தோழரின் மனைவியுடன் கிசு கிசு; கொலையில் முடிந்தது: ஈபிடிபியின் பறிபோகும் பதவிகள்! -சித்திரன்
சுட்டுக்கொன்றுவிட்டு மாலைபோடுவதற்கும் மாரடிப்பதற்கும் எங்களுக்கு நிகர் நாங்களே! படங்கள் உள்ளே!
கடந்த மாதம் 26 ஆம் திகதி வீட்டில் தனிமையில் இருந்த நிலையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவரும் ஈபிடிபியின் முக்கியஸ்தருமான டானியல் றெக்சியன் (ரஜீவ்) கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டதும் இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டனர்.
கணவன் இறந்து விட்டதாக அழுது புலம்பிக் கொண்டிருந்த றெக்சியனின் மனைவி அனிதா (வயது 38), தான் இல்லாத சமயத்தில் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டு இறந்திட்டார் என பொலிசில் வாக்கு மூலம் கொடுத்திருந்தார். இவ்வாறு வாக்கு மூலம் கொடுத்திருந்த போதும் டானியல் றெக்சியன் தற்கொலை செய்யுமளவுக்கு அவருக்கு என்ன பிரச்சனை இருந்தது எனவும், உண்மையில் தற்கொலை தானா? என்றும் பொலிசாரும் புலனாய்வாளர்களும் விசாரணைகளை முடுக்கி வட்டிருந்தனர்.
இந் நிலையில் பிரேதபரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட சடலத்தை பரிசோதித்த வைத்தியசாலைத் தரப்பு டானியல் றெக்சியனின் பிடரிப்பகுதியில் இருந்து துப்பாக்கி குண்டு ஒன்றின் சன்னத்தை மீட்டிருந்தனர். அது 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியினது சன்னம் எனவும், அருகில் இருந்து அவர் சுடப்பட்டிருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதன் பின்னர் கடந்த 29 ஆம் திகதி பொலிஸ்மா அதிபரின் விசேட பணிப்புரைக்கு அமைய இதன் விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பொலிஸ் மா அதிபரின் கட்டளையின் பிரகாரம் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் நெடுந்தீவுக்கு விசேட குழு ஒன்றினையும் அனுப்பியிருந்தது.
புங்குடுதீவு, வேலனை, ஊர்காவற்துறை ஆகிய பகுதிகளில் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் றெக்சியனின் மனைவி, மூன்று பிள்ளைகள், மனைவியின் தாயார், மனைவியின் தங்கை, மனைவின் தங்கையின் கணவர் ஆகியோரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.
றெக்சியனின் மனைவியின் வாக்குமூலமும், வைத்தியசாலை பிரேத பரிசோதனை அறிக்கையும் வேறுபட்டு காணப்பட்டதால் சந்தேகம் மேலும் வலுவடைந்தது. இதனால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஈபிடிபியின் வங்களாவாடி அலுவலகத்தில் பணியாற்றும் மூன்று பிள்ளைகளின் தந்தையாகிய ஜெசிந்தன் (வயது 29) கடந்த திங்கள் கிழமை (02) கைது செய்யப்பட்டார்.
அவரிடம் துருவித்துருவி விசாரணைகளை மேற்கொண்ட பயங்கரவாத புலனாய்வுப் பொலிசார் இக்கொலையுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வடமாகணசபை உறுப்பினரும், எதிர்கட்சித் தலைவரும், ஈபிடிபியின் யாழ் மாவட்ட அமைப்பாளாரும், மத்திய குழு உறுப்பினருமாகிய கந்தசாமி கமலேந்திரன் (வயது 41) அவர்களும் கொலை செய்யப்பட்ட றெக்சியனின் மனைவி அனிதாவுக்கும் கொலையுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து கந்தசாமி கமலேந்திரன் கடந்த செவ்வாய்கிழமை பயங்கரவாத புலனாய்வு பிரிவினராலும் றெக்சியனின் மனைவி அனிதா ஊர்காவற்துறை பொலிசாராலும் அதே தினத்தில் கைது செய்யப்பட்டனர். கமலேந்திரனுக்கும் கொலை செய்யப்பட்ட றெக்சியனின் மனைவியாகிய அனிதாவுக்கும் இடையில் கள்ளத் தொடர்பு காணப்பட்டதாகவும் இதன் காரணமாக தனது கணவரை கொலை செய்வதற்கு அனிதா உதவியதாகவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
கொலை தொடர்பில் கந்தசாமி கமலேந்திரன் அளித்த வாக்குமூலத்தில், “அனிதா திருமணம் செய்வதற்கு முன்னரே அனிதாவும் நானும் காதலித்தோம். இடையில் ஏற்பட்ட குழப்பங்களால் எமது காதல் கைகூடாத நிலையில் அனிதா எமது கட்சியின் முக்கிய உறுப்பினராகிய றெக்சியனை திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் எனக்கும் அனித்தாவுக்கும் இடையில் மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் அவ்வப் போது மிகவும் நெருக்கமாக இருப்போம். இது பற்றி கணவராகிய றெக்சியனுக்கு சந்தேகம் ஏற்பட என்னுடன் முரண்பட்டுக் கொண்டார். அதனால் அனிதாவின் துணையுடன் றெக்சியன் படுத்திருந்த வேளையில் நானே கைத்துப்பாக்கியால் பிடரியில் சுட்டுவிட்டு ஓடிவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கொலைக்கு பயன்படுத்தபட்ட 9 மில்லி மீற்றர் கைத்துப்பாக்கி மற்றும் 11 துப்பாக்கி ரவைகள் சூடு நடத்திவிட்டு சந்தேக நபர்கள் இருவரும் தப்பிச் சென்ற மோட்டர் சைக்கிள் ஆகியன கமலேந்திரனிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, தனது மனைவிக்கும் தமது கட்சியின் மாவட்ட அமைப்பாளருக்கும் இடையில் தொடர்பு இருப்பது தொடர்பாக தெரிந்து கொண்ட டானியல் றெக்சியன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கடிதம் ஒன்றினை எழுதி அதனை டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு அனுப்பியிருந்தார்.
