விசா மோசடி: கைதான இந்திய பெண் தூதருக்கு சலுகை கிடையாது- அமெரிக்கா திட்டவட்டம்

Read Time:5 Minute, 54 Second

15-devyani-khobragade-300வாஷிங்டன்: விசா மோசடி குற்றச்சாட்டில் கைதான இந்தியப்பெண் தூதர் தேவயானிக்கு சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு உரிமை கிடையாது என்றும், மேலும் இந்தியத் துணைத் தூதரின் கைது நடவடிக்கை அமெரிக்க- இந்திய உறவை எந்தவகையிலும் பாதிக்காது எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் நியூயார்க் இந்திய துணைத்தூதரகத்தில் துணைத்தூதராக பணியாற்றி வருபவர் மும்பையை சேர்ந்த தேவயானி கோப்ரகடே(வயது 39). இவர் தனது வேலைக்காரப் பெண்ணுக்கு ஏ-3 விசா பெற்றதில் மோசடியில் ஈடுபட்டதாகவும், தவறான தகவல்கள் தந்ததாகவும் இவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அதன்பேரில் அவர் கடந்த 12-ந்தேதி கைது செய்யப்பட்டு, கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்டார். இவர் தனது பணிப்பெண் சங்கீதாவுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2 லட்சத்து 79 ஆயிரம் சம்பளம் தருவதாக அழைத்துச் சென்று விட்டு, ரூ.30 ஆயிரம் மட்டுமே தந்து கொடுமைப்படுத்தியதாகவும் இவர் மீது புகார் எழுந்துள்ளது.

கைது செய்யப்பட்ட தேவயானி, மேன்ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்ததுடன், 2½ லட்சம் டாலருக்கு (சுமார் ரூ.1 கோடியே 55 லட்சம்) பிணைப்பத்திரம் எழுதித்தந்து உடனடியாக ஜாமீன் பெற்றார்.

2 குழந்தைகளின் தாயான துணைத்தூதரை அமெரிக்கா இப்படி அநாகரிகமாக நடத்தியவிதம், இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதர் நான்சி பவலை, வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் நேற்று முன்தினம் நேரில் அழைத்து கண்டித்தார். இப்படிப்பட்ட ஒரு தரம்கெட்ட செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என உறுதிபடத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தால் இந்திய-அமெரிக்க உறவில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. ஆனால், இந்தியத் துணைத் தூதர் கைது நடவடிக்கையால் அமெரிக்க-இந்திய உறவில் விரிசல் ஏற்படாது என நம்பிக்கைத் தெரிவித்துள்ளது அமெரிக்கா.

மேலும், நியூயார்க் அரசு வக்கீல்கள் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தேவயானி சட்டத்தை மீறி உள்ளார். அவர் மீது வழக்கு விசாரணை நடத்தப்படும்’ என கூறப்பட்டுள்ளது.

அதேபோல், நியூயார்க் அரசு தலைமை வக்கீல் பிரித் பராரா, “அமெரிக்காவில் வீட்டு வேலைக்கு அழைத்து வரக்கூடிய வெளிநாட்டுப் பெண்களுக்கு, அமெரிக்க குடிமக்களின் வேலைக்காரர்களுக்கு வழங்கப்படுகிற அதே பாதுகாப்பு வழங்கப்படுகிறது” என கூறினார்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர், ” தேவயானி கைதான சம்பவத்தை சட்ட அமலாக்க அமைப்புகள் மூலமாக கையாண்டு வருகிறோம். இந்தியாவுடன் நாங்கள் நெடுங்கால உறவு கொண்டுள்ளோம். அந்த உறவு தொடரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். தூதரக உறவுகள் தொடர்பான ‘வியன்னா உடன்படிக்கை’யின்படி, தூதரக அலுவல்களில்தான் இந்திய துணைத்தூதர் (சட்ட நடவடிக்கையிலிருந்து) விலக்கு உரிமையைப் பெற்றுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

எனவே சொந்த விவகாரங்களில் துணைத்தூதர் தேவயானி, விலக்கு உரிமையைப் பெறமுடியாது, அவர் நீதிமன்றத்தில் விசாரணை எதிர்கொண்டாக வேண்டும் என்பது இதன்மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்தப்பிரச்சனை தொடர்பாக வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரி தரண்ஜித் சிங் சந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். இந்த விவகாரத்தில் விரைவாக தீர்வு காண வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இருப்பினும் தேவயானி மீதான விசா குற்றச்சாட்டு, தவறான தகவல்களை அளித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு போன்றவை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் அவர் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொலிஸ் அதிகாரி கார் – ஆட்டோ விபத்தில் மூன்று இளைஞர்கள் பலி
Next post ஆசிரியரைக் கொல்ல நினைத்து 3 மாணவர்களை சுட்ட மாணவன் தற்கொலை