலம் தொட்டு இன்று வரையுமுள்ள தமிழ்மக்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது எல்லாம் நம்பிக்கைத் துரோகத்தின் அடிப்படையில் அமைந்த தோல்விகளும், ஏமாற்றங்களுமாகவே இருக்கின்றன. இவைதான் இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமாக அமைந்த விடயங்களாக அமைகின்றன.
பிரபாகரன் நினைத்திருந்தால் இவர்களை விடவும் நன்மதிப்போடு நல்ல அரசியல் வாழ்க்கை நடத்தியிருக்கலாம். ஆனால் போராட்ட வழியிலிருந்து தமிழ்மக்களுக்கான விடிவை ஏற்படுத்திக் கொடுக்கும் நிலையிலிருந்து எள்ளவேனும் அவர் தவறவில்லை.
குடும்பஅரசியலை மேற்கொண்டு வரும் தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள அரசியல்வாதிகளையும், மஹிந்த அரசையும் குறைகூறுவது சிறந்ததொன்றல்ல. உன்னைத் திருத்திக்கொள் சமூகம் தானாய் திருந்தும் என்ற பழமொழியின் அர்த்தம் பலருக்கும் இன்னும் விளங்கியிருக்கவில்லை எனலாம்.
அமைச்சர் சத்தியலிங்கத்தைப் பொறுத்தவரையில் குடும்ப அரசியல் நடத்துகிறாரோ என்னவோ தமிழ்மக்களை ஏமாற்றி தமிழ்த்தேசியத்தை விற்றுப் பிழைப்பாரானால் தமிழ்மக்களாலே அவருக்கு உரிய தண்டணை வழங்கப்படும். தானும் எடுத்துக் கொண்டு மக்களையும் பார்த்துக் கொண்டால் அரசியல் ஆசனத்தில் நீண்டகாலம் இருக்கலாம். இப்படி பல அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி வருவதானது தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷைகளை குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடாகவே அமையும்.
Thanks Thinappuyal
Average Rating