பூங்காவும் தமிழ் பெரியாரும் கவனிப்பாரற்ற நிலையில்.. கூட்டமைப்பு வேட்பாளர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் கவனத்திற்கு?
வவுனியா கோயில்குள பூங்காவும் தமிழ் பெரியாரும் கவனிப்பாரற்ற நிலையில்..
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்களில் ஒருவரான முன்னாள் வவுனியா நகரசபையின் உப தலைவர் கனகரட்னம் சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் கவனத்திற்கு?
-கே.வாசு-
வவுனியா நகரில் இருந்து 1.5கிலோமீற்றர் தொலைவிலுள்ள கோயில்குளம் சிவன் ஆலயத்திற்கு முன்னாள் நகரசபைக்கு சொந்தமான சிறுவர் பூங்கா கைவிடப்பட்டநிலையில் உள்ளது. கோயில் குளம் பிரதான வீதியில் காணப்படும் இப் பூங்காவை கோயில்குளம், தெற்கிலுப்பைக்குளம், சமனங்குளம், எல்லப்பர்மருதங்குளம், வெளிக்குளம், ஆசிகுளம், சிதம்பரபுரம் என அவ் வீதியை மையமாக கொண்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களும் சிறுவர்களும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக எந்தவிதமான பராமரிப்பும் இன்றி இப் பூங்கா காணப்படுவதனால் அதனை பயன்படுத்த முடியாதுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப் பூங்காவில் 1999 ஆம் ஆண்டு நகரசபையை நிர்வகித்த புளொட் அமைப்பினரால் தமிழ் வளர்த்த இளங்கோ அடிகளின் சிலையும் நிறுவப்பட்டு நகரசபை உபதரலவர் க.சந்திரகுலசிங்கத்தால் திறந்தும் வைக்கப்பட்டதுடன், பூங்காவின் ஒரு பகுதியில் தாய்சேய்பராமரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டது. இதன்காரணமாக மக்கள் தினமும் வந்து செல்லக் கூடிய முக்கிய பூங்காவாக இது விளங்கியது.
இது தொடர்பாக கோயில்குளத்தைச் சேர்ந்த என்.வரதன் கூறுகையில், இந்த பூங்கா 1999ல இருந்து நல்லா இருந்தீச்சு. பிறகு இவங்க கனிக்கேலே. இன்ரைக்கு நாலு வருசமா இப்படி தான் கிடக்கு. என்ர பிளையல் பக்கத்த பூங்கா இருந்தும் மரத்தில ஏறி தான் விளையாடுதுகள். அப்படி மோசமா இந்த சிறுவர் பூங்கா இருக்கு என்றார்.
இப் பூங்காவில் நிறுவர்களுக்கான ஏணி, ஊஞ்சல் ராட்டினம் என்பன இருக்கின்ற போதும் அவை பயன்படுத்தக் கூடிய நிலையில் காணப்படவில்லை. பூங்கா வளவில் பற்றைகளும் முட்புதர்களும் பாதினீயச் செடிகளுமே பரவலாக காணப்படுகின்றது. இதனால் பூங்கா வளவுக்குள் கூட சிறுவர்கள் செல்வதற்கு அஞ்சும் நிலை காணப்படுகிறது.
அப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.நேசன் கூறுகையில், எங்கட அடையாளங்களும் வரலாறுகளும் கலாசாரமும் திட்டமிட்டு அரசால் அழிக்கப்படுது என்று ஊப் எல்லாம் சிலர் கத்தி திரிறாங்க. ஆனா தங்களால் பராமரிக்க வேண்டிய தமிழ் பெரியார் சிலை இஞ்ச இருக்கிற நிலையை இவர்கள் பார்த்ததேயில்லை. இருக்கிற அடையாளத்தையாவது பாதுகாக்கனும் என்று இந்த யூசி காரங்களுக்கு நாலுவருசமா தெரியல. என கொட்டித் தீர்த்தார்.
இது தவிர, இப் பூங்காவில் உள்ள கிணறும் பராமரிப்பு இன்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் பூங்காவுடன் இணைந்து காணப்படுகின்ற தாய்சேய் பராமரிப்பு நிலையத்திற்க வருபவர்கள் கூட நீரை பெற்றுக் கொள்வதில் பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றனர்.
ஒரு பிரதேசத்தில் ஆரோக்கியமான இளைய சமூதாயத்தை உருவாக்குவதில் சிறுவர் பூங்காக்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இதன் காரணமாகவே ஒவ்வொரு பிரதேசத்திலும் சிறுவர் பூங்காக்கள் அமைக்கப்பட்டு அவை சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வவுனியாவில் நகரை அண்டிய பகுதிகளில் நான்கு சிறுவர் பூங்காக்கள் உள்ள போதும் அவற்றின் இன்றைய நிலை சிறுவர்களின் எதிர்காலத்தில் எமது சமூகம் எவ்வளவு தூரம் அக்கறையுடன் செயற்படுகின்றது என்பதை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.
இது தொடர்பில் எம்.கனகராணி இவ்வாறு கூறுகிறார். இப் பூங்காவை திருத்தி தாங்கா. இது இப்படி இருக்கிறதால இங்ச இருக்கிற சின்னனுகள் பாதிக்கபடுது. சினிமா அது இது என்று கூடாத பழக்கவழக்கங்களை பழகுறாங்க என்று சொல்லிடம் ஆனா திருத்துறதா கானேல .
வவுனியா நகரில் உள்ள பிரதான சிறுவர் பூங்கா, குருமன்காட்டில் உள்ள சிறுவர் பூங்கா, கோயில்குள சிறுவர் பூங்கா என்பன இன்று பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. குடியிருப்பில் உள்ள சிறுவர் பூங்கா குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கத்தால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றது. வவுனியா நகரசபைக்கு சொந்தமான மூன்று சிறுவர் பூங்காக்களும் கைவிடப்பட்டே உள்ளன. இதனால் பல சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சில விபரிதமான விரும்பத்தகாத விளைவுகள், குற்றச் செயல்கள் என்பன இடம்பெறுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.
எனவே, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் சிறுவர்களின் எதிர்காலத்திற்கு என்ன செய்யப் போகிறார்கள்? என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
கே.வாசு-
Average Rating