“கூட்டமைப்பை சிதைக்க” யாழில் ஒரு சுரேஸ் பிரேமச்சந்திரன், கிளிநொச்சிக்கு ஒரு சிறிதரன்! -எஸ்.எஸ்.கணேந்திரன் (வாசகர் கருத்து)
எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் பல முரண்பாடுகளுக்கு மத்தியிலும் தேர்தலுக்காக மட்டுமே கூட்டமைத்து போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேதாளம் முருங்கை மரம் ஏறும் பரிதாப நிலைக்கு சென்று கொண்டிருப்பது வேதனையான விடயமே.
பழைய மொந்தில் புதிதாய் வந்த கள்ளைப்போல் தமிழரசுக் கட்சியில் இருந்து வந்த பழசுகள் ஆரம்பத்தில் சந்திரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்வுத்திட்டத்தை எதிர்த்தார்கள், பின்னர் 13 ஜ எதிர்த்தார்கள், அதன் பின்னர் பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் கிழக்கு மாகாண சபையை எதிர்த்தார்கள்.
இருண்டிருந்த கிழக்கு மாகாணத்தை ஓரளவுதன்னும் ஒளியூட்டிய பிள்ளையானை அரசியலில் ஓரம்கட்ட வரிந்து கட்டி இரண்டாவது கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு தமிழன் ஆண்ட கிழக்கு மாகானத்தை முஸ்லிம்களுக்கு தாரைவார்த்து பெருமை சேர்த்து கொள்கையயும் கைவிட்டு, விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தற்போது வடக்கில் போட்டியில் இறங்கி, தமக்குதாமே குழி பறித்து வடக்கையும் அரசுக்கு தாரை வார்க்கும் கைங்கரியத்தில் இறங்கியுள்ளமை தமிழ் மக்களுக்கு செய்யப் போகும் மாபெரும் துரோகமாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE), தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) ஆகியவை எப்படியேனும் வட மாகாணத்தை கைப்பற்றியே தீரவேண்டும் என்ற சிந்தனையோடு தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில்,
திரு.விக்னேஸ்வரனை விட ஒரு வாக்கு தன்னும் தனது சகோதரன் சர்வேஸ்வரன் அதிகமாக பெற்று முக்கிய அமைச்சர் பதவி பெற்றால் போதும் என்ற தரம்கெட்ட சிந்தனையுடன் சுரேஸ் பிரேமச்சந்திரனின் யாழ் மாவட்ட பிரச்சாரமும்..
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கா விட்டாலும் பறவாய் இல்லை, ஆனந்தசங்கரிக்கு வாக்களிக்க வேண்டாமென்ற சிறிதரனின் கிளிநொச்சி மாவட்ட பிரச்சாரமும்..
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைப்பது மட்டுமல்லாது, கிழக்கு மாகாண தமிழர்களுக்கு இழைத்த அதே துரோகத்தை, வட மாகாண தமிழ் மக்களுக்கும் செய்தே தீருவோம் என மார்தட்டி நிற்பது ஒரு மிகக்கேவலமான விடயம் என்பதை..
திருவாளர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரனும், சிறிதரனும் ஒருபோதும் உணரப் போவதும் இல்லை அவர்களின் எண்ணங்கள் கைகூடப் போவதும் இல்லை என்பதை தமிழ் மக்கள் உணர்ந்யேயாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
நான் என்றுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பையோ அல்லது அதன் சிந்தனையற்ற கொள்கையையோ ஆதரித்தவனும் அல்ல ஆதரிக்கப் போவதும் இல்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும் இலங்கை வரலாற்றில் வடக்கு மாகாணத்துக்கு நடைபெறும் முதல் தேர்தலில் தமிழர்களின் கௌரவம் நிலை நாட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பதே இதை எழுத வேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
எனவே வட மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிதரன் போன்ற கபடதாரிகளுக்கு பகடையாகாமல் விழித்தெழுவது கட்டாயத்தின் தேவையாகும்.
–எஸ்.எஸ்.கணேந்திரன்
Average Rating