எம்.ஜி.ஆர் மறைந்து இன்றுடன் 26 வருடங்கள்..!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வெற்றி தேவதையின் வீரமைந்தன், தர்மத்தாயின் தலைமகன், அவர்கண்ட வெற்றிகளை, படைத்த சாதனைகளை உலகமே கண்டு வியக்கின்றது.
தமிழ்க் கலையுலகில் அவர் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து, திசையறியாது, வாழ்க்கைக் கடலில் தத்தளித்த பல மனிதக் கப்பல்களை கரை சேர்ந்திருக்கின்றார்.
இந்த சாதனை தொட்ட சாதனையாளரின் மறைவு நாள் 24.12.1987. இவர் மறைந்து இன்றுடன் 26 வருடங்கள் உருண்டோடி விட்டன.
இவர் மறைந்தாலும் திரையில் மறையவில்லை. ‘வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்….!’ என்ற தனது பாடல் வரிகளுக்கு தானே முன்னுதாரணமாசூ வாழ்ந்திருக்கிறார்.
17.1.1917 ஆம் திகதி எம்.ஜி.ஆர். பிறந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த இயக்குனரான எல்லிஸ் ஆர். டங்கன் 1936 இல் தனது முதல் படத்தில் எம்.ஜி. இராமச்சந்திரனை அறிமுகம் செய்து வைத்தார்.
அப்படம் தான் ”சதிலீலாவதி”. சுமார் 13 படங்களில் துணைப் பாத்திரங்களில் நடித்த பின்புதான் ”ராஜகுமாரி” (1947) படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக நடித்தார் எம்.ஜி.ஆர்.
அவர் கடைசியாக நடித்து வெளிவந்த படம்தான் ”மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ (1978) இப்படம் எம்.ஜி.ஆர். இயக்கிய மூன்றாவது படமாகும்.
மற்ற இரு படங்கள் ‘நாடோடி மன்னன் (1958), ”உலகம் சுற்றும் வாலிபன்” (1973). அவரின் மறைவின் பின்னர் வெளியான கே.பாக்கியராஜின் அவசர பொலிஸ் 100 படத்தில் எம்.ஜி.ஆர். முன்னர் தோன்றிய காட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தன.
இவர் நடித்த படங்கள் மொத்தம் 136. இவர் நடித்து பாதியில் நின்றுபோன படங்கள் பல. பின்னணிக் குரலே மலிந்த நாளில் சூடுபட்டுப் பழுதான தன் சொந்தக் குரலிலேயே பேசி ரசிகர்களைக் கவர்ந்ததிலே முதல்வர் படப்படிப்புக்குச் சென்றால் தன்னால் தயாரிப்பாளருக்கு ஒரு காசும் செலவு வைக்காத முதல்வர்.
நல்லவர் போற்றும் வல்லவராக நெஞ்சில் நிறைந்த பொன் மனச் செம்மலாக மனிதன் என்ற சொல்லுக்கு இலக்கணமாக இன்றும் பல்லாயிரம் மக்களின் இதயங்கனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இவருக்கு வசூல் சக்கரவர்த்தி என்ற அடைமொழியைக் கொடுத்த படங்கள் 68 ஆகும். 100 நாள் விழா கொண்டாடிய படங்கள் இவை. 100 நாட்களைத் தாண்டி ஓடிய படங்கள் 40 ஆகும். வெள்ளி விழா கண்ட படங்கள் 12.
எம்.ஜி.ஆருடன் அதிகப்படங்களில் நடித்த கதாநாயகிகள் ஜெயலலிதா (28), சரோஜாதேவி (26), லதா (13). எம்.ஜி.ஆரை வைத்து அதிக படங்ளைத் தயாரித்த நிறுவனம் தேவர் பிலிம்ஸ் 16 படங்கள். எம்.ஏ. திருமுகம் 16 படங்கள். டி.ஆர். ராமண்ணா 8 படங்கள். கே. சங்கர் 8 படங்கள்.
1968 ஆம் ஆண்டு ”குடியிருந்த கோயில்” படத்திற்கான சிறந்த நடிகர் விருதைப் எம்.ஜி.ஆர். பெற்றார். 1971ல் ”ரிக்ஷாக்காரன்” படத்திற்காக தேசிய அளவில் விருது பெற்றார். மேலும் இப்படத்தில் நடித்ததின் காரணமாக ”பாரத் எம்.ஜி.ஆர். படத்தையும் பெற்றார்.
1969 இல் சிறந்த தமிழ்ப் படமாக ”அடிமைப் பெண்” தெரிவாகியது. 1973இல் சிறந்த தமிழ்ப் படமாக ”உலகம் சுற்றும் வாலிபன் தெரிவாகியது.
1977 இல் தமிழக முதலமைச்சரான எம்.ஜி.ஆர். இறக்கும்வரை அப்பதவியை வகித்தார். இவர் 22.12.1987 அன்று சென்னையில் நேரு சிலை திறப்பு விழாவின்போது பிரதமர் ராஜீவ் காந்தி முன்னிலையில் பத்து நிமிடங்கள் பேசினர். எம்.ஜி.ஆர். பொது நிகழ்ச்சியில் பேசிய கடைசிப் பேச்சு அதுதான்.
தமிழ்த் திரையுலகிலும் அரசியலும் பல நனிசிறந்த கருத்துக்களை அடக்கமாகக் கூறிய பண்பாளர் நீலத்திரைக் கடல் ஓரத்திலே அண்ணாவின் அருகிலே அடக்கம் செய்யப்பட்ட விட்டார். ஆனால் அவர் வார்த்தைகள் எண்ணங்கள்….. கோடான கோடி உள்ளங்களில் கொலுவிருக்கின்றன.
இந்திய அரசு அன்னாருக்கு ”பாரத ரத்னா” என்ற விருதைக் கொடுத்து கௌரவித்தது. 1990 ஆம் ஆண்டு அவருடைய அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. சிகரம் தொட்ட சாதனையாளர் எம்.ஜி.ஆர். இவ்வுலகை விட்டு மறைந்தாலும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்!
Average Rating