கிளிநொச்சியில் 27 தாய்மாரும் விரும்பி கருத்தடை செய்தனர் -பெண்ணியல் நிபுணர்கள்
கிளிநொச்சியில் 27 தாய்மார்கள் தங்களின் சுயவிருப்பின்படியே இக்கருத்தடையை பெற்றுக்கொண்டனர் என சுகாதார அமைச்சின் பெண்ணியல் நிபுணர்கள் அடங்கிய விசாரணை குழு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் கட்டாயக் கருத்தடை இடம்பெற்றதாக வெளிவந்த செய்திகளையடுத்து வட மாகாண அமைச்சினால் விசேட மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் நிபுணர் அடங்கிய விசேட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சுகாதார அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்படுள்ளது.
இவ் விடயம் தொடர்பாகவும் விசாரணைக்குழுவின் அறிக்கை தொடர்பாகவும் இன்று (08) வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கத்தால் சுகாதார அமைச்சின் வவுனியா உப அலுவலகத்தில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ் அறிக்கை வழங்கப்பட்டது.
இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தேசிய போசாக்கு மாதத்திற்கான வேலைத்திட்டத்தின்போது கிராஞ்சி வேரவில் மற்றும் வலைப்பாடு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய கிராஞ்சி, வேரவில் குடும்ப சுகாதார உத்தியோகத்தர் பிரிவுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளது ஊட்டம் குறித்த தரவானது மிகக் குறைவாகவே பதிவாகியிருந்தமையால் மேற்படி கிராமங்களை உள்ளடக்கியதான போசாக்கு ஊட்டம் குறித்த தரவுப்பதிவுகள் குடும்ப சுகாதாரப் பணியகத்தின் ஆலோசனையின்படி புரட்டாதி மாதம் 30 திகதியன்று மீளவும் மேற்கொள்ளப்பட்டது.
இக்கிராமங்களில் நிரந்தரமான குடும்பநல உத்தியோகத்தர்கள் கடமையில் இல்லாதமையைக் கருத்திற்கொண்டு, மாவட்ட தாய்சேய் நல வைத்திய அதிகாரி மற்றும் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகளும் அவர்களது பிரிவுகளில் பணியாற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களுடன் இக்கிராமங்களுக்கு குறித்த தினத்தில் வருகை தந்திருந்தனர்.
அவ்வேளையில் போசாக்குத் தரவுப்பதிவிற்கு வருகைதந்திருந்த தாய்மார்களுக்கு சுகாதாரக் கல்வியும் வழங்கப்பட்டது. அப்போது யாராவது குடும்பத்திட்ட முறைகளைப் பாவிக்க விரும்பினால் அவர்களை வேரவில் பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அதனை வழங்குவதாகக் கூறியுள்ளனர்.
இதற்கமைவாக அங்கு சமூகமளித்திருந்த தாய்மார்களில் சிலர் இக்கருத்தடை முறையை பாவிப்பதற்கு விருப்பம் தெரிவித்து வேரவில் பிரதேச வைத்தியசாலைக்குச் சென்று மேற்படி கருத்தடை சிகிச்சையைப் பெற்றுள்ளனர்.
விசாரித்ததன் அடிப்படையில், குடும்பத்திட்ட முறையினைப் பெற்றுக்கொண்ட தாய்மார்களில் மேற்கொண்ட தினத்தில் சமூகமளித்திருந்த 27 தாய்மார்கள் தங்களின் சுயவிருப்பின்படியே இக்கருத்தடையை பெற்றுக்கொண்டதாகவும் தம்மை யாரும் வலோத்காரம் பண்ணியோ அல்லது பயமுறுத்தியோ அதனைப் பெறவில்லை என்றும் கூறியுள்ளார்கள்.
இவ் விடயங்கள் தொடர்பாக விசாரணைக்குழு சுகாதார அமைச்சுக்கு கொடுத்துள்ள பரிந்துரைகள்
நியமிக்கப்பட்ட குழுவினர் விசாரணையின் அடிப்படையில் பின்வரும் அவதானங்களை முன்வைத்துள்ளனர்.
1. யாரையும் வற்புறுத்தியோ பயமுறுத்தியோ இக்கருத்தடை முறைமையை ஒருவருக்கும் வழங்கவில்லை என்பது தெளிவாகின்றது.
2. மேற்படி கருத்தடை சிகிச்சையானது அதிகமானவர்களுக்கு ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் மேற்கொண்டுள்ளதால் சமூகமட்டத்தில் விளம்பரப்படுத்தப்பட்டு தப்பபிப்பிராயம் ஏற்படக் காரணமாயுள்ளது.
