இத்தாலி அணிக்கு `சேம்சைடு’ கோலால் வெற்றி பறிபோனது: முட்டி மோதிக் கொண்ட 3 வீரர்கள் வெளியேற்றம்
உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. `இ’ பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் இத்தாலி- அமெரிக்கா அணிகள் மோதின. இத்தாலி அணி தொடக்க ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் கானாவை தோற்கடித்து இருந்தது. அமெரிக்க அணி தொடக்க ஆட்டத்தில் 0-3 என்ற கணக்கில் செக் குடியரசுவிடம் தோற்று இருந்தது.
போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இத்தாலி வீரர்கள் ஆக்ரோஷத்துடன் விளையாடினார்கள். அமெரிக்க வீரர்களின் பின்களத்தை ஊடுருவி அவர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் இத்தாலி கோல் அடித்தது. அந்த அணியை சேர்ந்த அல்பர்ட்டோ கிளார்டினோ தலையால் முட்டி அற்புதமாக கோல் அடித்தார். இந்த கோல் மூலம் இத்தாலி 1-0 என்ற முன்னிலை பெற்றது.
இந்த சந்தோஷம் மேலும் 5 நிமிடம் நீடிக்கவில்லை. ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் இத்தாலியின் பின்கள வீரர் கிறிஸ்டியன் ஜாக்கர்டோ செய்த தவறால் சேம்சைடு கோல் விழுந்தது. இதனால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது.
சேம்சைடு கோலால் இத்தாலி கடும் அதிர்ச்சி அடைந்தது. மேலும் ஒரு நிமிடத்தில் அந்த அணிக்கு மற்றொரு அதிர்ச்சி ஏற்பட்டது. முரட்டுத் தனமாக ஆடியதால் இத்தாலி பின்கள வீரர் டேனிலி டிரோசி நடுவரால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் 10 வீரர்களுடன் ஆடும் நிலை இத்தாலிக்கு ஏற்பட்டது.
முதல் பகுதி ஆட்டம் முடிய சில வினாடிகள் இருந்த போது அமெரிக்க வீரர் பேப்லோ விதிமுறைகளை மீறி முரட்டுத்தனமாக விளையாடினார். இதனால் நடுவர் சிவப்பு அட்டை காண்பித்து அவரை வெளியேற்றினார். முதல் பகுதி ஆட்டம் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் என்ற நிலையில் இருந்தது.
2-வது பகுதி ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத் தில் மற்றொரு அமெரிக்க வீரரான எடிட் போப் வெளி யேற்றப்பட்டார். அவர் 2-வது முறையாக மஞ்சள் அட்டை (எச்சரிக்கை) பெற்றார். 2 மஞ்சள் அட்டை சிவப்பு அட்டைக்கு (வெளியேற்றம்) சமம். எனவே அவர் ஆடு களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் 9 வீரர்களுடன் ஆடும் நிலை அமெரிக்காவுக்கு ஏற்பட்டது.
ஆட்டம் முடியும் வரை மேலும் கோலால் எதுவும் விழவில்லை. இதனால் 1-1 என்ற கணக்கில் ஆட்டம் டிரா ஆனது. சேம்சைடு கோல் இத்தாலியின் வெற்றி பறிபோனது. இத்தாலி அணி 2 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 1 டிராவுடன் 4 புள்ளிகளும், அமெரிக்கா ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் ஒரு புள்ளியும் பெற்றன. இத்தாலி அடுத்த ஆட்டத்தில் செக் குடியரசுடனும், அமெரிக்கா, கானாவுடனும் மோதுகின்றன. இந்த ஆட்டங்கள் 22-ந்தேதி நடக்கிறது.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் கானா 2-0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசை அதிர்ச்சிகரமாக தோற்கடித்தது. இரு அணிகளும் தலா 3 புள்ளியுட னும் உள்ளன. `டி’ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் போர்ச்சுக்கல் 2-0 என்ற கணக்கில் ஈரானை தோற்கடித்தது.