தப்பிப் பிழைக்குமா “ஈபிடிபி”?? -கே.சஞ்சயன்
நெடுந்தீவு பிரதேசபைத் தலைவர் டானியல் றெக்சியன் படுகொலை, வடக்கில் ஈபிடிபிக்கு ஏற்பட்ட தேர்தல் தோல்விக்குப் பின்னர், இன்னொரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. வடக்கில் மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுப்பதற்கான முயற்சிகளில் அரசதரப்பு தீவிரம் காட்டி வந்த சூழலில், யாழ். குடாநாட்டின் ஒதுக்குப் புறமாக உள்ள புங்குடுதீவில் உள்ள தனது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் நெடுந்தீவுப் பிரதேசசபைத் தலைவர்.
ஒரு துப்பாக்கிச் சூட்டு மரணத்தை, ஒரு தற்கொலை மரணமாக, அதுவும், நஞ்சருந்தி மரணமானதாகப் பிரகடனப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்டன. இதுவே, நான்கரை ஆண்டுகளுக்கு முன்னரென்றால், வேறெவர் மீதும் மிகச் சுலபமாக பழியைப் போட்டோ, அல்லது எத்தகைய முறையான விசாரணைகளும் இல்லாமலுமோ, இந்த விவகாரம் மூடிமறைக்கப்பட்டிருக்கலாம். வடக்கில் கடந்த காலங்களில் நிகழ்ந்த ஏராளமான படுகொலைகள் அவ்வாறு தான் முடிக்கப்பட்டன.
ஆனால், போர் முடிந்து நான்கரை ஆண்டுகள் கழித்து, வடக்கில் முற்றிலும் ஜனநாயக சூழல் திரும்பி விட்டதாக அரசாங்கத்தினால் திரும்பத் திரும்ப பிரகடனம் செய்யப்படுகின்ற சூழலில், நிகழ்ந்து விட்ட ஒரு படுகொலையை எந்தவகையிலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது போனது.
இதன் விளைவாக, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு, தெரிவான வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன், பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். இவரது கைது, ஈபிடிபியைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Epdp_rex6ஏனென்றால், ஈபிடிபியின் யாழ். மாவட்ட அமைப்பாளராக இருந்தவர் இவர். ஈபிடிபியில் உள்ள விரல் விட்டு எண்ணி விடத்தக்க, முக்கியமான மூத்த உறுப்பினர்களில் கமலேந்திரனும் ஒருவர்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முதன்மை வேட்பாளராக நிறுத்திய, சின்னத்துரை தவராசாவை விடவும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தவர் இவர். கமலேந்திரன் கைதானதை அடுத்து, தாம் இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே குறிப்பிட்டிருந்தார்.
இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக, நெடுந்தீவில் உள்ள அலுவலகத்தை மூடிய ஈபிடிபி, அங்கிருந்து முற்றாக வெளியேறியதுடன், தீவகத்தின் பல அலுவலகங்களை மூடப்போவதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், இது ஒரு திடீர் நடவடிக்கையோ அல்லது கமலேந்திரன் கைதானதை அடுத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கையோ அல்ல என்று ஈபிடிபியின் முக்கியஸ்தரான தவராசா தெரிவித்துள்ளார். அதாவது கட்சியை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கை என்றும் அவர் கூறியுள்ளார்.
Epdp_rex4ஈபிடிபி மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளது என்பது இப்போதல்ல, வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான போதே தெளிவாகி விட்டது. நடந்து முடிந்த மூன்று மாகாணசபைத் தேர்தல் முடிவுகள், ஐதேகவுக்கு பாதகமாக அமைந்த போது, கட்சி மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள், கட்சிக்குள் எழுந்தன.
