விக்னேஸ்வரன் றோவின் முக்கிய புள்ளி: தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியம் குற்றச்சாட்டு..!!
அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டாக விரித்துள்ள வலையில் இலங்கை விழுந்து விடக் கூடாது, கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரான சி. வி. விக்கினேஸ்வரன் றோவின் முக்கிய புள்ளியாவார். ஆகவே பிரிவினைவாத அதிகாரங்கள் ஓரம் கட்டப்படும்வரை வட மாகாண சபை தேர்தலை நடத்தக் கூடாது என வலியுறுத்தியும் மேலும் 17 கோரிக்கைகளை முன் வைத்தும் தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியம் இந்திய தூதரகம் முன்பாக நேற்று சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்தியாவிற்கு அமெரிக்காவை விட இலங்கையின் நட்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை இந்திய பிரதமர் மன்மோகன்சிங் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்து பலனில்லை. எவ்வாறாயினும் இந்தியாவின் பிரிவினைவாத தேவைகளை இலங்கையில் நிறைவேற்ற ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். உடனடியாக இந்தியா இலங்கைக்கு எதிராக கூட்டுச்சதியில் ஈடுபடுவதை நிறுத்தாவிடின் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவ் ஒன்றியம் எச்சரித்துள்ளது.
இந்திய தூதரகத்திற்கு முன்பாக நேற்று தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியம் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டது. இதில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முசமில் மற்றும் தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் பெங்கழலே நாலகதேரர் உட்பட பெரும் தொகையானோர் இந்திய தூதரகத்திற்கு முன்பதாக வீதியை மறித்து அமர்ந்துகொண்டு பதாதைகளை ஏந்திய வண்ணம் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது உரையாற்றிய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கூறுகையில்,
பிரித்தானியாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அன்று மகாத்மா காந்தி சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தினார். இன்று நாங்கள் இந்தியாவின் இலங்கை மீதான ஆக்கிரமிப்பை கண்டித்து இந்திய தூதரகம் முன்பதாக சத்தியாக் கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கின்றோம்.
1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி இந்தியா பலவந்தமாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மேற்கொண்டு ஆக்கிரமிப்பை ஆரம்பித்தது.
பின்னர் இராணுவத்தை அனுப்பியது, மாத்திரமன்றி பிரபாகரணை உருவாக்கி ஆயுத உதவிகளை வழங்கி இலங்கைக்கு எதிராக போருக்கு அனுப்பியது. இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்துகொண்டு பிரிவினைவாத சக்திகளுக்கு துணை போய் இலங்கையின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு என்பவற்றை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதனை அனுமதிக்க முடியாது.
இலங்கை தமிழர்களின் உரிமை பிரச்சினைகளைக் காரணம் காட்டி தலையீடுகளை மேற்கொள்வதை மன்மோகன் சிங் தலைமையிலான அரசு நிறுத்த வேண்டும். அதே போன்ற பிரிவினைவாத அதிகாரங்களை ஓரம் கட்டும் வரை வடக்கில் தேர்தலை அரசாங்கம் நடத்தக் கூடாது எனக் கூறினார்.
பெங்கழல நாலக தேரர்
இந்தியாவிற்கு புத்திக்கெட்டுப் போய் உள்ளது. ஆகலே நல்ல புத்தியை இந்தியாவிற்கு கொடுக்க வேண்டுமென இறைவனை வலியுறுத்தி பிரார்த்திப்போம். இந்தியாவின் நட்பால் இலங்கை பெரும் நெருக்கடிகளையே சந்தித்தது. எனவே தொடர்ந்தும் இந்தியா இலங்கைக்கு எதிராக செயற்படுமேயானால் தீர்க்கமான முடிவுகளை எடுக்க அரசாங்கம் பின்னிற்க கூடாது.
அதேபோன்று அமெரிக்காவின் நட்பை விட இந்தியாவிற்கு இலங்கை முக்கியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உள்நாட்டில் உள்ள இடதுசாரி கட்சிகளும் ஐ. தே. க.வும் இந்தியாவிற்கு உதவி செய்வதைப் போன்று 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக்களை வெளியிடக் கூடாது என்று பெங்கழல நாலக தேரர் கூறினார்
Average Rating