கள்ளக் காதலனால், கருகிய குடும்பம்!!
சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்காக வைத்தியர்களும், தாதியர்களும் தம்மை மறந்து கண்ணீர் விட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? ஆம், இவ்வாறான சந்தர்ப்பங்கள் நிகழ்வது மிகவும் அரிது. ஏனென்றால் தினம் தினம் விபத்துக்குள்ளானவர்களையும் நோயாளிகளையும் பார்த்துப் பார்த்து பழக்கப்பட்ட அவர்களுக்கு அவ்வளவு எளிதில் கண்ணீர் வருவதில்லை.
இவ்வாறு, பல்வேறு வகைப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள் முதல் அதற்கு துணையாக இருந்த தாதியர் மற்றும் சிற்றூழியர்கள் வரை அனைவரையும் கண்ணீர் விடச் செய்த சம்பவமொன்று தம்புள்ளை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
மூன்று வயது நிரம்பிய ஒரு குழந்தை எவ்வாறு துரு துருவென ஓடியாடிக்கொண்டு மழலை மொழி பேசி மகிழ்ச்சியாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். அப்படியான ஒரு குழந்தை தீக்காயங்களுக்குள்ளாகி பேச முடியாமல் வேதனையால் முனங்கலிட்ட சம்பவமே தம்புள்ள வைத்தியசாலையில் பலரின் கண்களை குளமாக்கியது.
தில்சான் என்ற மூன்று வயது சிறுவனே இவ்வாறு தீக்காயங்களுக்கு உள்ளாகி தம்புள்ளை வைத்தியசாலையின் திடீர் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆம். தாயின் கள்ளக் காதலனால் பெற்றோல் வீசி கொளுத்தப்பட்டு தீயில் சிக்குண்டே இச்சிறுவன் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான்.
கடுமையான தீக்காயங்களுக்குள்ளாகியிருந்த சிறுவனுக்கு அவனைச் சுற்றி என்ன நடக்கிறது யார்? யார்? இருக்கிறார்கள் என்று கூட பார்க்க முடியவில்லை. அதாவது அந்த தீயி னால் அவன் கண் பார்வையை இழந்துள்ளதுடன். உடல் முழுவதும் தீயினால் கருகி அடையாளம் காண முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டுள்ளான்.
உணவு உட்கொள்ளக்கூட முடியாத அச்சிறுவனுக்கு இறப்பர் குழாய் மூலமே ஆகாரம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு மிகவும் மோசமான நிலையில் உள்ள அச்சிறுவனை காப்பாற்றுவது சற்று கடினமான விடயம் என்றே வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
வேதனையில் கிடக்கும் அந்த சிறுவன் சில நேரங்களில் உடலை அசைக்கக்கூட முடியாமல் அம்மா… அம்மா என்று தட்டுத் தடுமாறி பேசும் போது தம்மை அறியாமல் கண்களில் கண்ணீர் கொட்டுவதாக வைத்தியர்களும் தாதியர்களும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
கண்களை இழந்து வேதனையோடு அம்மாவை தேடும் தில்சானுக்கு அம்மாவை அழைத்து வந்து பேச வைக்க முடியாத இக்கட்டான நிலையில் வைத்தியர்கள் இருந்தார்கள். அதாவது கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி தனது இரு குழந்தைகளையும் இந்த உலகத்தையும் விட்டு சிறுவன் தில்சானின் தாய் இறுதிப் பயணம் சென்றுள்ளார்.
சிறுவன் தில்சானின் தாய் உயிரிழக்கும் போது அவருக்கு வயது 31 கள்ளக் காதலனால் தனது தாய் இரு பிள்ளைகள் சிறியானி என நால்வரும் தீ மூட்டப்பட்டதாக உயிரிழப்பதற்கு முன் சிறுவனின் தாயான சிறியாணி தெரிவித்துள்ளார்.
