“பிரபாகரன் கொடூரமானவர்; காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியா வரவேண்டும்” -முதல்வர் விக்கி

Read Time:8 Minute, 44 Second

“இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது” என தமிழகத்தில் குரல்கள் எழுந்துள்ள நிலையில், “இந்தியா இந்த மாநாட்டை புறக்கணிக்காமல் கலந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார், விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர், சீ.வி.விக்னேஸ்வரன்.

இலங்கையில், தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வட மாகாணத்தில், மாகாண அரசை உருவாக்குவதற்கான தேர்தல் நாளை நடக்கிறது. விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்டு, புலிகளின் தயவில் அரசியல் நடத்திய கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இந்த தேர்தலில் ஜெயித்து ஆட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன், “பொதுநலவாய நாடுகள் (காமன்வெல்த்) மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும். தமிழக கட்சிகள் இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால், நாம் இந்த மாநாட்டு புறக்கணிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

இலங்கை அரசு என்ன செய்ய வேண்டும் என்று தமிழர்கள் வலியுறுத்துவதற்கு காமன்வெல்த் மாநாடு ஒரு அரங்கமாக இருக்கும். இந்த மாநாட்டை புறக்கணிப்பு செய்வது, எமக்கு இழப்பையே ஏற்படுத்தும். இங்குள்ள தமிழர்கள் ஏற்கனவே இலங்கையில் தேர்தல்களை புறக்கணித்த காரணத்தாலேயே, கிழக்கு மாகாணத்தை ஆட்சி செய்யும் சந்தர்ப்பத்தை இழந்துள்ளோம்.

எனவே எதையும் புறக்கணிக்காமல், எதிலும் ஒதுங்கியிருக்காமல் இணைந்திருக்கும் போது, விஷயங்களை சாதிக்கமுடியும். நான் இந்த விஷயத்தை ஏனைய அரசியல்வாதிகளை போல பார்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதம நீதிபதியாக இருந்துவிட்டு, சமீபத்தில் அரசியலுக்கு வந்த சீ.வி.விக்னேஸ்வரன், விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக உள்ளார். நாளை நடைபெறவுள்ள தேர்தலின்பின், அநேகமாக இவர்தான் இலங்கை வட மாகாணத்தில் முதல்வர்.

செந்தமிழன் சீமானின் நாம் தமிழர் கட்சியால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் சீ.வி.விக்னேஸ்வரன். “விடுதலைப் புலிகள் இல்லை என்றவுடன் விக்னேஸ்வரன் என்ற பூனை நட(ன)மாடுகிறது” என பொங்கி எழுந்திருந்தது, நாம் தமிழர் கட்சி.

சீமான் கட்சியால் ‘பூனை’ என வர்ணிக்கப்பட்ட விக்னேஸ்வரன் பற்றி விடுதலைப் புலிகள் வெளிநாட்டுப் பிரிவு என்ன சொல்கிறது?

“தமிழ் மக்கள் இந்த தேர்தலை புறக்கணிக்காமல், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து, விக்னேஸ்வரனை முதல்வர் ஆக்க வேண்டும்” என, வெளிநாட்டு விடுதலைப் புலிகள் அரசியல்துறை பொறுப்பாளர் ம.அன்புமாறன் கூறியுள்ளார்.

இதையடுத்து, நாம் தமிழர் கட்சியின் ‘பூனை’, விடுதலைப் புலிகளால் பரிந்துரைக்கப்பட்ட முதல்வர் வேட்பாளர் ஆகியுள்ளார்.

இந்தத் தேர்தல், இலங்கையின் வட பகுதியில் நாளை நடைபெறுகிறது. தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கோஷங்களில் ஒன்று, “யாழ்ப்பாணம் உட்பட, இலங்கை வடபகுதியில் ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்” என்பதே.

இந்தக் குற்றச்சாட்டுக்கு இலங்கை அரசின் சார்பில் என்ன கூறப்படுகிறது?

இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, “வட மாகாணத்தில் இருந்து 95 சதவீதமான ராணுவம் வெளியேறி விட்டது” என்று கூறியிருக்கிறார்.

சரி. யார் இந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரனின் சம்பந்தி. அதாவது, சிங்களவர்களுடன் இணைந்து வாழ முடியாது என தனிநாடு கோரிய கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரின் மகன் திருமணம் செய்தது, சிங்கள அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் மகளை!

“சிங்களவர்களுடன் இணைந்து வாழமுடியாது. ஆனால், சிங்கள பெண்ணை குடும்பத்தில் சேர்த்துக் கொண்டு இணைந்து வாழலாம்” என்ற பாலிஸி, இலங்கை அரசியலில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை சிங்கள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தமது தமிழ் சம்பந்தி விக்னேஸ்வரன் பற்றி என்ன சொல்கிறார்?

tna.Vigneswaran_“விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக நியமித்ததை வெளிநாட்டு புலி ஆதரவாளர்கள் விரும்பவில்லை. அவர்கள் அவரை எதிர்க்கின்றனர். ஏனென்றால் விக்னேஸ்வரன் மிதவாதக் கொள்கையைக் கொண்டவர். அத்துடன், பிரிவினைக்கு எதிரானவர். ஈழத்துக்கு எதிரானவர். அவரைப் போன்றவர்கள்தான் நமது நாட்டுக்கு தேவை” என்று சம்பந்திக்கு சர்டிபிகேட் கொடுத்துள்ளார், வாசுதேவ நாணயக்கார.

“இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ள கூடாது” என ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ உட்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் குரல் கொடுக்க, “இந்தியா கலந்துகொள்ள வேண்டும்” என்கிறார், விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் கட்சி (நாளைய) முதல்வர் விக்னேஸ்வரன். டைம்ஸ் ஆ.ப் இந்தியாவுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவ்வாறு கூறியுள்ளார் அவர்.

அதே டைம்ஸ் ஆ.ப் இந்தியா பேட்டியில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் இந்த ‘நாளைய முதல்வர்’ விக்னேஸ்வரன்?

“பிரபாகரன் கொடூரமானவராக இருக்கலாம். அதேபோல் இலங்கை அரசாங்கமும் கொடூரமானது” (“Prabakaran may have been brutal, but so is the government”)

விக்னேஸ்வரனால், கொடூரமானவராக வர்ணிக்கப்படும் பிரபாகரனால் அன்று உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய முதல்வர் வேட்பாளர், விக்னேஸ்வரன். அவரால், ‘கொடூரமானது’ என வர்ணிக்கப்படும் இலங்கை அரசில், அவரது சம்பந்தி வாசுதேவ நாணயக்கார அமைச்சராக உள்ளார்.

“ஐயகோ, வட மாகாணத்தில் திரும்பிய இடமெல்லாம் ராணுவம்” என தமிழ் சம்பந்தி அலற… “இல்லையே, வட மாகாணத்தில் இருந்து 95 சதவீத ராணுவத்தினர் வெளியேறிவிட்டார்களே” என சிங்கள சம்பந்தி பதில் கூற….

இலங்கை வட மாகாணத்தில் நடக்கிறது தேர்தல்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடமாகாண சபை தபால் வாக்குகளின் முடிவுகள்!
Next post யாழ் மாவட்டம்: அனைத்துத் தொகுதிகளிலும் தமிழ் அரசுக் கட்சி வெற்றி!!