காதலியை கொன்று, தலையை துண்டித்த காதலன் கைது
திருமணத்திற்கு வற்புறுத்தியால் ஆத்திரம்: காதலியை கொன்று தலையை துண்டித்த காதலன் கைது-
தமிழ்நாடு திருச்சி தில்லைநகர் தென்னூர் வாமடம் ரெயில்வே குடியிருப்பு அருகே உள்ள தண்ணீர் குட்டையில் கடந்த 18–ந்தேதி 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் உடல் தலையில்லாமல் நிர்வாணமாக கிடந்தது.
இதை பார்த்த அந்த பகுதியினர் தில்லை நகர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் சேரன் தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இதை தொடர்ந்து திருச்சி மற்றும் அண்டை மாவட்டங்களில் 25 வயது மதிக்கதக்க இளம்பெண்கள் யாரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாயமானார்களா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கல்லூர் சுதந்திராபுரம் பகுதியை சேர்ந்த மாயாண்டி என்பவரது மகள் சசிகலா (வயது 28) என்பவர், திருச்சி பெரிய மிளகுபாறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு புறப்பட்டு வந்ததும், பின்னர் மாயமாகியதும் தெரியவந்தது.
இதையடுத்து சசிகலாவின் செல்போனுக்கு வந்த அழைப்புகள் மற்றும் கடைசியாக சசிகலா பேசிய எண்கள் குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்தினர்.
இதில் திருச்சி ஜீவா நகரை சேர்ந்த மெக்கானிக் ரெங்கநாதன் என்பவர் சசிகலாவுடன் கடைசியாக பேசியதை உறுதி செய்தனர். இதையடுத்து ரெங்கநாதனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:–
சசிகலா பெரியமிளகு பாறையில் உள்ள அவரது உறவினரான சத்யா வீட்டுக்கு வந்து செல்வார். ஏற்கனவே சத்யாவை எனக்கு தெரியும் என்பதால் நான் சசிகலாவுடன் சகஜமாக பழகி வந்தேன். நாளடைவில் சசிகலாவும், நானும் காதலித்தோம். கடந்த 3 ஆண்டுகளாக இந்த காதல் தொடர்ந்தது. இந்த நிலையில் எனக்கு பணம் தேவைப்பட்டதால் சசிகலா அவரது 4 பவுன் நகையையும் எனக்கு தந்து உதவினார்.
இதை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தி வந்தார். இதற்கு தனது பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் அவர் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. மேலும் தனது நகையையும் கேட்டு தொந்தரவு செய்தார்.
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த நான், எனது நண்பரான இதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மற்றும் சத்யா உதவியுடன் சசிகலாவை வெளியூருக்கு சுற்றுப்பயணம் செல்லலாம் என்று அழைத்தேன். அதை நம்பிய அவரும் கடந்த 14–ந்தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு வந்தார்.
பின்னர் பகல் முழுவதும் வெளியில் சுற்றிய நாங்கள் இரவில் தென்னூர் வாமடம் பகுதிக்கு 4 பேரும் வந்தோம். பின்னர் சத்யாவை அவரது வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பி வைத்து விட்டேன்.
சசிகலாவை கொலை செய்தால் தான் நிம்மதியாக வாழமுடியும் என்று நினைத்த நான் அவரை கொலை செய்ய முடிவு செய்து அந்த பகுதியில் உள்ள பாழடைந்த பங்களாவுக்கு அழைத்து சென்றேன். என்னுடன் சுரேசும் வந்தார்.
பின்னர் சசிகலாவை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம். அவரது உடலை அந்த பகுதியில் உள்ள தண்ணீர் குட்டையில் வீசிவிட்டு சென்று விட்டோம். ஆனாலும் போலீசார் கொலை செய்யப்பட்டுள்ளது சசிகலா தான் என்று கண்டு பிடித்து விட்டால் எங்களை கைது செய்து விடுவார்களோ? என்று பயந்து 2 நாட்கள் கழித்து 16–ந்தேதி தலையை மட்டும் வெட்டி எடுத்து விட்டு உடலை அங்கேயே போட்டு விட்டு சென்றோம்.
தலையை உய்யக்கொண்டான் ஆற்றில் விசினால் தப்பித்து விடலாம் என்று நினைத்தோம். ஆனாலும் தீவிர விசாரணை நடத்தி போலீசார் எங்களை கைது செய்து விட்டனர் என்று அவர் கூறி உள்ளார்.
இதை தொடர்ந்து போலீசார் ரெங்கநாதன், சுரேஷ், சத்யா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இன்று பிற்பகல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அவர்கள் அடைக்கப்படுகிறார்கள்.
ஆனால் இந்த வழக்கில் முக்கிய தடயமான சசிகலாவின் தலை இது வரை போலீசாரிடம் கிடைக்காததால் ரெங்கநாதன் தலையை வீசி சென்றதாக கூறிய உய்யக்கொண்டான் ஆற்றுப் பகுதியில் தண்ணீர் ஓடும் திசை நோக்கி இன்றும் சல்லடை போட்டு போலீசார் தலையை தேடி வருகிறார்கள்.
Average Rating