சிறியாணியின் தாயும் மற்றுமொரு பிள்ளையும் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை மூன்று வயது சிறுவனான தில்சான் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறான். தில்சானின் சகோதரி உதேஷி அவளுக்கு வயது எட்டு. அவளின் முகம் தவிர்ந்த ஏனைய உடற் பகுதிகள் கடுமையாக தீக்காயங்களுக்குள்ளாகியுள்ளன. அவளையும் காப்பாற்றுவது கடினம் என்றே வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை உயிரிழந்த சிறியாணியின் தாயும் தீக்காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் நிலைமையும் மோசமாகவே உள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த சிறியாணியின் வீட்டிற்கு அருகில் உள்ள பெண்மணி கருணாவதி என்பவர் பொலிஸிற்கு வழங்கிய வாக்கு மூலத்தின் படி அன்று அக்டோபர் 20 ஆம் திகதி அப்போது நேரம் அதிகாலை ஒரு மணியையும் தாண்டியிருந்தது.
சிறியாணியின் வீட்டிற்குள் கூச்சலிடும் சத்தம் கேட்டது. அப்படியே படுக்கை விரிப்பை எடுத்து மேலில் போர்த்திக் கொண்டு சிறியாணியின் வீட்டுப் பக்கம் சென்றேன். அப்போது வீட்டிற்குள் தீச்சுவாலை காணப்பட்டதுடன் அங்கிருந்து பவுல் (சிறியாணியின் கள்ளக் காதலன்) ஓடுவதை கண்டேன்.
மெல்ல ஜன்னல் வழியாக பார்த்தபோது வீட்டிற்குள்ளே எங்கும் தீ பரவியிருந்தது. அப்போது ஐயோ.. என்னை காப்பாற்றுங்களே ஐயோ…. என்னை காப்பாற்றுங்களே என்று சிறியாணி சத்தமிட்டார் உடனே நானும் சத்தமிட்டு அயலில் உள்ளவர்களை அவ்விடத்துக்கு வரவழைத்தேன்.
அதன் பின்னரே நால்வரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள் » என்று அந்த பெண்மணி வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
சிறியாணியின் கணவர் சில வருடங்களுக்கு முன்னர் வேறொரு பெண்ணை திருமணம் முடித்துள்ளார். அப்போது சிறியாணிக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். ஆகையால் இரண்டு பிள்ளைகள் மற்றும் வயதான தனது தாயுடன் இருந்த சிறியாணி தனது வாழ்வை கொண்டு நடத்த முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டார். இவ்வாறான நிலையில் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தம்புள்ள நகரிலுள்ள ஹோட்டலொன்றில் வேலைக்குச் சேர்ந்தாள் சிறியாணி.
சாதாரண உணவு பரிமாறும் பணியிலேயே அவர் நிறுத்தப்பட்டார். அந்த சந்தர்ப்பத்திலேயே பவுலுக்கும் சிறியாணிக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் இருவரும் திருமணம் முடிக்காமலேயே ஒரே வீட்டில் தங்கி குடும்பம் நடத்தியுள்ளனர். இவ்வாறு சில மாதங்கள் ஒன்றாயிருந்த நிலையிலேயே இந்த கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறியாணியும் பவுலும் ஒன்றாக இருந்த போதும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வதாகவும் சில சமயங்களில் பக்கத்து வீடுகளில் சென்று கணவனின் அடி தாங்க முடியாமல் சிறியாணி மறைந்து கொள்வதாகவும் அயலவர்கள் பொலிஸில் தெரிவித்துள்ளனர். எனவே சிறியாணி தனது கள்ளக் காதலனிடமிருந்து பிரிந்து வாழ முயன்றிருக்கலாம் எனவும் அதனாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் இருபதாம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்ற போதும் ஒன்பது நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே பத்தாவது நாளான கடந்த 30ஆம் திகதி சிறியாணி உயிரிழந்துள்ளார். எனவே அவர் சிகிச்சை பெற்று வந்த போது பொலிஸாரிடம் தனக்கு நிகழ்ந்தவற்றை வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதனடிப்படையில் தனது கள்ளக் காதலனே தம் மீது பெற்றோல் ஊற்றி மண்ணெண்ணெய் விளக்கை தம் மீது வீசியதாக முறைப்பாட்டில் பதிவாகியுள்ளது.
