என்னது.. சிவாஜி முள்ளிவாய்க்கால் போயிட்டாரா? நடுவுல கொஞ்சம் ஆட்களை காணோம்!!
இலங்கை வடக்கு மாகாண அரசில் அனைவரும் இன்னமும் பதவிப் பிரமாணம் செய்து முடியவில்லை. தொடர் ரிலே ஓட்டம் போல, ஒவ்வொருவராக பதவியேற்கும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கின்றன.
முதல்வர் விக்கினேஸ்வரன் கொழும்புவில், ஜனாதிபதி ராஜபக்ஷே முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அதை எதிர்த்து, அந்த பதவிப் பிரமாண வைபவத்துக்கு அவருடைய கூட்டமைப்பு சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் யாரும் போகாமல் பகிஷ்கரித்தார்கள். கூட்டமைப்பில் அங்கமான ப்ளாட் தலைவர் சித்தார்த்தன் மட்டும் சென்றிருந்தார்.
அதையடுத்து யாழ்ப்பாணத்தில், முதல்வர் விக்கினேஸ்வரன் முன்னிலையில் அமைச்சர்கள், மற்றும் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்வார்கள் என சொல்லப்பட்டது.
அதற்கிடையே காட்சி மாறியது.
விடுதலைப் புலிகள் வெளிநாட்டு பிரிவுகளில் ஒன்றான நெடியவன் படையணியின் இணையத்தளம், “ஜனாதிபதியால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்ட விக்கினேஸ்வரன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்ய முடியாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி எழிலனின் மனைவி அனந்தி சொன்னார்.
அத்துடன் சிங்கக்கொடி சம்பந்தரையும், சிங்கள சம்பந்தி விக்கினேஸ்வரனையும் பாதுகையால் (நெடியவன் படையணி அளவுக்கு நாமும் வார்த்தைப் பிரயோகம் செய்வது சாத்தியமில்லை) அடிப்பேன் என்று பொங்கினார்” என செய்தி வெளியிட்டது.
இந்தச் செய்தி மீடியாக்களில் பரபரப்பாக அடிபடத் தொடங்கவே, “வெற்றிவேல்.. வீரவேல்” என்ற முழக்கம் திக்கெட்டும் எழுந்தது. ஆனால் அனந்தியோ, “ஐயோ அப்படியெல்லாம் நான் சொல்லவே இல்லையே..” என்று அறிவிப்பு செய்தார்.
இதையடுத்து, முதல்வர் விக்கினேஸ்வரன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியின் மனைவி ஆஜர்.
அவர் ஏன் முதல்வர் விக்கினேஸ்வரனை பகிஷ்கரிக்கவில்லை என்ற குழப்பத்தில் உள்ளது வெளிநாட்டு விடுதலைப் புலிகள் நெடியவன் படையணி. “எங்கே சறுக்கியது ஆபரேஷன்?”
அனந்திதான், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களில், விக்கினேஸ்வரனுக்கு அடுத்த இடத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளை மக்களிடமிருந்து பெற்றவர். அவர் விக்கினேஸ்வரனை பகிஷ்கரிக்கும் முதலாவது ஆளாக இருப்பார் என்றே ஆளாளுக்கு சொல்லிக்கொண்டார்கள்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியின் மனைவி கைவிட்டாலும், வேறு 9 பேர் உறுப்பினர்கள் கைவிடவில்லை.
முதல்வர் விக்கினேஸ்வரனின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்ய விரும்பாமல், அந்த பதவியேற்பு வைபவத்துக்கு வராமல் 9 பேர் பகிஷ்கரித்தனர், தேர்தலில் 3-வது அதிகப்படியான வாக்குகளை பெற்ற சித்தார்த்தன் உட்பட!
மீதிப்பேர், பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 30. அதில் 9 பேர், பகிஷ்கரித்தனர். அதாவது சுமார் 30 சதவீத தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் முதல்வர் விக்கினேஸ்வரனை நிராகரித்தனர்.
முதல்வர் விக்கினேஸ்வரன், ஜஸ்ட் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் அளவுக்குகூட தகுதியற்றவர் என ஒதுக்கித் தள்ளினர்.
பகிஷ்கரித்த 9 பேரும், விடுதலைப் புலிகள் இலங்கை ராணுவத்துடன் இறுதி யுத்தம் புரிந்த முள்ளிவாய்க்காலில் போய் நின்று பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என, மற்றொரு விடுதலை இயக்கமான ஆ.பி.ஆர்.எல்.எஃப்.பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
மற்றொரு விடுதலை இயக்கமான டெலோவின் தலைவர் செல்வம் இதை ஆதரிக்கவில்லை. காரணம், அவர் ஏற்கனவே விக்கினேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில், நடைபெற்ற பதவியேற்பு வைபவத்துக்கு சென்று திரும்பியிருந்தார்.
