(VIDEO) வடமாகாண சபையின் EPDP எதிர்க்கட்சித் தலைவருக்கு விளக்கமறியல்! -விரிவான செய்தி-
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் டானியல் ரொக் ஷியனின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் EPDP கந்தசாமி கமலேந்திரன், கொலை செய்யப்பட்ட டானியல் ரொக் ஷியனின் மனைவி அனிட்டா உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுதுறை நீதிவான் ஆர்.எஸ். மஹேந்திரராஜா உத்தரவிட்டார்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரொக்ஷியன் கொலை செய்யப்பட்டமைக்கு அவரது மனைவியும், வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவரும் கொண்டிருந்த தொடர்பே காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கள்ளத்தொடர்பு ஒன்றின் விளைவாகவே நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளமை குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டதை அடுத்தே நேற்றுமுன்தினம் வடமாகாண எதிரக்கட்சித் தலைவரையும், அவருடன் தொடர்பினைப் பேணி வந்ததாகக் கூறப்படும் இறந்த பிரதேசசபை தலைவரின் மனைவியையும், வட மாகாண எதிர்க்கட்சித் தலைவரின் உதவியாளர் ஒருவரையும் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கொலைக் குற்றச்சாட்டின் பேரில் வடமாகாண எதிர்கட்சித் தலைவர் EPDP கந்தசாமி கமலேந்திரனையும் அவரது உதவியாளரான லண்டன் சசீந்திரனையும் கைது செய்துள்ள பொலிஸார் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், இறந்த பிரதேச சபையின் தலைவரின் மனைவி ரெக்ஷியன் அனிடாவை கைது செய்ததாக அவர் கூறினார்.
கடந்த மாதம் 26 ஆம் திகதி நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் டானியல் ரொக்ஷியன் புங்குடுத்தீவிலுள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.
44 வயதான தனது கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக அப்போது ரொக்ஷியனின் மனைவியினால் கூறப்பட்டது. எனினும் இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் சந்தேகத்துக்கு இடமான குறித்த மரணம் குறித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய யாழ். உதவி சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பிரேத பரிசோதனையின் போது கொலை செய்யப்பட்ட நெடுந்தீவு பிரதேசசபையின் தலைவரின் தலையின் பிடரிப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயம் காணப்பட்டதுடன் தலையிலிருந்து துப்பாக்கி ரவை ஒன்றும் மீட்கப்பட்டது. இதனை அடுத்து அவரது மரணமானது மனிதப் படுகொலை என நீதிமன்றினால் தீர்மானிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் இது தொடர்பான சந்தேக நபர்கள் பருத்தித்துறைப் பொலிஸாரினால் அடையாளம் காணப்படாத நிலையில் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் விஷேட உத்தரவுக்கமைய விசாரணைகள் கொழும்பிலிருந்து சென்ற விஷேட குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸ் குழுவிடம் கையளிக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளைப் பொறுப்பேற்று ஐந்து நாட்களுக்குள் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 9 மில்லி மீற்றர் ரக துப்பாக்கியையும் அதற்கு பயன்படுத்தும் 11 தோட்டாக்களையும், இதன்போது குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன் நெடுந் தீவு பிரதேச சபையின் தலைவரை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்துவிட்டு கொலை சந்தேகநபர்கள் இருவரும் தப்பிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் விஷேட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் மீட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
Average Rating