இவ்வாறு சிறியாணி வழங்கியிருந்த வாக்கு மூலத்தின் பிரகாரம் கடந்த முப்பதாம் திகதி தம்புள்ளை மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில் வைத்து கலேவெல பொலிஸார் சந்தேக நபரான பவுலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தான் சிறியாணியை தீ வைத்து கொளுத்தவில்லையெனவும் அவரே தனக்குத் தானே தீ வைத்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், கிராமவாசியொருவரின் வாக்கு மூலத்தின் பிரகாரம் அன்றைய தினம் காலை அவர் சிறியாணியின் வீட்டிலிருந்து ஓடியுள்ளார். அத்தோடு காட்டுப்பகுதியில் சென்று தலைமறைவாகியிருந்துள்ளார். எனவே எதற்காக அவர் ஓடி ஒளிய வேண்டும் என்ற சந்தேகம் பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, சிறியாணி தனக்குத் தானே தீமூட்டிக் கொள்வதானால் தனது மூன்று வயது மகன் உட்பட மகள் மற்றும் தாய் போன்றோரை தீயிட்டுக் கொளுத்துவதற்கான தேவை என்ன என்ற கேள்வியும் எழுகின்றது.
இவ்வாறான நிலையில் விசாரணைகளை நடத்திய பொலிஸார் சந்தேக நபரான பவுல் பெற்றோல் கொள்வனவு செய்தமை தொடர்பான தகவல்களையும் திரட்டியுள்ளனர். எனவே இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கின்ற போது சிறியாணி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டிருக்க வாய்ப்பில்லையென்றே பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்்த போது சிறியாணி பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலம் மற்றும் அயலவர்கள் வழங்கிய வாக்கு மூலங்கள் போன்றன சந்தேக நபரே இந்த கொடூரச் செயலை புரிந்துள்ளதாக எடுத்துக் காட்டுகின்றன.
இவ்வாறான பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த சிறியாணி பவுலிடம் இருந்து விலக எத்தனித்ததால் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்றே பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்தேக நபருக்கு எக்காரணம் கொண்டும் பிணை வழங்கக்கூடாது என கிராமவாசிகள் ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளனர். அத்தோடு சந்தேக நபர் அடிக்கடி சிறியாணியை தாக்கியதாகவும் அதனால் அயல் வீடுகளில் அவர் பல சமயம் தஞ்சம் புகுந்ததாகவும் கிராமவாசிகள் குறிப்பிடுகின்றனர்.
எது எப்படியோ வயது வந்தவர்களின் சில தவறான முடிவுகளால் எந்த பாவமும் அறியாத, வாழ வேண்டிய சின்னஞ் சிறுசுகள் இன்று மரணத்துக்கும் வாழ்வுக்கும் மத்தியில் போராடிக் கொண்டிருப்பதுடன் அநாதைகளாக்கப்பட்டுள்ளார்கள்.
பெற்றோர் தமது பிள்ளைகளுக்காகவும் அவர்கள் தம் எதிர்காலத்துக்காகவும் தம்மை வருத்தி மெழுகுவர்த்திகளாக தாம் உருகி பிள்ளைகள் வாழ்வில் ஒளியேற்றுவதை நாம் பார்த்திருக்கின்றோம். அதேவேளை பிள்ளைகள் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தும் கூட தமது சில தவறான முடிவுகளால் முழுக் குடும்பத்தின் எதிர்காலம் சூன்யமாகி விடுவதை போன்ற இவ்வாறான சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
எனவே, திருமணமாகி தாம் பெற்றோர்கள் என்ற அந்தஸ்தை பெற்றதும் எப்பொழுதும் தீர ஆராய்ந்து நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். கூடுமானவரை கணவன் மனைவி இருவரும் கலந்து ஆலோசனை செய்து முடிவுகளை எடுப்பது நன்று.
தம்மிடையே சண்டைகள் சச்சரவுகள் ஏற்படுகின்ற போது எந்த பாவமும் அறியாத தமது பிள்ளைகளை பற்றியும் அவர்கள் தம் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விசேடமாக கொலையோ தற்கொலையே எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வாகப் போவதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கலேவெல பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாத்தளை பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் பர்ணாந்துவின் ஆலோசனைக்கமைய கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-எம்.நேசமணி –
Average Rating