அந்த இயக்கத்தின் தலைவர் கலந்து கொண்டாலும், அக்கட்சியின் சிறப்பு உறுப்பினர் சிவாஜிலிங்கம், கலந்து கொள்ளவில்லை. டெலோ உறுப்பினரான அவர், முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்யப் போவதாக, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷூடன் சேர்ந்து கொண்டார்.
அதற்கிடையே ப்ளாட் தலைவர் சித்தார்த்தன், தமது வீட்டிலேயே ஜே.பி. முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள போவதாக கூறப்பட்டது. (ஐயோ.. உங்களுக்கு புண்ணியமாக போகும் ‘கே.பி. முன்னிலையில்’ என்று படித்து விடாதீர்கள்.. ஜே.பி. – Justice of the Peace முன்னிலையில்!)
இவரது ப்ளாட் இயக்கத்தில் இருந்து மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அதில் இருவர் விக்கினேஸ்வரனை நிராகரிக்க, ஒருவர், விக்கினேஸ்வரன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள ஏற்கனவே ஆஜராகியிருந்தார்.
அந்த ஒருவர், சம்பந்தனின் கட்சியான தமிழரசு கட்சியை சேர்ந்தவர். ஆனால் ப்ளாட் இயக்கத்தின் ஒதுக்கீட்டில் சீட் பெற்று போட்டியிட்டு விட்டு, ஜெயித்தபின் இவர்களுக்கு டாடா சொல்லிவிட்டு, தாய்க்கட்சிக்கு போய்விட்டார். தாய்க்கட்சியும், ‘தொலைந்துபோன ஆடு திரும்பி வந்தது’ என அவரை வாரி அணைத்துக் கொண்டது.
அதனால், விக்கினேஸ்வரன் பகிஷ்கரிப்பு உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்தது.
ஓகே… இதுவரை கணக்கு சரியாக வைத்திருக்கிறீர்களா பார்க்கலாம்.. எங்கே சொல்லுங்கள்.. இந்தக் கட்டத்தில் எத்தனைபேர் முள்ளிவாய்க்கால் செல்லப் போகிறார்கள்? ரைட்.. கரெக்ட் ஆன்சர்… மொத்தம் 7 பேர்!
இந்த இடத்தில் மற்றொரு குழப்பம் ஏற்பட்டது.
அது என்னவென்றால், “ஆமா.. ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்துக்கும், முள்ளிவாய்க்காலுக்கும் என்னங்க கனெக்ஷன்?” என்ற கேள்வி அக்கட்சியின் சில உறுப்பினர்களிடையே எழுந்தது.
கடந்த 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் இயக்கமே இலங்கை ராணுவத்துடன் யுத்தம் புரிந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப். தலைவராக உள்ள சுரேஷ், சிறப்புத் தளபதியாக இருந்த ‘மண்டையன் சிறப்பு படையணி’ அந்த யுத்தத்தில் பங்கேற்கவில்லை. மண்டையன் சிறப்பு படையணி, முள்ளிவாய்க்கால் காலத்துக்கு முன்னரே, தமது இன்னிங்ஸை முடித்துக்கொண்டு, ஓய்வு பெற்றிருந்தது.
அந்த இன்னிங்ஸில் மண்டையன் சிறப்பு படையணியால் வீழ்த்தப்பட்ட அநேக விக்கெட்டுகள், விடுதலைப் புலிகளின் விக்கெட்டுகள்!
முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பித்து வந்த அனந்தியே விக்கினேஸ்வரன் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ள, ஈ.பி.ஆர்.எல்.எஃப். முள்ளிவாய்க்கால் போய் இறங்கினால், விசித்திர காட்சியாக இருக்குமே என்பதே குழப்பத்துக்கு காரணம்.
இந்தக் குழப்பத்தால் சுரேஷ் பிரேமச்சந்திரன், “முள்ளிவாய்க்கால் போக வேண்டாம் என மதகுரு ஒருவர் சொன்னார். அதனால் நாம் முள்ளிவாய்க்கால் திட்டத்தை கைவிடுகிறோம்” என அறிவித்துவிட்டார். இந்த அறிவிப்புடன் 6 பேர், முள்ளிவாய்க்கால் ட்ரிப்பை கேன்சல் செய்து விட்டனர்.
கடைசியில் இன்று காலை முள்ளிவாய்க்கால் போய் இறங்கினார், சிவாஜிலிங்கம்… தன்னந்தனியே!
“என்னது.. சிவாஜி(லிங்கம்) முள்ளிவாய்க்கால் போயிட்டாரா?” என்று மற்றைய கட்சிகள் கேட்கின்றன, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணம்’ பட ஸ்டைலில். (விறுவிறுப்பு)
Average Rating