நான் கமல்ஹாசனின் மகளல்ல, டாக்டர் ராமச்சந்திரனின் மகள் : ஸ்ருதி ஹாசன் (PHOTOS)
சிறுவயதில் தான் நடிகர் கமல்ஹாசனின் மகள் என்று வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாமல் எளிமையாக வாழ்ந்ததாக நடிகை ஸ்ருதி ஹாசன் கூறுகிறார்.
அத்துடன் சிலரிடம் தான் கமல்ஹாசனின் மகள் அல்ல, டாக்டர் ராமச்சந்திரன் என்பவரின் மகள் எனக் கூறிக்கொண்டதாகவும் அவர் செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார்.
தனது இளமைக்காலம், சித்தார்த், தனுஷுடனான வதந்திகள், தனது திருமண நம்பிக்கைகள் குறித்து ஸ்ருதிஹாசன் அளித்த சூடான செவ்வி இது:
Q : கெமராவுக்கு முன்னால் நிற்கும்போது வெட்கப்படாதிருப்பதற்கு கற்றுக்கொள்வதாக கூறுகிறீர்கள். கமல் ஹாசனின் மகள் என்ற வகையில் அது உங்களுக்கு பெரிய கஷ்டமானதல்லதானே?
ஆனால், அப்பாவும் அம்மாவும் (நடிகை சரிகா) ஒருபோதும் எனக்கு சாதகமாக எதையும் மாற்றி அமைக்கவில்லை. நான் எதையும் செய்ய விரும்பினால் நானாகவே செய்துகொள்ள வேண்டும் என்பது போன்றே எப்போதும் அவர்கள் இருந்தார்கள். அப்போதுதான் உங்கள் பயணம் அர்த்தபூர்வமாக இருக்கும். ஆம். அவர்கள் எனக்கு அருகில் இருந்தார்கள்தான். ஆனால் எதையும் நானே செய்தேன். தோல்விகளும் என்னுடையவை, வெற்றிகளும் முற்றிலும் என்னுடையவை.
Q : கமல் ஹாசனின் மகளாக வளர்வது எப்படியிருந்தது?
எனது நண்பிகளுக்கு அவரை ஸ்ருதியின் தந்தை அல்லது கமல் அங்கிள் என்றுதான் தெரியும். இப்போதுகூட அவர்கள் “ஸ்ருதியின் டாடியின் படம் வெளியாகிவிட்டது” எனக் கூறுவார்கள். அந்தளவுக்கு எமது பாடசாலைக் காலம் எளிமையாக இருந்தது. நாங்கள் பாடசாலை பஸ்ஸிலும் ஆட்டோவிலும் தான் பாடசாலைக்கு செல்ல வேண்டும் என எமது தாயார் வலியுறுத்துவார். நாம் சாதாரண பிள்ளைப் பருவத்தையே கொண்டிருந்தோம்.
உண்மையில் நான் வேறொருவரின் மகள் போன்று காட்டிக்கொள்ள முயன்றேன். அவர்கள் என்னிடம் “நீ கமல் ஹாசனின் மகள் எனக் கூறுவார்கள். “இல்லை, நான் டாக்டர் ராமச்சந்திரனின் மகள்” என நான் கூறுவேன்.
நான் என்னை பூஜா ராமச்சந்திரன் எனக் கூறிக்கொண்டேன். அவர் (கமல்) எனது தந்தை என யாரும் அறிந்துகொள்வதை நான் விரும்பவில்லை. எனது தந்தையின் பணிகள் குறித்து நான் பெருமையடைகிறேன். ஆனால் அது எனது வழியில் தானாக வந்தவை. உங்கள் அம்மா மிக அழகு என அனைவரும் குறிப்பாக தந்தையின் நண்பர்கள் கூறுவார்கள்.
ஆனால், அவர் (அம்மா) அமைதியாக இருப்பார். மீன் கறி, இறால் கறி சமைத்து தனது நண்பிகளுக்கு பறிமாறுவார். வழக்கமான மேல்தட்டு மத்திய வர்க்க சூழ்நிலையிலேயே நாம் வளர்ந்தோம்.
Q : உங்கள் தந்தை ஒரு சுப்பர் ஸ்டார் என நீங்கள் எப்போது உணர்ந்தீர்கள்?
அவரின் திரைப்பட விழாக்களுக்கு நாம் போகும்போதுதான் அதை உணர்ந்தேன். அவரின் மீது வெறிகொண்ட ரசிகர்கள் பாய்வார்கள். அப்போது எனது தந்தை முற்றிலும் வித்தியாசமானவராக இருப்பார். ‘ஓ இது அவரின் மற்ற பக்கமோ” என நான் எண்ணுவேன்.
Q : ஒரு குழந்தையாக நீங்கள் அச்சம்பவங்களால் அச்சமடைந்தீர்களா?
இல்லை. நான் அதை விரும்பினேன். நான் 6 வயதாக இருந்தபோது அவரின்படமொன்றில் பாடினேன். பின்னர் சிங்கப்பூருக்கு சென்று முதல் தடவையாக மேடையில் பாடினேன். எங்கே ஸ்ருதி என அப்பாவும் அம்மாவும் தேடியபோது நான் மெஜிக் பொக்ஸ் ஒன்றிலிருந்து வெளியே வந்தேன்.
நான் மேடையில் தோன்றியபோது கமல்ஹாசனின் மகள் என்பதால் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். ஆனால், பின்னர் நான் பாடி முடித்தவுடன் மீண்டும் ஆர்ப்பரித்தனர். அது எனக்கானது. ‘வி லவ் யூ’ என ரசிகர்கள் கூறினார்கள். அந்த மாதிரியான பாராட்டுகள் உங்களை ஒரு ரொக் நட்சத்திரம் போன்று உணரச் செய்யும்.