3. குறித்த தினம் முறையான சுகாதாரக் கல்வி வழங்கப்பட்டதன் பின்னர் தாய்மார் தமது சுயவிருப்பத்தின் பேரில் மேற்படி கருத்தடையை ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் நிதானமாகச் சிந்தித்து முடிவெடுப்பதற்குரிய கால அவகாசம் வழங்கப்படாமையே குற்ற உணர்வு மற்றும் சமூக நெருக்கீடு ஏற்படக் காரணமாகியுள்ளது.
4. எனவே கால அவகாசம் போதுமானதாக இருந்திருந்தால் இக்கருத்தடை முறையினை பெற்றுக்கொண்டவர்கள் சமூக மட்டத்திலும் வீட்டிலும் நன்றாகக் கலந்தாலோசித்து நேரான சிந்தனையுடன் செயற்பட்டிருப்பார்கள். மேலும் பத்திரிகைகள் இணையத்தளங்களில் பிரசுரமான தவறான கருத்துகள் ஏற்படாது தடுத்திருக்கலாம் என இக்குழு கருதியிருந்தது.
மேற்படி குழுவினரது அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் வடமாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சு பொறுப்புக்கூறுதல், அடிப்படைச் சுகாதார வசதிகள் மற்றும் மகளிர் இனப்பெருக்க சுகாதார உரிமை என்பவற்றை உறுதிப்படுத்துமுகமாக பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டு உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவருகிறது.
சகல குடும்பத்திட்ட முறைகள் (நிரந்தர மற்றும் தற்காலிக) தொடர்பிலான பயனாளர் தகவல்கள் தமிழ்மொழியில் வழங்குதல். குடும்பத்திட்ட முறைகளை வழங்கும்போது பயனாளர்கள் தமது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவுகளை மேற்கொள்ள போதிய கால அவகாசம் வழங்குதல்.
குடும்பத்திட்ட சேவைகளை வழங்கும்போது ஒருதடவையில் பெரும்தொகையினருக்குச் சேவை வழங்குவதை முற்றாகத் தவிர்த்தல் நடைமுறையிலுள்ள குடும்பத்திட்ட முறைகள் தொடர்பான தமிழ்மொழிமூலத் தகவல்களை அனைத்து சுகாதார நிலையங்களிலும் பார்வைக்கு வைத்தல்.
குடும்பத் திட்ட சுகாதாரக் கல்வி வழங்குதல் தொடர்பில், பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு விசேட பயிற்சி வகுப்புகளை சுகாதாரக்கல்விப் பணியகம் மற்றும் குடும்ப சுகாதாரப் பணியகம் ஆகியவற்றின் ஊடாக வழங்குதல்.
மகளிர் இனப்பெருக்க சுகாதார உரிமை தொடர்பிலான விசேட பயிற்சிகளைப் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு வழங்குதல்.
அமைச்சு பின்வரும் விடயங்களைத் தெளிவாக்க விரும்புகிறது.
1. ஒரு சிறிய கிராமப்பகுதிக்கு இவ்வாறு பெரும்தொகையான சுகாதார உத்தியோகத்தர்கள் ஒரே நாளில் சென்று குடும்பத்திட்ட முறைகளை அறிமுகப்படுத்தியமை முற்றாகத் தவிர்த்திருக்கவேண்டிய விடயமாக அமைச்சு கருதுகிறது.
2. இவ்வாறான சம்பவங்கள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக அமைச்சு திணைக்கள நடைமுறைகள் ஊடாகப் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
3. போருக்குப் பின்னரான இந்தக் காலப் பகுதியில் போரினால் உயிரிழப்புக்களைச் சந்தித்த எமது பிரதேசங்களில் குடும்பக்கட்டுப்பாட்டு முறைகளை ஊக்குவிப்பதற்கான அவசியமோ அவசரமோ தற்போது இல்லை என அமைச்சு கருதுகிறது.
4. இருந்தபோதும் குடும்பதிட்டமிடல் தொடர்பான ஆலோசனைகள் தேவையுடையோர் அவற்றை சுகாதார நிலையங்களில் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் செய்யப்படல் வேண்டும்.
5. கிராஞ்சி, வேரவில் மற்றும் வலைப்பாடு ஆகிய கிராமங்களில் பயன்படுத்தப்பட்டது ஒரு தற்காலிக குடும்பத்திட்ட (கருத்தடைச்) சாதனம்.
6. இது இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பாவனையில் உள்ள ஒரு குடும்பத்திட்ட சாதனம்.
7. இதனை ஆகக் கூடியது ஐந்து வருடங்கள் ஒருவர் பயன்படுத்தலாம்.
8. இதனை உடலில் பதித்துக்கொண்ட எந்தவொரு தாயாரும் அதனை மீள எடுத்துவிட விரும்பினால் தத்தமது கிராமங்களுக்குரிய மருத்துவ மாதுக்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் உடனடியாக அதனை மேற்கொள்ளமுடியும்.
இதற்காகக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என இவ் அறிக்கiயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating