த.தே.கூ வேட்பாளர் தம்பிராஜா உண்ணாவிரதம்..!!
தம் மீது தாக்குதல் நடாத்தியவர்களை இதுவரை கைது செய்யாததை கண்டித்தும் தமக்கு இருதடவைகள் பொலிசார் தந்த வாக்குறுதிகள் நிறைவேற்றாததை கண்டித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் கு.தம்பிராஜா உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
யாழ் மாவட்ட செயலகம் முன்பாக இன்று மதியம் 1 மணியில் இருந்து உண்ணாவிரத போராட்டத்தை அவர் ஆரம்பித்து உள்ளார்.
கடந்த 20ம் திகதி தம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் தாக்கியவர்களை பொலிசாருக்கு இனம் காட்டியும் இதுவரை அவர்களை கைது செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை நேற்றைய தினம் இரவு எனது வீட்டுக்கு அருகில் இனம் தெரியாத நபர்களின் நடமாட்டம் காணப்பட்டது. இரவு முழுவதும் நாய்கள் விடாமல் தொடர்ந்து குரைத்து கொண்டே இருந்தன.
எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கிறேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் கு.தம்பிராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 20ம் திகதி அங்கஜனின் தந்தையான இராமநாதனும் அவர்களது ஆதரவாளர்களும் என்னை தாக்கினார்கள். அதன் பின்னர் இராமநாதன் துப்பாக்கியை காட்டி என்னை சுட்டுவிடுவதாகவும் மிரட்டி விட்டு கடை ஒன்றினுள் ஓடி ஒளிந்து கொண்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிசாரிடம் இராமநாதன் கடைக்குள் நிற்கிறார் அவரை உடனடியாக கைது செய்யுமாறு கோரினேன். பொலிசார் அவரை கைது செய்யாததால் நான் குறித்த கடைக்கு முன்பாக இருந்து போராட்டம் நடத்தினேன்.
அப்போது என்னுடன் தொடர்பு கொண்ட யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நீங்கள் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்யுங்கள் நான் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
ஆனால் முறைப்பாடு செய்யப்பட்ட பின்னரும் அவர் கைது செய்யப்படவில்லை. அதன் பின்னர் கடந்த 24 ம் திகதி யாழ் பொலிஸ் நிலையம் சென்று ஏன் நீங்கள் இதுவரை இராமநாதனை கைது செய்யவில்லை என கோரிய போது, யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேர வெளியே போ என என்னை தகாத வார்த்தைகளால் பேசினார்.
வீதியின் நடுவில் இருந்து சத்தியா கிரக போராட்டத்தில் ஈடுபட்டேன் பின்னர் மாலை என்னுடன் தொடர்பு கொண்ட யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சம்பவம் தொடர்பாக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என போராட்டத்தை கைவிடுமாறு கோரி இருந்தார். அதனை அடுத்து நான் போராட்டத்தை கைவிட்டேன்.
இவ்வாறாக பொலிசார் இருதடவைகள் எனக்கு தந்த வாக்குறுதிகளை தவற விட்டு விட்டார்கள். நேற்றைய தினம் என் மீது தாக்குதல் நடாத்திய அதே குழு சாவகச்சேரி பிரதேசத்தில் தம் கட்சியில் போட்டியிடும் சக வேட்பாளரை தாக்கியுள்ளார்கள்.
எனக்கு துப்பாக்கி காட்டி மிரட்டிய அதே இராமநாதன் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். ஆனால் இதுவரை இராமநாதன் கைது செய்யப்படவில்லை என தெரிவித்தார்.
அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் கு சர்வானந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் கு. தம்பிராஜா உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு நேரில் வந்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
Average Rating