மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஓர் அன்பு மடல்..
அன்புக்குரிய மாகாண சபை உறுப்பினர்களுக்கு அநேக வணக்கம்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய பெருமிதத்தில் இருக்கின்ற உங்களுக்கு அவசரமாக இக் கடிதத்தை எழுத முனைந்தோம்…
தேர்தல் பிரசாரத்திற்கான உங்கள் கடுமையான உழைப்பும் பிரசாரச் செலவும் உங்களுக்கு கழைப்பைத் தந்தாலும் நீங்கள் அடைந்த வெற்றி அனைத் துச் சோர்வுக்கும் மருந்தாக அமைந்திருக்கும். கூடவே நீங்கள் கால்நடையாக – வீடு வீடாக அலைந்து திரிந்து செய்த பிரசாரத்தின் பயனாக இப்போது உங்கள் வீடுகள் தோறும் ஆதரவாளர்கள் நிறைந்து கொள்வர்.
சிலவேளை உங்களுக்கு வாக்களிக்காதவர்கள் கூட, வெற்றியின் பக்கம் சாய்ந்து கொள்ளும் தந்திரோபாயத்தின் கீழ் உங்களுக்கு அதிக நெருக்க மாக நின்று கொள்ளலாம்.
இதுதவிர, வெற்றியின் பெருமிதத்தைக் கொண்டா டும் வகையில் மாலை மரியாதைகளும் மேளதாளங் களும் விசேட ஊர்வலங்களும் நடந்து முடியலாம். தேர்தல் வெற்றிக்கான இந்தக் கலாசாரங்களை நீங்கள் விரும்பாவிடினும் உங்கள் ஆதரவாளர்கள் விடமாட்டார்கள் என்பது உண்மை.
எனவே, தேர்தல் வெற்றியை மிக எளிமையாகக் கொண்டாடுவது உங்களை உற்சாகப்படுத்தும் என்ற ளவில் அதனை மக்கள் ஏற்றுக்கொள்வர்.
அதேநேரம் வடக்கு மாகாணசபையின் உறுப்பி னராகிவிட்ட நீங்கள் இனிமேல் நேரமில்லை என்ற சொற்பதத்தை அடிக்கடி உச்சரிப்பீர்கள். இதுதவிர உங்களைச் சந்திப்பதற்காகத் தமிழ் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிவரும். அல்லது காத்தி ருந்தும் சந்திக்க முடியாமல் போகும்.
ஐயாவை இப்போது சந்திக்க முடியாது. அவருக்கு கூட்டம் இருக்கிறது, விழா நடக்கிறது, கொழும்பில் அலுவல் இருக்கிறது என்ற பதில்களும் உங்கள் கந்தோரில் இருந்து கிடைக்கும்.
காத்திருந்து கால்கடுக்க வரிசையில் பார்த்து நின்று உங்களுக்கு வாக்களித்தவர்கள் சந்திக்கப்போகும் சம்பவங்கள் தான் இவை. எனவே இத்தகைய சம்ப வங்கள் உங்கள் நிர்வாகத்தில் நடந்தேறக் கூடாது என்பதற்காகவே இக்கடிதம் எழுதப்படுகிறது.
அன்புக்குரிய மாகாணசபை உறுப்பினர்களே! நீங்கள் மக்கள் சேவை புரியவேண்டும். பகலிரவு என்று கால நேரம் பார்க்காமல் எந்த நேரத்திலும் அல்லல்படும் மக்களுக்காக உங்கள் பணியை ஆற்றுங்கள்.
உங்களை நாடி, தேடி வருகின்ற மக்களை ஒருபோதும் அலைக்கழிக்காதீர்கள். எவர் உங்களி டம் வந்தாலும் உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்.
கூட்டம், விழா, பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தி னர் என்ற படோபகாரத்தில் ஈடுபட்டு பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள்.
மக்கள் சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்குங்கள். வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் திணைக் களங்கள், கூட்டுத்தாபனங்கள் என்பவற்றுக்கு விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்து அவற்றின் இயங்கு நிலைக்கு உதவுங்கள்.
அதிகாரிகள் அலுவலகங்களில் இருப்பதற்கு வழிசமையுங்கள். அமைச்சுக்களின் செயலாளர்கள் 24 மணிநேரமும் வாகனங்களில் ஓடித்திரிவதை தடுத்து நிறுத்தி, கந்தோரில் இருந்து பணி செய்ய ஏற்பாடாற்றுங்கள்.
வடக்கு மாகாணசபையின் சமகால நிர்வாகம் ஒருநாள் வேலை செய்வதற்காக ஆறு நாள் கூட்டம் நடத்தியது. செயலாளர்களின் கதிரைகள் காலியாக இருந்ததே அதிகம். வாகனங்களில் வருவார்கள். வந்தவர் எந்தப் பக்கத்தால் போனார் என்பது தெரியாமல் மாயாஜாலம் நடந்தேறும்.
இதற்கெல்லாம் அவர்கள் சொல்வது ஆளுநர் பயம் என்ற உளநிலை நோயைத்தான். ஆகையால் அதிகாரிகளுக்கு இருக்க வேண்டிய அதிகாரங்களைக் கொடுங்கள்.
மக்களை மதியுங்கள். மக்களையும் பணியாளர்களையும் மதிக்கின்ற அதிகாரிகளை நியமியுங்கள். உங்கள் பணியை மக்கள் போற்றுவர்.
மாறாக மக்கள் பணியை மறந்து மாலை மரியாதை என்று நீங்கள் தவம் கிடந்தால்,..
அட! ஓடித்திரிந்தாலும் ஆளுநர் நிர்வாகம் திறம் என்று மக்கள் சொல்வர்.
Average Rating