(VIDEO) பெங்களூரில் ஏ.டி.எம்.மில் பெண் அதிகாரியை அரிவாளால் வெட்டி பணம் கொள்ளை

Read Time:4 Minute, 19 Second

23992523-bangalore-atmபெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் ஜோதி உதய் (வயது 37). இவர் ஒரு தனியார் வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று காலை 7.10 மணி அளவில் இவர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் இருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து உள்ளே சென்ற மர்ம நபர், ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை கீழே இறக்கி பூட்டினார். அவரை பார்த்ததும் ஜோதி பயந்துபோய் வெளியே செல்ல முயன்றார்.

அவரை தடுத்து நிறுத்திய அந்த மர்ம நபர், துப்பாக்கி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டினார். திடீரென்று ஜோதியை தலையில் அரிவாளால் வெட்டினார். இதில், ஜோதி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

பின்னர் அவரிடம் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அந்த மர்ம நபர் ஷட்டரை திறந்து வெளியே வந்து, மீண்டும் பூட்டிவிட்டு சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து, அந்த வழியாக சென்றவர்கள் ஏ.டி.எம். வாசலில் ரத்தம் படிந்திருப்பதை பார்த்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து உடனடியாக எஸ்.ஜே. பார்க் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தபோது ஜோதி உயிருக்கு போராடிக்கொண்டிருப்பது தெரியவந்தது.

அவர்கள் ஜோதியை மீட்டு விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜோதி மீது தாக்குதல் நடந்த ஏ.டி.எம். மையத்தின் தரையில் ரத்தம் உறைந்து கிடந்தது. தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிந்திருந்த ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைத்து சோதனை நடத்தப்பட்டது. ஏ.டி.எம். மையத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிய நாய் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

ஜோதி அணிந்திருந்த நகைகள் கொள்ளை போகவில்லை. அவரது பையில் இருந்து ரூ.15 ஆயிரம் மற்றும் செல்போனை மர்ம நபர் எடுத்துச் சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த நேரத்தில் ஏ.டி.எம். காவலாளி அங்கு இல்லை.

ஏ.டி.எம். மையத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் இந்த தாக்குதல் சம்பவம் பதிவாகி இருந்தது. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த காட்சிகள் தனியார் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து எஸ்.ஜே.பார்க் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்மநபரை தேடி வருகிறார்கள்.

வங்கி பெண் அதிகாரி மீது தாக்குதல் நடந்த ஏ.டி.எம். மையம் அமைந்துள்ள சாலை, ஆட்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து என்று எப்போதும் பரபரப்பாக இருக்கும். உல்சூர் கேட் போலீஸ் நிலையமும் அருகிலேயே உள்ளது.

அந்த சாலையில் காலை நேரத்தில் நடந்த இந்த கொடூர தாக்குதல் சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொக்குவில் பகுதியில் சிசு மீட்பு
Next post லண்டன் தேம்ஸ் நதியில் மிதக்கும் விமான நிலையம்