Q : உங்கள் பெற்றோரின் பிரிவினால் அதிர்ச்சியடைந்தீர்களா?
இல்லை. அவர்கள் இணைந்து மகிழ்ச்சியாக இருக்க முடியாவிட்டால் மகிழ்ச்சியாக பிரிவது நல்லது. தமது பெற்றோர் பிரிவதை பார்த்த அனைத்து பிள்ளைகளும் இதை கூறுவார்கள். அவர்கள் தமதுசொந்த வாழ்க்கையை வாழ்ந்தார்கள். தமக்கு விருப்பமானதை செய்தார்கள். ஆனால் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்வரை அக் ஷராவுக்கும் (தங்கை) எனக்கும் மகிழ்ச்சிதான்.
Q : உங்கள் சொந்த வாழ்க்கையில் இப்போது என்ன நடக்கிறது?
ஒன்றுமில்லை. ஸீரோ. கைவசம் 6 படங்கள் உள்ள நிலையில் உங்கள் நேர அட்டவணைக்கு இசைந்து செயற்படக்கூடிய ஒருவரை தேட வேண்டியிருக்கும். நான் வேலையற்ற ஒரு நபரை தேட வேண்டும். ஆனால், வேலையற்ற ஆணைவிட குறைந்த ஈர்ப்புடைய விடயம் எதுவுமில்லை. நான் கடுமையாக உழைத்து சாதிப்பவர்களை விரும்புகிறேன்.
Q : சித்தார்த்துடன் லைவ் இன் முறையில் ஒன்றாக வசிப்பதாக கூறப்படுவது குறித்து?
எனக்குத் தெரிந்தவரை அப்படி நடக்கவில்லை.
Q : இந்நாட்களில் நீங்கள் தனுஷுடன் இணைத்து பேசப்படுகிறீர்கள்?
10,000 வதந்திகள் உள்ளமை எனக்குத் தெரியும். என்னைப் பொறுத்தவரை நான் யாருடனும் தொடர்புபடுவது அரிது. தனுஷ் ஒரு முக்கியமான நண்பர். ஏனெனில். “3” படத்தில் அப்பாத்திரத்தில் நான் நடிக்க முடியும் என எவரும் எண்ணாதபோது, எனக்கு ஆதரவாக நின்று அதை என்னால் செய்ய முடியும் எனக் கூறியவர் தனுஷ். எந்த வேலையில் உள்ள எவருக்கும். அவர்கள் மீது நம்பிக்கை வைப்பவர்கள் அவசியம். அவருக்கு நான் மிக கடமைப்பட்டுள்ளேன்.
அத்துடன் நாம் நட்பாக பழகுகிறோம். பேசுவதற்கு எமக்கு அதிக விடயங்கள் உள்ளன. ஆனால் நான் அதையெல்லாம் கூறி மக்களிடம் நியாயப்படுத்திக்கொண்டிருக்கப் போவதில்லை. “எனது பின்புறத்தில் ஒரு மைக்ரோ சிப் ஒன்றை பொருத்தி, என்னைப்பின் தொடருங்கள், அப்போது நீங்கள் உண்மையை உணர்ந்துகொள்ளலாம்” என நான் கூறப்போவதில்லை. இத்துறையில் அவர் எனது மிகச் சிறந்த நண்பர். கலை ரீதியாகவும் அவர் எனக்கு உதவியுள்ளார். எம்மைப்பற்றி மக்கள் அபத்தமாக பேசுகிறார்கள் என்பதற்காக, அவற்றை (அவர்செய்த உதவிகளை) நான் குப்பைக்கூடையில் எறிந்துவிடப்போவதில்லை.
Q : திருமணம் குறித்து நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்?
எதையும் எண்ணவில்லை. திருமணத்துக்கு முன் குழந்தைகளை பெற விரும்புகிறேன். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் குழந்தைகளை விரும்புகிறேன்.
Q : யாருடனும் இணைந்து இருப்பது குறித்து?
எனக்குத் தெரியவில்லை. நான் சுதந்திரமானவள். யாருக்கும் கேர்ள் பிரெண்டாக நான் இருப்பது கடினம் என எண்ணுகிறேன். ஏனெனில் எப்போதும் எனது சொந்தப் பயணத்தில் இருப்பேன். நான் ஒரு கலைஞர். நான் எப்போதும் எனது தலையிலுள்ள விடயங்கள் குறித்து யோசித்துக்கொண்டிருப்பேன். அது காண்பதற்கு அரிதான ஒரு நல்ல கனிவான நபரை குழப்பி விடும்.
Q : உங்கள் கடந்த கால, அனுபவங்கள் காரணமாக புதிய உறவு குறித்து தயங்குகிறீர்களா?
நான் எல்லாம் நன்மைக்கே என எண்ணுபவள். ஒரு திரைப்படம் நன்றாக ஓடாவிட்டால் அடுத்த படமும் ஓடாது என அர்த்தமல்ல. எனது வேலைக்காக எனது உறவை சமரசம் செய்துகொள்வேன். குறிப்பாக தற்போதைய கட்டத்தில். எனது உறவு எனது வேலைக்கு குறுக்கீடாக வந்தால் அதை விட்டுவிடுவதற்கு இரு தடவை யோசிக்க மாட்டேன். சிலவேளை வயதாகும்போது நான் மாறக்கூடும். ஆனால் இப்போது எனது தொழிற்சார் வாழ்க்கைக்கு குறுக்காக ஏதேனும் வந்தால் அதை விட்டுவிடுவேன்.
Average Rating