அது ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைக்கு பெரும் சவாலாக எழுந்த போதிலும், தற்போது சில மறுசீரமைப்புகளின் மூலம் தற்காலிகமாக அந்தப் பிரச்சினை தணிக்கப்பட்டுள்ளது. அதுபோல, வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஈபிடிபி ஒரு வரலாற்று தோல்வியை சந்தித்திருந்தது. பல பாடங்களை கற்கவேண்டிய நிலையில் ஈபிடிபி இருப்பதை அந்த தோல்வி எடுத்துக் காட்டியிருந்தது.
ஈபிடிபி பற்றிய பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் வடக்கில் குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் அது ஒரு முக்கிய அரசியல் சக்தியாக மாற்றம் பெற்றிருந்தது என்பது மறுக்க முடியாது உண்மை.
epdp.kamal-011994இல், தீவகத்தில் மட்டும் நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில், போட்டிக்கு யாரும் இல்லாத சூழலில், ஈபிடிபி 10 ஆசனங்களுடன் நாடாளுமன்ற அரசியலுக்குள் நுழைந்தது. அதற்குப் பின்னர், விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலங்களில் கூட, ஈபிடிபி ஒரு சவாலாக சக்தியாகவே இருந்து வந்தது. ஆனால், வடக்கு மாகாணசபைத் தேர்தலில், விடுதலைப் புலிகள் இல்லாத சூழலிலும், அவர்களால் வெற்றி பெறமுடியாது போனது.
ஈபிடிபியின் கோட்டையாக இரண்டு தசாப்தங்களாக கருதப்பட்ட ஊர்காவற்றுறைத் தொகுதியைக் கூட தக்க வைத்துக் கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டது. இது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
போர்க்கால அரசியல் பரப்பில் இலகுவாகப் பயணிக்க முடிந்த ஈபிடிபியால், ஜனநாயக அரசியல் பரப்பில், பயணிக்கச் சிரமப்படுகிறது என்பதை அது உணர வைத்தது. இதற்கு ஆயுதக் குழுவாகச் செயற்பட்ட மனோநிலையில், இருந்து முற்றாக விடுபட முடியாமையும் ஒரு காரணம். ஏனென்றால், விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னர், தற்பாதுகாப்புக்காக ஆயுதங்களை வைத்திருப்பதான ஈபிடிபியின் வாதம் வலுவிழந்து போனது.
தமது ஆயுதங்களை முற்றாக ஒப்படைத்து விட்டதாகவும், முழுமையான ஜனநாயக அரசியல் வழிமுறையின் படி செயற்படுவதாகவும், பலமுறை ஈபிடிபி தலைமை தெளிவுபடுத்தி விட்டது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிடும் வருடாந்த அறிக்கைகளில், ஈபிடிபி ஆயுதக்குழுவாக செயற்படுவதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதும், அதை ஈபிடிபி மறுப்பதும் வழக்கமாக இருந்து வந்தது.
epdp.kamal-06aஆனால், அண்மைக்காலத்தில், கொலை வழக்கில் கமலேந்திரன் பிடிபட்ட சம்பவமாகட்டும், அதற்கு முன்னர் அவரது உதவியாளர் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் பிடிபட்ட சம்பவமாகட்டும், ஈபிடிபியின் ஆயுதக்களைவின் உண்மைத் தன்மை பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளன.
ஆயுதங்களை முற்றாக ஒப்படைத்து விட்டதான ஈபிடிபியின் கூற்று உண்மையானால், இந்த ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன? அவ்வாறாயின், இன்னமும் ஈபிடிபி வசம் ஆயுதங்கள் உள்ளதா என்ற கேள்விகளை இந்தச் சம்பவங்கள் எழுப்பியுள்ளன.
பொலிஸ் விசாரணைகள் இதை துருவுமா – உண்மைகள் கண்டறியப்படுமா என்ற உத்தரவாதங்கள் ஏதுமில்லாத நிலையில், சாதாரண பொதுமக்கள் மத்தியில், ஈபிடிபி குறித்த அச்சமும் சந்தேகங்களும் நிலவப் போவது இயல்பு.
