நானாட்டான் பிரதேச செயலகம் மீது தாக்குதல்: 21பேரும் பிணையில் விடுதலை
மன்னார், நானாட்டான் பிரதேச செயலகம் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 21 பேரை நேற்று மன்னார் நீதிவான் செல்வி ஆனந்தி கனகரட்ணம் பிணையில் விடுவித்துள்ளார்.
தலா 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் இவர்களை விடுவித்த நீதிவான் இரு சமூகங்களிடையேயும் மீளவும் குழப்பநிலை ஏற்படுமானால் பிணை இரத்துச்செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பொன்தீவுக் கண்டல் கிராம அலுவலகப் பிரிவில் மீள்குடியேற்றத்துக்கான காணி பகிர்ந்தளித்தலில் ஏற்பட்ட பிணக்குகளைத் தொடர்ந்து கடந்த 9ஆம் திகதி நானாட்டான் பிரதேச செயலகத்தை சுற்றிவளைத்த மக்கள் பிரதேச செயலாளருடன் பேச முயன்றனர். அந்த முயற்சி கைகூடாததையடுத்து பிரதேச செயலகத்தின்மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து 33 பெண்களும் 32 ஆண்களுமாக 65 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜராக்கப்பட்டனர். இவர்களில் 18 பேரைத்தவிர ஏனையவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். 18 பேருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனைவிட மூவர் கடந்தவாரம் நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து அவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த 21 பேரும் நேற்று நீதிமன்றில் ஆஜராக்கப்பட்டபோது சட்டத்தரணிகளான திருஅருள், எஸ். பிரிமூஸ் சிராய்வா, செபநேசன் லோகு, அஜித் யோன் தாசன் ஆகியோருடன் சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் ஆஜராகி வாதாடினார். 21 பேரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைத்திருப்பதானது இரு சமூகங்களிடையேயும் மேலும் முரண்பாட்டினை ஏற்படுத்தவே உதவும். அத்துடன் நத்தார் பண்டிகையும் வருவதனால் இவர்களை பிணையில் விடுவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நீதிவான், பிரதேச செயலகத்தில் ஒரு இலட்சத்து 63 ஆயிரம் ரூபா சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 25 ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட அரச சொத்துக்கள் சேதமாக்கப்பட்டால் மேல் நீதிமன்றத்திலேயே பிணை வழங்கப்பட வேண்டும்.
பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால் பிணை வழங்குவது குறித்து நீதிவான் நீதிமன்றம் தீர்மானிக்கலாம். பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்காமையினால் இவர்களைப் பிணையில் விடுவிக்கின்றேன்.
எதிர்காலத்தில் பிரச்சினை எதுவும் ஏற்படுமானால் பிணை ரத்துச்செய்யப்பட்டு மேல் நீதிமன்றத்துக்கு வழக்கை பாரப்படுத்தும் நிலை ஏற்படும் என்று எச்சரித்ததுடன் 21 பேரையும் பிணையில் விடுவித்தார்.
இதனையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
Average Rating