மாகாண சபை தேர்தல்களில் அரசாங்கம் நல்ல பாடத்தினை படிக்கும் – கயந்த கருணாதிலக..!
ஜனாதிபதிக்கு அரசாங்கத்தை கொண்டு செல்ல ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருக்கின்ற போதிலும் ஆட்சி இருப்பினை தக்க வைத்துக் கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களே தேவைப்படுகின்றனர். அரசாங்கத்தில் இருப்பவர்கள் இன்று ஒருவர் மீது ஒருவர் குற்றங்களை சுமத்தி விட்டு தம்மை நியாயப்படுத்தும் செயற்பாடே காணப்படுகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக குறிப்பிட்டார்.
மேலும் மக்களின் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டிய இத் தருணத்தில் கட்சி விட்டு கட்சிக்கு தாவும் அரசியல்வாதிகளினால் மக்களின் நம்பிக்கையினையும் எதிர்பார்ப்பினையும் இழக்க நேரிடுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இராஜகிரியவில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தில் இருக்கும் அங்கத்தவர்கள் மீது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே நம்பிக்கை இல்லாது போய் விட்டது. அதன் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை நம்பி அரசாங்கம் தேர்தல் களத்தில் குதிக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஒருவர் இருவர் அரசாங்கத்திற்கு தாவுவதால் ஐக்கிய தேசியக் கட்சி கவிழ்ந்து விடப் போவதில்லை. அதேபோன்று தயாசிறி அரசாங்கத்திற்கு போனதால் நாட்டின் பிரச்சினைகளோ மக்கள் படும் கஷ்டமோ தீரப்போவதும் இல்லை.
தற்போது தேர்தல்களின் காரணமாக அரசாங்கம் மக்களிடையே ஆதரவினைப் பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலையில் பொருட்களின் விலை குறைப்புக்களை செய்கின்றது. ஆனால் தேர்தல் முடிவடைந்து ஒருவார காலத்திற்குள் மீண்டும் பொருட்களின் விலை உயர்த்தப்படும்.
மேலும் இன்று நாட்டில் காணப்படும் மக்களின் பிரதான பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திடம் இருந்தும் இவற்றை பொருட்படுத்தாது ஆட்சி நடாத்திக் கொண்டிருக்கின்றனர். தேர்தல் காலங்களில் மட்டும் மக்களுக்கு நிவாரணங்கள் கொடுப்பதால் மக்களின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை.
அவற்றினை ஈடு செய்வதற்கு மக்களின் பணமே சுரண்டப்படும். இலங்கையின் எதிர்காலத்தில் சந்ததியினர் கடன்காரர்களாக பிறக்கின்ற துர்ப்பாக்கிய நிலைமைக்கு இன்று அரசாங்கம் நாட்டைக் கொண்டு வந்துள்ளது.இன்று நாட்டில் பிரதானமான அரச நிறுவனங்கள் நஷ்டத்தினை எதிர்நோக்கியுள்ளன. இலங்கை போக்குவரத்து சபை, மின்சார சபை, மிகின் லங்கா சேவை மற்றும் ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் என்பன நாட்டின் பிரதான பங்கினை வகிப்பதாக அரசாங்கம் கூறிய போதிலும் இன்று அவை 13 ஆயிரத்து 200 கோடி ரூபாய்கள் நஷ்டமடைந்துள்ளன.
மக்கள் இன்று அரசாங்கத்தின் கொடுமைகளையும் பொய்களையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இனியும் இந்த மோசமான ஆட்சியில் மக்கள் வாழவும் விரும்பவில்லை. இம்முறை மூன்று மாகாண சபைத் தேர்தல்களிலும் மக்களின் மனதில் உள்ள வெறுப்பையும் கோபத்தினையும் நிச்சயம் வெளிப்படுத்துவார்கள்.
இம்முறை தேர்தலில் மக்களிடம் இருந்து அரசாங்கம் நல்ல பாடத்தினை படித்துக்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.
Average Rating