‘ஈழ உணர்வு காதல்’ நமக்கு எப்படி வந்ததென்று உங்களுக்கு தெரியுமா? (இது எப்படி இருக்கு?) –கி.பாஸ்கரன்-சுவிஸ்-
ஒரு தலைக்காதல், ரகசிய காதல், பொய்க் காதல், மெய்க்காதல், கள்ளக்காதல், கண்டதும் காதல், கடிதக் காதல், பேஸ்புக் காதல், ரெலிபோன் காதல் … என பல வகையான ‘காதல்’ களை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ‘ஈழ உணர்வுக் காதல்’ பற்றி கேள்விப்ட்டிருக்கிறீர்களா?
முதன்முதலாக ‘ஈழ உணர்வுக் காதல்’ என்றொரு காதல் அறிமுகமாகி உள்ளதுங்கோ.. அதென்ன ‘ஈழ உணர்வுக் காதல்’? முதலில் காதலுக்கும் ஈழத்துக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது என யோசிக்க வேண்டாம். சம்பந்தா, சம்பந்தா இல்லாதவைகளும், சம்பந்தா சம்பந்தா இல்லாதவர்களும் தானே, நமது இனத்தையும், நமது நாட்டையும் சம்பந்தப்படுத்தி பிழைக்கின்றார்கள். அதைவிடுத்து..,
‘ஈழ உணர்வுக் காதல்’ என்றால்… அதாவது.., இருவர் ஈழ உணர்வு மூலம் ஈர்க்கப்பட்டு காதலாகி கசிந்துருகி கொண்ட காதல் தான் ‘ ஈழ உணர்வுக் காதல் ’. (தமிழீழக் காதல் என்பது வேறு ஈழக்காதல் என்பது வேறு. இரண்டையும் நீங்கள் ஒன்றாக போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.) ஈழ உணர்வு காதல் ஈழத்தில் உருவாகவில்லை. மாறாக ஈழ தேசத்துக்கு பக்கத்தில் உள்ள தமிழகத்தில் மலர்ந்துள்ளது.
இதில் முக்கியமான விடயம் என்னவெனில் ‘ஈழ உணர்வுக் காதல்’ கொண்டவர்கள் இருவரும் ஈழத்து வாசிகள் அல்ல. ஈழத்து வாசிகள் அல்லாதவர்களுக்கு எப்படி ‘ஈழ உணர்வுக் காதல்’ வந்தது என்று மண்டையை போட்டு பெரிதாக உடைக்க வேண்டாம். படிப்படியாக சொல்லுவோம்…
காதல் என்றால் பொதுவாக ‘அன்பு’ என்று தான் அர்த்தமாகும். ஆனால் ஒரு இளஞனுக்கும் ஒரு யுவதிக்குமிடையே பிறக்கின்ற காதல் (ஆசை) என்பது அன்பின் அடிப்படையில் கொள்ளப்படுவதல்ல. காமத்தின் உணர்வினால் தூண்டப்பட்டு அல்லது ஈர்க்கப்பட்டு ‘கலவி’ கொள்வதற்காக ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கொள்ளுகின்ற காதல் (ஆசைப்படுவது) என்பது வேறு.
ஆனால் ‘ஈழ உணர்வுக் காதல்’ என்பது மேற்கூறிய அன்பு, காமம் போன்றவற்றுக்கு அப்பால் பட்டது. அதாவது ஈழ உணர்வாளர்களை (குறிப்பாக புலம்பெயர் தேசத்து ஈழ உணர்வாளர்களை) எப்படி எமாற்றி பிழைக்கலாம் என இருவர் ஒன்றாக யோசித்து (போலியாக ஈழ உணர்வால் சேர்ந்ததாக ) இணைந்தது தான் இந்த ஈழ உணர்வுக் காதலாகும்.
இந்த மாதிரியான கூட்டுக் காதல் இணைப்பு தான் கூட்டமைப்பு கட்சியினரிடையே நிலவுகின்றது. அதாவது.., கூட்டாக பல கட்சிகள் ஒன்று சேர்ந்து எப்படி தமிழர்களின் வாக்குகளை கொள்ளையடிக்கலாம்? என்ற ரீதியில் ஏற்படுத்தப்பட்ட கூட்டுக் காதல் ஓப்பந்த இணைப்பு தான் இந்த T.N.A ஆகும். இந்தமாதிரியான போலிக் காதல்கள் கனகாலத்துக்கு நிலைத்து நிற்காது.
‘ஈழக்காதல் ’ ஈழ உணர்வாளர்கள் கொடுக்கும் பணத்தில் தங்கியுள்ளது.
