புலிகளை விமர்சிப்பதை விடுத்து, மாகாணசபைக்கு ஒத்துழையுங்கள் : சுரேஷ்
புலிகளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதையும் விமர்சித்துக் கொண்டிருப்பதையும் இவ்வருடத்தோடு கைவிடுங்கள். வடக்கிலே தமிழ் மக்களால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு அங்கீகாரமும் ஆணையும் வழங்கியுள்ளதான மாகாண சபையும் உள்ளூராட்சி சபைகளும் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்புகளை வழங்குங்கள்.
இல்லையேல் சர்வதேசத்தின் தலையீடுகளை உங்களால் தவிர்க்க முடியாதிருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று சபையில் மத்திய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.
வடக்கிலே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அதிகாரத்தில் இருக்கின்ற உள்ளூராட்சி சபைகளின் நடவடிக்கைகளையும் அவற்றின் இயக்கங்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வட மாகாண ஆளுநரும் திட்டமிட்டு தடுத்து இடையூறுகள் ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டிய சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. அரசாங்கம் அடிவருடிகளை நம்பி செயற்படுமானால் இந்நாடு மீண்டும் மீண்டும் புதைகுழிக்குள் தள்ளப்படும் நிலையாகவே அமைந்து விடும் என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற 2014ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் மூன்றாம் நாள் குழுநிலை விவாதத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுக்கான முன்மொழிவு மீது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ இங்கு உரையாற்றுகையில் நாடு கண்டிருக்கும் அபிவிருத்தி தொடர்பில் புள்ளி விபரங்களைச் சமர்ப்பித்து இங்கு உரையாற்றியிருந்தார். புகையிரத சேவை இன்று வடக்கை நோக்கி பயணித்துக் கொண்டிரு்கின்றது. இது குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
எனினும், சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையிலான பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களை வடக்கில் மேற்கொள்ள முடியும். விமான சேவைகளையும் துறைமுக சேவைகளையும் விரிவுப்படுத்துகின்ற அரசாங்கம் பலாலி விமான நிலையத்தை புனர்நிர்மாணம் செய்யுமானால் உல்லாசப் பயணிகளை கவர முடியும் என்பதோடு இந்தியாவுக்கான விமான சேவையையும் புதுப்பித்துக்கொள்ள முடியும். அதுமாத்திரமின்றி புலம்பெயர்ந்தோர் திருச்சி ஊடாக யாழ்ப்பாணத்துக்கு வர முடியும்.
எனினும், அதுபற்றி இங்கு யோசிக்கவில்லை. மேலும், காங்கேசன்துறைப் பகுதியில் எமது மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளதோடு அங்கு சுதந்திரமான வாழ்க்கை நிலைக்கும் வழிவகுக்க வேண்டும் அப்போதுதான் உண்மையான அபிவிருத்தி வெளிப்படும்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கைப் பொறுத்தவரையில் அங்கு தற்போது எந்தக்குற்றச் செயல்களும் இடம்பெறவில்லை. ஆனாலும் இங்கு பேசுகின்றவர்கள் புலிகளைப்பற்றியே பேசுகின்றனர். விமர்சிக்கின்றனர். தயவு செய்து இந்த வருடத்துடன் இவற்றைக் கைவிடுங்கள்.
வட மாகாணத்திற்கான தேர்தல் இந்தியாவினதும் சர்வதேச நாடுகளினதும் அழுத்தங்களின் காரணமாகவே நடத்தப்பட்டது. மாறாக அரசாங்கம் தானாக முன்வந்து இதனைச் செய்யவில்லை.
இந்நிலையில் வட மாகாண சபை தேர்தலில் வடக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அங்கீகரித்து வாக்குகளை வழங்கி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் தேர்தல் இடம்பெற்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சபையை கைப்பற்றியதிலிருந்து அங்கு அரசாங்கத்தின் எந்தவித ஒத்துழைப்புகளும் கிடைக்கவில்லை தற்போது டிசம்பர்் மாதமும் ஆகிவிட்டது.
