மாவீரர் தினம்: யாழ். கிளி, முல்லைத்தீவில் மேலும் சிலர் கைது!!
மன்னார் முருங்கன் பிரதேசத்தில் உள்ள பரிகாரிகண்டல் என்ற இடத்தில் மாவீரர் நாள் என்று வீதிச் சுவரில் எழுதினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
முருங்கன் பொலிசாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட இவர்கள், மன்னார் பதில் நீதவான் கயஸ் பெல்டானோ முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்.
அப்போது, பயங்கரவாதப் புலனாய்வு பொலிசார் இவர்களை மேல் விசாரணை செய்யவிருப்பதனால், இவர்களை மூன்று தினங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என பொலிசார் கோரியிருந்தனர்.
பொலிசாரின் கோரிக்கையை ஏற்று, அதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியதையடுத்து, அந்த மூவரும் வவுனியாவில் உள்ள பயங்கரவாதப் புலனாய்வு பொலிசாரினால் விசாரணை செய்யபட்டு வருவதாக இந்த இளைஞர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜாகியிருந்த மூன்று சட்டத்தரணிகளில் ஒருவராகிய சூசைரத்தினம் பிரிமுஸ் சிறாய்வா தெரிவித்துள்ளார்.
மாவீரர் தினம் அனுட்டிக்கப்படக் கூடாது என்றும், விடுதலைப்புலிகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ போற்றுவதும், அவர்களை ஊக்குவிப்பதும் சட்டத்திற்கு விரோதமானது என்று ஏற்கனவே தேசிய பாதுகாப்புக்கான மத்திய ஊடக நிலையம் எச்சரிக்கை செய்திருந்தது.
அவ்வாறு செய்பவர்கள், நீதிமன்ற நடவடிக்கைக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் தேசிய பாதுகாப்புக்கான மத்திய ஊடக நிலையம் அறிவித்திருந்தது.
இந்த அறிவித்தலின் பின்னணியிலேயே இந்த இளைஞர்கள் மூவரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.
இதேவேளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் மாவீரர் தினத்தன்று தீபம்ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அத்துடன் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உருவம் பொறிக்கப்பட்ட பதாதையைச் சேதப்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்கள் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் வவுனியாவில் விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மன்னார் முருங்கன் பிரதேசத்தில் வாழ்க்கைப்பெற்றான்கண்டல் என்ற இடத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையாகிய திருச்செல்வம் கிறிஸ்துராஜா என்பவர் புலிகள் அமைப்பில் முன்னர் இணைந்திருந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் விசாரணைக்காக முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
நோயாளியாகிய அவரை, பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் வவுனியாவில் தடுத்து வைத்துள்ளதாக அவருடைய மனைவி வினோதினி தெரிவித்துள்ளார்.
Average Rating