கூட்டமைப்பினர்கள் கொண்டுள்ள ‘கூட்டுக் காதல்’ தமிழ் மக்கள் அளிக்கும் வாக்கு பலத்தில் தங்கியுள்ளது.
ஈழத்திற்கும் ஈழ உணர்வு காதலுக்கும் எதாவது சம்பந்தமுண்டா..?
நமக்கு தெரிந்த வரலாற்றுப்படி…, 60வருடத்துக்கு மேலாக ஈழத்தை முன்னகர்த்தி எவ்வளவோ விடயங்கள் நடந்திருக்கு…., உதாரணமாக… ஈழத்தை இரண்டாக பிரிக்க 30வருடங்களாக ஆயுதப் போராட்டம் நடந்திருக்கின்றது. ஈழத்தை ஆக்கிரமிக்க 87 ஆம் ஆண்டு இந்திய படைகள் வந்து தோல்வி கண்டு போயிருக்கிறார்கள். ஈழப் போராட்டத்தின் மூலம் பல இலட்சக்கணக்கான உயிர்கள் பலியாகியிருக்கின்றன. பல இலட்சக்கணக்கான உடமைகள் அழிக்கப்பட்டு, பல இலட்சக்கணகான மக்கள் அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள்
அதே நேரம்.., பல இலட்ச்சக்கணக்கான மக்கள் வெளிநாடுகளுக்கு வந்து ராஜபோக வாழ்க்கையையும் தேடிக் கொண்டார்கள். ஈழப் போராட்டத்தை வைத்து பல இலட்சக்கணகான பணங்கள் ஈட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் இன்று இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியத்துவம் கொடுத்து, பெரிய விடயமாக கருதப்பட்டு ஊடக செய்தியாக வெளிவந்த வந்த விடயம் என்னவென்றால் ‘ ஈழ உணர்வு கொண்ட இருவருக்கு காதல் (போலிகள் போடும் வேசம்) வந்து முத்தி போய்’ கல்யாண காட்சி நடக்கப் போகின்றதாம்.
இதுதானுங்கோ இன்றைய முக்கிய செய்தி.
அதுவும்…. ஈழத்தில் பிறக்காத, ஈழத்தில் வளராத.., ஈழத்தில் வாழாத.., ஈழத்தில் படிக்காத, ஈழ வாசனையே அறியாத, ஈழத்தில் உறவினர்கள் கூட யாருமில்லாத, ஈழத்து பனம்பழத்தைக் கூட சூப்பாத, ஈழப் போராட்டம் எதிலுமே பங்குபற்றாத இருவருக்கு ‘ஈழ உணர்வுக் காதல்’ எப்படி வந்தது.?
இதில புதினம் ஒன்றுமில்லை… ., கோயில் தொடங்குவதிலிருந்து.., பள்ளிகூடம் நடத்துவதிலிருந்து…, நட்சத்திர விழா நடத்துவதிலிருந்து.., உண்டியல் குலுக்கி காசு வாங்குவதிலிருந்து.., கொத்துரெட்டி விற்பணை செய்வதிலிருந்து.., அகதிகளுக்கு காசு சேர்ப்பதிலிருந்து.. ஈழ உணர்வை சாட்டி தான் எல்லாவகையான வியாபாரமும் (பிழைப்பும்) நடத்தப்படுகின்றது.
அந்த வகையான ஒரு பிழைப்பு சமாச்சாரம் தான்…இதுவும். ஈழ தமிழர்களின் இரத்தத்தை உறிஞ்சி பிழைக்கும் ஒட்டுண்ணிகள், தங்களுடைய கள்ளக்காதலை அறிமுகப்படுத்த கண்டுபிடித்த தந்திரம் தான் தங்களுக்கு ‘ஈழ உணர்வு மூலம் காதல்’ வந்ததாக கூறும் போலிக் கதைகள்.
போலிகள் என்னதான் போலி வேசங்கள் போட்டாலும் எதையுமே புரிந்து கொள்ளாத ‘கறவை மாடுகள்’ இருக்கும் வரை ‘ஈழ உணர்வு ஊட்டி’ பாலை தாராளமாக கறந்து கொள்ளலாம்.
என்ன அதிசயமோ தெரியவில்லை ஈழத்தில் பிறந்தவர்களை விட ஈழத்திற்கு வெளியில் பிறந்தவர்களுக்கு தான் ஈழத்தின் மேல் அதீத காதல்.. அதுவும் ஈழக் காதலர்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் மேல் தான் அதீத பாசம்.. என்னவென்று தெரியவில்லை.
