சூடானில் கலவரம்: இணையை தளங்கள் துண்டிப்பு
கடந்த 2011 ஆம் ஆண்டில் தெற்கு சூடான், சூடானிலிருந்து தனி நாடாகப் பிரிந்தபோது அந்நாட்டின் எண்ணெய் வளங்கள் நிறைந்த பகுதிகள் தெற்கு சூடானுடன் இணைந்தன. அதனால் மானிய சலுகைகளை அந்நாட்டு அரசு குறைக்க நேர்ந்தது. இது குறித்த எதிர்ப்புகள் முதலில் எழுந்தபோது அரசு ஆர்ப்பாட்டக்காரர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோரை வலுவாக அடக்கியது.
ஆயினும், தற்போது மானியங்களை நிறுத்தியதுடன் எண்ணெய், எரிபொருள் விலைகளை அரசு இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது பெரும் போராட்டத்திற்கு வழி வகுத்துள்ளது. தலைநகர் கர்த்தூமின் தென் பகுதியில் உள்ள கெசிரா மாகாணத்தில் மூன்று நாட்கள் முன்னதாகத் தொடங்கிய இந்தப் போராட்டம் அதிபர் ஓமர் அல் பஷீருக்கு எதிரான போராட்டமாக மாறியுள்ளது.
கடந்த 20 வருடங்களாகப் பதவியில் இருக்கும் பஷீர், 2003 ஆம் ஆண்டு சூடானின் மேற்குப் பகுதியில் உள்ள டார்பரில் ஏற்பட்ட கலவரங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று ஐ.நா அமைப்பு அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 3,00,000 க்கும் மேற்பட்ட மக்கள் இந்தக் கலவரங்களினால் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது நடைபெறும் ஐ.நா பொதுக்குழு மாநாட்டிற்கும் பஷீருக்கு அழைப்பு வந்துள்ளது. ஆயினும், முதலில் அவர் சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் அவர் அங்கு செல்லமுடியவில்லை.
இதனிடையில், நேற்றைய கலவரத்தில் கட்ரோ மாவட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதைகளை அடைத்து போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுத்தினார்கள். அங்குள்ள காவல் நிலையமும் தாக்கப்பட்டது. கர்த்தூமின் வட பகுதியிலும் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு தீக்கிரையாகியவர்களை காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி விரட்டினர். கடந்த மூன்று நாட்களில் குறைந்தது மூன்று பேராவது கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும், நேற்று அங்குள்ள இணையதளத் தொடர்புகள் முழுவதும் பாதிக்கப்பட்டிருந்தது. இணையதளப் பாதைகளை வரையும் ரெனிசிஸ் என்ற நிறுவனம் இந்த இருட்டடிப்பு அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் என்பதை உறுதியாகக் கூறமுடியவில்லை என்று தெரிவித்தது. ஆயினும், கடந்த 2011 ஆம் ஆண்டில் அண்டை நாடான எகிப்தில் ஏற்பட்ட புரட்சியின்போதும் இதேபோன்றதொரு செயலிழப்பு நடைபெற்றதை அந்நிறுவனம் சுட்டிக்காட்டியது.
வன்முறைக் கலவரங்கள் நடைபெறும்போது அரசாங்கத்தின் செயல்பாடு அல்லது தற்செயலாக நடைபெறும் தொழில்முறைக் கோளாறுகள் என இரண்டில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று மூத்த ஆய்வாளரான டக் மடோரி தெரிவித்தார். பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் நியுயார்க் குழு ஒன்று செய்திகள் வெளியில் பரவாமல் இருக்க அரசு எடுத்த முயற்சி என்ற தகவல் கிடைத்தை முன்னிட்டு சூடான் அரசாங்கத்திடம் மீட்பு நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
Average Rating