புலிக்கொடி விவகாரம் பிணை வழங்க வேண்டாமென கோரிக்கை…!!
ஐக்கிய இராஜியத்தில் கார்டிஃப் நகர மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபருக்கு பிணை வழங்கவேண்டாம் என்று குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) நீதவானிடம் கோரியுள்ளனர்.
இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை பிரதான சந்தேகநபரை, மான்செஸ்டர் பொலிஸின் சர்வதேச குற்றச்செயல் கிளை தேடிவருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவானிடம் கடந்த 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தனர்.
சந்தேகநபரான லோகேஸ்வர்ன மணிமாறன் இன்னும் கைது செய்யப்படாது மறைந்து வாழ்வதால் விசாரணையை முடிக்க முடியவில்லை என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு அன்று கொண்டுவந்திருந்தனர்.
ஆகையால், ஏற்கெனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களான குலதீபன் மற்றும் உதயனை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதியளிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் அன்று அனுமதி கோரிநின்றனர்.
இதேவேளை, புலிக்கொடியுடன் ஓடியவரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய ஜூலை மாதம் 30 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.
யசோதார சடாச்சரமூர்த்தி எனும் பெயரில் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆம் திகதி பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டையே பறிமுதல் செய்யுமாறு நீதவான் அன்று உத்தரவிட்டிருந்தார்.
அவருக்கு எதிரான வழக்கு ஜுன் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஓகஸ்ட் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே வழக்கை நேற்று 19 ஆம் திகதி வரையிலும் நீதவான் ஒத்திவைத்தார்.
சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஜுன் மாதம் 20 ஆம் திகதி கார்டிஃப் நகர மைதானத்தில் நடைபெற்றது.
இதன்போது மைதானத்திற்குள் புலிக்கொடியுடன் ஓடியவரையே கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்ட திறந்த பிடியாணையை ஜுலை 3 ஆம் திகதி புதன்கிழமை பிறப்பித்தார்.
இந்நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வருகைதந்தால் கைது செய்யுமாறு ஜுன் 15 ஆம் திகதி திங்கட்கிழமை உத்தரவிட்ட நீதவான் சிவப்பு அறிவிப்பையும் விடுத்திருந்தார்.
புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் ஓடி குழப்பம் விளைவித்த லோகேஸ்வரின் மணிமாரன்என்பவருக்கே இவ்வாறு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான பா.உதயணன் பிரித்தானியாவில் வாழ்பவர் என்பதுடன் அவருக்கு நிரந்த வதிவிடம் இல்லை எனவே, இவரை விடுதலை செய்தால் அவரை பிணையில் விடக்கூடாதென சிஐ.டியினர் கோரிநின்றனர்.
இதனையடுத்து இரண்டாவது சந்தேகநபரான பா.உதயணன் மற்றும் ஆ. குலதீபம் ஆகியோரை எதிர்வரும் 02 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் வழக்கையும் அன்றைய தினத்திற்கே ஒத்திவைத்துள்ளார்.
Average Rating