சரி.., ஈழ உணர்வு காதலர்கள் யார் என்று உங்களுக்கு தெரியுமோ? அதுதான் நம்மட புலம்பெயர் புலியாதரவாளர்களின் தற்போதைய தலைவரும், அண்ணணும், தம்பியும், மாமனுமாகிய சீமான் அவர்களும் வருங்கால அண்ணி சீமாட்டி கயலவிழி ஆகியோர் தான் இந்த ஈழ உணர்வு காதலர்கள். ஈழ உணர்வால் காதல் வயப்பட்டு இப்போ திருமணம் முடிக்கும் கட்டத்தை அடைந்துள்ளர்கள். இவர்கள் தான் வருங்காலத்தில் ஈழ சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி கட்டிக் காக்க போகும் அரச குடும்பத்தினர்கள்.
கல்யாணம் முடித்தவுடன்… (ஒரு வருடத்துக்கு மேலாக குடும்பம் நடத்துகிறார்கள் என்பது இங்கு குறிப்பிடதக்கது) அனேகமாக ஏழெட்டு மாதத்தில் ஈழத்தை (குழந்தையை) பிரசவித்து புலம்பெயர் புலியாதரவாளர்களின் கையில் தவழ விட்டாலும் ஆச்சரியமில்லை..
ஆண்குழுந்தை பிறந்தால் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பெயரையும் மகள் பிறந்தால் மதிவதனி அல்லது துவாரகா என்கின்ற பெயரை வைக்க தீர்மானித்துள்ளார்களாம்.. அதேநேரம் தமிழ் ஈழவன், தமிழ் ஈழத்தி என்ற பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாம்.
அண்ணன் சீமான் சொல்கிறார்.. அண்ணி கயலுக்கு சிறுவயது முதலே ஈழக் காதல் இருந்ததாம். (இரண்டு, மூன்று வயதிலேயே அண்ணிக்கு ஈழக் காதல் வந்திருக்குமோ?) தலைவரின் மகன் பாலகன் பாலச்சந்திரனின் படுகொலையை நினைத்து நினைத்து கயல்விழி கண்ணீர் விடாத நாளே இல்லையாம். எப்பொழுதுமே தன்னை போன்று தனது காதலி கயல்விழிக்கு தமிழ்ஈழ உணர்வு உடம்பு முழுக்க பெருக்கெடுத்து ஓடுகிறதாம் என்று சீமான் கூறியுள்ளர்.
மேலும் சீமான் கூறுகையில்… தான் தமிழீம் கிடைக்கும் வரை கல்யாணம் முடிப்பதில்லை என்ற கொள்கையில் தான் இருந்தாராம். பிரபாகரனும் ஆரம்பத்தில் இதே கொள்கையில் தான் இருந்து பின்பு மனம்மாறி கல்யாணம் முடித்ததாக நெடுமாறன் ஐயா சொல்லி, தன்னை வற்புறுத்தியதால் தான் கயலை கல்யாணம் முடிக்க முடிவெடுத்ததையடுத்து எனது பெற்றோர் மூலம் முறைப்படி கயல்விழியின் தாயை சந்தித்து பெண் கேட்டு திருமணம் செய்ய முடிவு செய்தோம்.
ஈழ உணர்வுதான் எங்கள் இருவரையும் இணைத்துள்ளது என்றார் சீமான்..
***ஒருவர் தான் விம்பியவரை காதலிப்பதோ, திருமணம் செய்வதோ அவர்கள் இருவரின் சொந்த விருப்பு வெறுப்பைப் பொறுத்தது. ஆயினும் இதுவரை காலமும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழீழப் பெண்ணையே திருமணம் செய்வேன் எனக் கூறி வந்து, சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் இன்னொருவர் மீது கொண்ட காதலினால் சீமான் திருமணம் செய்ததில் தவறில்லை..
ஆனால் தனது தவறை மறைக்க இருவருமே ஈழ உணர்வால் தான் காதலித்தோம், கட்டுண்டோம் என்று சப்பை கட்டுவது எந்த வகையில் நியாயம்????
எனக்குப் புரியவில்லை உங்களுக்கு ஏதும் புரிகிறதா??
(கனடாவில் உள்ள தமிழ் தெரியாத கனேடிய பொலிஸ்காரர்களுக்கு கூட சீமான்ர பொய் கதை புரியும். ஆனால் நம்மட விசிலடிச்சான் கூட்டங்களுக்கு புரியுமா?)
-கி.பாஸ்கரன்-சுவிஸ்- (THANKS… www.athirady.com )
Average Rating