அக் கடிதத்தில் “எமது கட்சி உறுப்பினர் கமல், என் மனைவியடன் தவறான முறையில் பழகி எனது குடும்பத்தை பிரிக்கின்றார். இது தொடர்பபாக உடனடியாக நடவடிக்கை எடுக்கவும். அவ்வாறு எடுக்காத பட்சத்தில் நான் கட்சியில் இருந்து விலகுகிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இக் கடிதம் கட்சித் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு கிடைத்தும் அவர் மௌனமாக இருந்தாரா? அல்லது கமலுக்கு உதவினாரா? அல்லது கடிதம் கிடைக்கவில்லையா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. மேலும் கட்சித் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவிற்கு இது தொடர்பில் நேரடியாக தெரிவிக்க றெக்சியன் முயன்ற போதும் அதற்கான வாய்ப்புக்கள் முடக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.
நேற்றையதினம் (04) மாலை 3.45 மணியளவில் ஊர்காவற்துறை நீதிமன்றில் குறித்த சந்தேக நபர்கள் மூவரும் ஆயர்படுத்தப்பட்டதுடன் மீட்கப்பட்ட தடயங்களும் பொலிசாரால் நீதி மன்றில் சமர்பிக்கப்பட்டன. இதனை விசாரித்த ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகேந்திரராஜா கைது செய்யப்பட்ட மூவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் கைப்பற்றபட்ட தடயங்களை பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்குமாறும் பொலிசாருக்கு பணித்திருந்தார்.
இதேவேளை, கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட டானியல் றெக்சனின் மனைவி அனிதா அரசதரப்பு சாட்சியாக மாறவுள்ளதாகவும், கந்தசாமி கமலேந்திரன் அவர்களை காப்பாற்றி வெளியில் எடுக்கும் முயற்சியில் ஈபிடிபித் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
எது எவ்வாறு இருப்பினும் சந்தேக நபரான க.கமலேந்திரன் விசாரணைக்காக தொடர்ந்து நீண்ட நாட்கள் தடுத்து வைக்கப்படும் பட்சத்திலும் கொலை குற்றம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்திலும் இவருடைய மாகாணசபை உறுப்புரிமை பறிபோகக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் சிறிலங்கா சுதந்திரகட்சியைச் சேர்ந்த இராமநாதன் அங்கஜன் எதிர்கட்சித் தலைவராக வரக் கூடிய வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், ஈபிடிபியினருக்கு பாரிய பின்னடைவும் ஏற்பட்டுள்ளது.
இதுவரை காலமும் ஈபிடிபி மேற்கொண்ட கொலைகளுக்கு துணை நின்ற அரசு இம்முறை அதனை விடுத்து நீதியாக செயற்படும் என கருதப்படுகிறது. யுத்தம் முடிவடைந்த பின்னர் ஆளுங்கட்சி பிரதேச சபைத் தலைவர் ஒருவரை துப்பாக்கி சூட்டுக்கு பலியாக்கி இருப்பதால் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் அரசு உள்ளது.
இது இவ்வாறு இருக்க, கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஈபிடிபியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முக்கிய உறுப்பினருமாகிய கந்தசாமி கமலேந்திரன் அவர்களை விசாரணை முடியும் வரை தற்காலிகமாக கட்சியில் இருந்து இடைநிறுத்துவதாக ஈபிடிபி இன்று (05) அறிவித்தது.
இதேநேரம் சுட்டுக் கொன்றுவிட்டு மாலை போடுவதற்கும், மாரடிப்பதற்கும் எங்களுக்கு நாங்களே நிகர் என்ற ஈபிடிபியின் தகைமையினை கீழே உள்ள செய்தி (PHOTOS) உறுதி செய்கின்றது..!!
அமரர் தானியேல் றெக்சியன் (ரஜீவ்) பூதவுடலுக்கு அஞ்சலி!
நித்திரையில் கிடந்த தனது நீண்ட நாள் தோழனும் பங்காளியுமான ரெக்சியனை சுட்டுக்கொன்ற கமலேந்திரன் ரெக்சியன் ற்கு மாலை அணிவித்து கொடி போர்த்தி அஞ்சலி செலுத்திய படங்கள் கீழே.
Average Rating