வடக்கின் ஜனநாயக அரசியல் பரப்பில் தொடர்ந்தும் அரசியல் நடத்த ஈபிடிபி விரும்பினால், தம்மை அவர்கள் மறுசீரமைப்புச் செய்ய வேண்டியது அவசியமானதே. அத்தகைய மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக கட்சியின் ஆலோசகர் தவராசா கூறியுள்ள போதிலும், அது எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
epdp.dak-mahindaவிடுதலைப் புலிகளின் காலத்தில், ஈபிடிபி உச்சகட்ட ஜனநாயகம் பற்றி வானொலி மற்றும் பத்திரிகை மூலம் போதனைகள் செய்து கொண்டிருந்த போதிலும், தம்மையும் அந்த ஜனநாயக வெளிக்குள் கொண்டு வர அவர்கள் முயற்சித்திருக்கவில்லை. அதன் விளைவும் இன்றைய நிலைக்கு மற்றொரு முக்கிய காரணம்.
வெறும் சலுகைகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான காட்டமான விமர்சனங்களும், தேர்தல் ஒன்றில், தம்மைக் காப்பாற்றி விடும் என்று ஈபிடிபி கருதிக் கொண்டிருந்தது. அதையும் மீறி, மக்களை ஈர்ப்பதற்கு கட்சி ஒழுங்கும், ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்றுவதும் அவசியம்.
ஆயுதக் குழுவாக இருந்து ஓர் அரசியல் கட்சியாக மாறுவது என்பது கடினமானது. எல்லா அமைப்புகளாலும் அத்தகைய மாற்றங்களை இலகுவாகவும், வெற்றிகரமாகவும் செய்து விடமுடிவதில்லை. மாற்று அரசியல் சிந்தனைகளையும், மாற்றுக் கருத்துகளையும் சகித்துக் கொள்ளும் பக்குவம் ஒரு போதும், ஆயுதக் குழுவொன்றுக்கு இருந்ததில்லை.
epdp.dak-basilஈபிடிபி, விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எல்லா ஆயுத அமைப்புகளுக்கும் இது பொருந்தும்.. இத்தகைய ஆயுதக் குழுவாக இருந்து ஜனநாயக அரசியல் வெளிக்குள் நுழையும் தரப்புகளால், ஆயுதக்குழு மனோபாவத்தில் இருந்து முற்றிலுமாக விடுபட முடிவதில்லை.
ஈபிடிபி யாழ்ப்பாணத்தில் ஓரளவுக்கு தம்மை நிலை நிறுத்திக் கொண்ட போதிலும், எல்லா மக்களாலும் அதனை ஓர் அரசியல் அமைப்பாக ஏற்கமுடியாது போனதற்கு அதுவும் ஒரு காரணம்..
எவ்வாறாயினும், அண்மைய சம்பவங்களின் தொடர்ச்சியாக ஈபிடிபி தம்மை மறுசீரமைக்க முடிவு செய்துள்ளதை கண்கெட்ட பிறகு செய்யும் சூரிய நமஸ்காரமாக சொல்ல முடியாது. ஏனென்றால், ஒரு நீண்ட அரசியல் வெளி வடக்கில் உள்ளது. அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக ஓர் அரசியல் சக்தி என்று வேறு எந்தக் கட்சியும் கிடையாது.
கீரைக் கடைக்கும் ஒரு எதிர்க்கடை தேவைப்படும் போது, ஒரு ஜனநாயக அரசியல் பரப்பில் எதிர்க்கட்சி என்பது எந்தளவுக்கு முக்கியமானது என்று கூறவேண்டியதில்லை. அத்தகையதொரு பிரகாசமான வாய்ப்பு வடக்கு அரசியல் பரப்பில் இருக்கின்ற போதிலும், அதைத் தக்கவைத்துக் கொள்வதும் தவற விடுவதும் ஈபிடிபியின் கையில் தான் உள்ளது.
-கே.சஞ்சயன்-
Average Rating