ஒரு மாகாண சபை தனது முழுமையான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புகள் இருக்க வேண்டும். ஆனால், வட மாகாண சபையைப் பொறுத்தவரையில் அது இல்லை. காங்கேசன்துறை பிரதேச சம்பவங்கள் தொடர்பில் சென்று பார்த்து அது குறித்து ஜனாதிபதியுடனோ அல்லது அமைச்சர்களுடனோ முறையிடுவதற்கான சந்தர்ப்பம் முதலமைச்சருக்கு மறுக்கப்படுமேயானால் வட மாகாண சபையின் அதிகாரம் இருப்பதில் என்ன அர்த்தம் உள்ளது.
பாராளுமன்ற தேர்தலிலும் வட மாகாண சபை தேர்தலிலும் அதேபோன்று வடக்கின் உள்ளூராட்சி சபை தேர்தல்களிலும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அங்கீகாரத்தினை வழங்கியிருக்கின்றனர். எனவே, வட மாகாண மக்களின் அங்கீகாரத்தின் பிரகாரம் மாகாண சபைகளினதும் உள்ளூராட்சி சபைகளினதும் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் தமது ஒத்துழைப்புகளை வழங்கத் தவறுமேயானால் சர்வதேசத்தின் தலையீடுகளை அரசினால் தவிர்க்க முடியாதிருக்கும் எனக் கூறினார்.
சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. இவ்வாறு உரையாற்றிக் கொண்டிருந்தபோது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறுக்கீடு செய்து சுரேஷ் எம்.பி.யைப் பார்த்து ஏதோ கூறினார்.
இதனையடுத்து ஆவேசமடைந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைப் பார்த்து நான் இப்படிக் கூறுவதால் உங்களுக்கு ஏன் கோபம் வருகின்றது. நீங்கள்தான் இதற்குக் காரணம்.
வடக்கில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அதிகாரத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளின் நடவடிக்கைகளை முடக்குவதற்கும் அதனை இயங்கவிடாது செய்வதற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே காரணமாக இருக்கின்றார். வட மாகாண அபிவிருத்திக் குழுவின் தலைவராக இருக்கும் இவரும் ஆளுநரும் இணைந்தே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். வட மாகாண உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் அல்லாது தமக்கு ஏற்ற அதிகாரிகளினூடாக இவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
இத்தகைய நிலைமைகளுக்கு அமைச்சரே (பஷிலைப் பார்த்து) நீங்கள் இடம்கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். வடக்கில் உள்ளூராட்சி சபைகளுக்கான உலக வங்கியின் உதவிகூட மறுக்கப்பட்டு அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் ஏன் மறுக்கப்பட வேண்டும். தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு அந்த மக்கள் வாக்களித்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே இவை மறுக்கப்படுகின்றன.
2011 ஆம் ஆண்டில் நாம் அரசாங்கத்துடன் 18 சுற்றுப் பேச்சுகளை நடத்தியிருந்தோம். இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எமது முழு ஆதரவினையும் தருவதாகவும் உறுதியளித்திருந்தோம். எனினும், இதன்போது அரசாங்கம் தடம் மாறி பயணி த்துக் கொண்டிருந்ததால் பேச்சுகளில் நாம் நம்பிக்கையிழந்தவர்களானோம்.
நாம் அரசாங்கத்துடன் பேச்சுகளில் ஈடுபட்டதானது எம்மை மட்டும் கருத்திற் கொள்ளாது ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஓர் தீர்வு ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஆகும்.
எனவே, அமைச்சர் (பஷிலைப் பார்த்து) எம்மைப் பற்றி சிந்தியுங்கள். வடக்கு, கிழக்கின் நிலைமைகள் பற்றி சிந்தியுங்கள், எமது மக்கள் குறித்து சிந்தியுங்கள். அதை விடுத்து அடிவருடிகளை நம்பி செயற்படுவீர்களேயானால் இந்நாடு மீண்டும் மீண்டும் புதைகுழிக்குள் தள்ள ப்படுவதாகவே அமைந்துவிடும் என்றார்.
Average Rating